Sunday, 17 January 2021

மருதாணி தொய்யில்


 

மருதாணி வைத்துக் கொள்வதில் அத்தனை ஆசையுண்டு எனக்கு. அதிலும் இப்படி வட்டம் வைத்து, விரல்களுக்கு மகுடம் சூட்டுவதில்தான் அலாதி பிரியம

சோலார் சிஸ்டம் நினைவுக்கு வந்துவிடும், என்றாலும் சுற்றி வைக்கும் சிறு வட்ட எண்ணிக்கைள் கை மற்றும் வட்ட அளவிற்கு ஏற்ப மாறும்.


அரேபியன் ஸ்டைல்,பாக்கிஸ்தானி ஸ்டைல், ராஜஸ்தானி ஸ்டைல் என  இன்னும் பல வகையில் அழகாய் வரைய தெரிந்திருந்தாலும் இப்படி வைத்துக் கொள்வதில் ஒரு "க்ளாசிசம்" இருப்பதாக தோன்றுவதால், இதுவே என் விருப்பம்.


நேற்று மருதாணி வைத்துக்கொள்ளும்போது அய்யா Tk Kalapria  அவர்களின்‌ கீழ்கண்ட வரிகள் நினைவுக்கு வந்தன...


அவசரப்படுகிறவர்களுக்கு

மை கரைத்தாற் போல வெளிறியும்

பொறுமையாய்

காத்திருப்பவர்கள் கைகளில்

துலக்கமாகவும் பளிச்சிடுகிறது

நிறைய எதிர்பார்ப்பவர்களுக்கு

கரியாக அப்பி விடுகிறது

மருதாணி இட்டுக் கொள்வது போல

வாழ்க்கை.

 🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿


சும்மா வச்சாலே சட்னு சிவந்திடும் எனக்கு, வீட்டில் இலையைப் பறித்து அரைத்து வைத்துக் கொண்டால் கொஞ்ச நேரம் வைத்துக்கொள்ளலாம்.


கடையில் வாங்கி வைத்தால், உடனே எடுத்துவிட வேண்டும்.

இரண்டிலுமே எடுக்கும்போது இளஞ்சிவப்பாதான் இருக்கும்.


காலையில் எழுந்துப் பார்த்தால், அய்யா சொன்ன மாதிரி, நிறைய எதிர்பார்ப்பு போலிருக்கும்.


நேற்று கவனத்துடன் உடனே எடுத்தும் காலையில் இந்த நிறத்திற்கு வந்து விட்டது.


சரி மேட்டருக்கு வருவோம்.


மருதாணியின் சொந்த நாடு எது?


எவ்வளவு காலம்‌ பழமையானது?


மருதாணியின் வேறு பெயர்கள் என்ன?


திருமணத்தின் போது அவசியம்‌ மருதாணி வைத்துக்கொள்வது ஏன்?


மருதாணி அழகுப் பொருள் மட்டும்தானா?


ஆண்கள் மருதாணியை பயன்படுத்தலாமா?


வாங்க, மருதாணியை   ஒரு கை‌ பார்ப்போம்‌...


எகிப்துதான் மருதாணியின் சொந்த நாடென கணித்துள்ளனர்.


இதற்கு சான்றாக,‌எகிப்திய மம்மிகளின் முடி மற்றும்‌‌ நகங்கள் செங்கபில நிறமாக மருதாணி சாயலில் இருந்ததை ஆய்வு செய்து, மருதாணியை உடற்கலையின் ஒரு அங்கமாக கி.பி 700 லிருந்து பழக்கத்தில் இருந்ததாகவும்,மருதாணித்

தாவரம் எகