Saturday, 6 September 2025

மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்

 *மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்* ஜி.நாகராஜன்.


இவ்வரிகளில் சிலருக்கு ஒவ்வாம்மை உண்டு.

இராயிரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே


தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்

அழுதகண் ணீரும் அனைத்து.   (௮௱௨௰௮ - 828)


அய்யன் திருவள்ளுவர் எழுதி இருக்கிறார் எனில்

எந்த தொழுத கையை நம்பி துரோகத்தை சந்தித்து துடிதுடித்து எழுதினாரோ,  மனிதன் மகத்தான சல்லிப்பயலாக இருந்திருக்கிறான்‌ என்பது உண்மையல்லவா?


தந்திரமாக மேலோட்டமாக ஒரு பழகும் முறையை வகுத்து கொள்வதொரு திறமையாக கருதப்படுகிறது இந்நாளில், அவர்கள் எல்லோருக்கும் நல்லவர்கள், எல்லோரும் அவர்களுக்கும் நல்லவர்கள். அவர்களுக்கு மனிதனின் மகத்தான சல்லித்தனம் புரிப்படாது அல்லது அதை விளங்கி கொள்ள விரும்புவதில்லை.


சிற்பம் செதுக்கும் சிற்பியை விட சிற்பத்தை நேசிப்பவன் எவருண்டு, பார்த்து பார்த்து செதுக்கும்போது கல்லுக்கு உணர்விருந்தால் வலிக்கிறது என்றே சொல்லும், சிற்பியை வெறுத்தே கொல்லும்...


இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பா ரிலானுங் கெடும். 


என்கிறார் அய்யன் திருவள்ளுவர். இது அரசனுக்கு மட்டுமல்ல நட்பு முதல் காதல் வரை பின்பற்றப்பட வேண்டிய ஒன்று.


இடித்துரைக்காதவனின் அன்பு எத்தகையது. இனிக்க பேசுவான், கொண்டாடுவான், மதிப்பான், கைதட்டுவான். பொறு யோசி நின்று நிதானித்து உற்று நோக்கு, காலத்தினால் நிற்கும் நன்மை என்ன செய்துள்ளான்...

அவங்வங்களுக்கு தெரியும் என்ற விட்டேத்தியான மேலோட்ட அன்பில் என்ன விளையும்? முதலில் அது அன்பா? வியாபார முறை அணுகல் அல்லவா அது.


இடித்தும், உடைத்தும், செப்பனிட்டும் வழிநடத்தும் அன்பே உன்னை சபையில் பெருமைக்கொள்ள செய்யும். பெருமைப்படுத்தும். அறைக்குள் அதட்டி அம்பலத்தில் அணி சேர்க்கும் உறவின் மேன்மையை உணராதவன் மகத்தான சல்லிப்பயல் இல்லையா


எப்போதும் கண்டிக்கும் தந்தை, மகனின் வெற்றியை கொண்டாடும் பேரன்பை ஒரு போதும் மகன்கள் அறிவதில்லை, தான் தந்தையாகும் வரை...


ஆனாலும், மனிதன்‌ ஒரு மகத்தான சல்லிப்பயல்...‌ என்பது உண்மையிலும் உண்மை.


ஒளியை தேடி போகாதே நீயே ஒளியாகு எனும் சொல் செவியேறாத போது, அதில் மறைந்து கிடக்கும் அன்பின் பேரொளி எப்படி புரியும்.


(ஒரு எ.கா மட்டுமே உடனே இசைஞானியை வைத்து ஒரு விவாதம் என்பது தலைப்பை நீர்த்துப் போகச் செய்யும்) இசைஞானி இளையராஜா ஏன் இறுகி ய முகமாய் பலருக்கும் காட்சியளிக்கிறார்.


துறை சார் ஆழறிவும், யாருக்கும் எட்டாத நுட்பமும், மனிதர்களின் மீதான அன்பையும், தன் திறமை மீது கொண்டிருக்கும்‌ அபார நம்பிக்கையையும் புரிந்துக்கொள்ளாத மனிதர்களிடமிருந்து விலகி நிற்கிறார். தான் சுவைத்த இசையை நம் மக்களும் சுவைக்க வேண்டும் என்ற பேராவல் மனிதர்களின் மீதான அன்பில்லையா?


மனம் இறுகி விலகிய அறிஞனின் வெளிப்பாடு உலகம் வியக்கும் சிம்ஃபொனி.‌ 


ஒரு அறிஞனின் சிந்தனையின் உயரத்தை, எண்ணங்களின் உயர்வை, சிற்பியென செதுக்குவது ஏனென்று உணராத மனிதர்கள், அதே வட்டத்தில் அதே உயரத்தில் நின்றுக்கொண்டு சிறு சிறு வெற்றியை கொண்டாடி கூடிக் களிப்பதே வாடிக்கை.


உண்மையாய் நேசிக்கும் மனமோ சதா உன்னை கண்காணிக்கும். காதலென்பது வெற்று உடல்சார் உறவன்று. இணைந்தே வளர ஊக்கமளிக்கும் உறவாக, எந்த உறவும் இருக்க வேண்டும் நட்போ, காதலோ, கல்யாணமோ, உடன் பிறந்தோரோ, மகவோ எங்கும் பரிபூரண பேரன்பு செப்பனிடும்...


ஆனால், மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்

ஆம் ! நான் தலைவி/ தலைவன் எனக்கென்று ஒரு கூட்டப்பட்ட கூட்டமொன்று உண்டு, அதில் நீயும் ஒரு அங்கமாய் இரு, கைதட்டு, தந்திரமாய் தன்னை புகழ வைத்து சிரிக்கும், அவையில் தானே முன்னென நிற்கும் அந்த தந்திர உறவை கொண்டாடி, உற்ற உன்னத உறவுகளை காயப்படுத்தும் மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல் இல்லையா?


பேரிடர் காலத்தில், தன்னையுமறியாமல், பயத்தில் உள்ளொளியாய் மறைந்துக் கிடக்கும் மனிதம் மேலெழுந்து விடும்போது மட்டும் உதவி கரம் நீட்டி விடுகிறான்.


அந்த ஆபத்தான சூழலிலும் கூட தன் முத்திரையை பதிக்க துடிக்கும் மனிதர்களும், அமைப்புகளும் உண்டு.


தான் தர்மவானாக இருப்பதற்காக பிச்சைக்காரர்களை முன்னேற விடாத மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல் இல்லையா?


அண்டை நாட்டின்‌ Intellectual Property Rights ஐ தன்னகப்படுத்திக் கொள்ளும் மனிதர்கள் அறமற்றவர்கள் எனில், சிந்திக்கும் திறனிழந்து உடன் நிற்கும் பேடைகள் மகத்தான சல்லிப்பயல்கள் இல்லையா?


நெஞ்சில் உரமும் இன்றி நேர்மை திறனும் இன்றி

வஞ்சனை செய்வாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி என்றானே நம் கவிஞன் எங்கு புறம் இழிவு பேசி, முன் புகழுரைத்த யாரை கண்டு உள்ளம் கொதித்துப்போய் எழுதினானோ இவ்வரிகளை.


அவன் சொல்வதும் மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல் என்பதையே...


கடலை சேர வேண்டிய நதிகள், குட்டைகளில் தேங்குவதில்லை. தேங்கிவிடும் அளவோ, எளிதாய் நெருங்கிவிடும் அளவிலோ அதன் வேகம் இருப்பதில்லை. 


காட்டாற்று வேகமும், கடல் சேரும் தன்முனைப்புமாய் பாய்ந்தோடும் நீரே கடல் சேரும், அலையென நடனமிடும், வானேகும், மேகமாகும், மழையாகும், மலை தழுவி மரம் தழுவி மண்ணில் தன்னை விதைத்து குதூகலம் கொள்ளும். கடல் சேரும் யுக்தி அறிந்த நீர்த்திவலைகள், யாரின் கைக்கும் சல்லிசாக எட்டிவிடாது.


நீர்த்துளியின் ஆளுமை, கம்பீரம், வழிமாறா கண்ணியம், இடர் எது வரினும் பாதை மாறா பயணம் போன்ற குணங்கள்‌ மனிதரிடம் இருந்தால் அவன் மகத்தான தனக்கே தனக்கான வெற்றியை சூடிக்கொள்கிறான்.


நேசிப்பவர்களை, உயர்ந்த இடத்தில் இருத்தி பார்க்கவே ஆசைக்கொள்வர். ஆனால், காலங்காலமாய் மனிதன் மகத்தான சல்லிப்பயலாகவே இருக்கிறான்.‌ ஆழ்ந்த அறிவும், உற்று நோக்கலும்,நுட்ப ஆய்வும் இருப்பதில்லை. 


சிற்பியை வெறுக்கும் சிற்பங்கள் வெறுங் கல்லாய் கிடக்கும்...


சிற்பியை தவிர கல்லுக்குள் இருக்கும் சிற்பத்தை வேறு யாராலும் செதுக்கி எடுத்து உலகிற்கு காட்டிவிட முடியாது. சிற்பங்கள் கடவுளாகி விட்டாலோ, பலர் பார்வை பெறும் உயர்ந்த இடம் அடைந்து விட்டாலோ, சிற்பத்திற்கே சிற்பியை யாரென தெரியாது.


சிற்பிக்கும் அதுவன்று கவலை, தான் செதுக்கி எடுத்த சிற்பம் உச்ச வெற்றியை எய்தி விட்ட ஆனந்தத்தை வேறு யாரால் கொண்டாடி விட முடியும். சிற்பி கொண்டாடது நிறைவுறுமா சிற்பத்தின் வெற்றி.


ஆனாலும், சிற்பியை மறந்த சிற்பமாக, அல்லது செதுக்காதே வலிக்கிறதென தூற்றும் மனிதர்கள் மகத்தான சல்லிப்பயல்கள் இல்லையா?


மனிதர்களை விட மரங்கள் மகத்தானவை.


முன் கசந்து பின் இனிக்கும் சொல்லே வாழ்வின் மந்திரம்...


தலைக்கனம் கொண்டவருக்கோ காதுகளும் வாய்களே !


இவ்வளவு‌ கடிந்துரைத்தால், இடித்துரைத்தால் உறவில் உரசல் வரும் என்றறிந்தும் கறாராக செப்பனிடும் உறவுகள் வரம்.


கணக்கு வாத்தியை எவனுக்கு பிடிக்கும்

காக்கா கடி மிட்டாய்தான் இனிக்கும்...


காலந்தோறும் கனவிலும்

கணக்குதானே வாழ்வினை நடத்தும்...


நன்றி மறந்து விடும் மனிதன் மகத்தான சல்லிப்பயல் என்பதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை. இது வாழ்வு கசந்தவனின் சொற்களில்லை.


வாழ்வை, குழந்தைமையுடன் கள்ளம் கபடமற்று ஏற்றுக்கொண்டு, இயல்பாய் வாழ்ந்தவனுக்கு சமூகம் கொடையளித்த சொற்கள் இவை.


பெண்ணை நாயென நடத்துபவன் மகத்தான சல்லிப்பயல் இல்லையா


பெண் குழந்தைகளை வன்புணர்வு செய்பவன் மகத்தான சல்லிப்பயல் இல்லையா


சாதிய அடுக்குமுறையில் நேரடியாக முகத்தில் சிறுநீர் கழிப்பவன் மகத்தான சல்லிப்பயல் இல்லையா


யாருமறியாத வண்ணம் கபட வேடமிட்டு சாதிய அடிப்படையில் கூடுபவன் மகத்தான சல்லிப்பயல் இல்லையா


சிந்துவெளியிலும், கீழடியிலும் கிடைத்த நீர் மேலாண்மை, சாதிய அடுக்குமுறையற்ற பேதமற்ற, போர்கருவியற்ற பண்பட்ட சமூகமாக இருந்தது என்பதை சொல்லாது, நெசவாளர், குயவர், வணிகம் செய்தவரென சாதியை தூக்கி நிறுத்த முயற்சிப்போர் மகத்தான சல்லிப்பயல்கள் இல்லையா?


குழந்தைகளை கொலை செய்பவன் சல்லிப்பயல் இல்லையா ?


மனிதன் மகத்தான சல்லிப்பயலேதான்.


மதியாதார் தலைவாசல் மிதியாதே என்றாலே அவ்வை எங்கே அவமானப்பட்டாளோ...


தந்திரம் மிகுந்தவன் நல்லவன் என கொண்டாடப்படுவான்...


நல்லவனாக வாழ்வதே மந்திரம் என நினைப்பவன் எளிதாய் சூறையாடப்படுவான், ஒதுக்கி வைக்கப்படுவான்.


வென்றவன் மகத்தான சல்லிப்பயல்.


இழந்தவன் கேடுகெட்ட நல்லவன்.


மனிதர்களை விட மரங்கள் மகத்தானவை.

நேரிய நல்லாற்றலை போதிக்கும் இயற்கையே மகத்தானவை.


- கோ.லீலா.


No comments:

Post a Comment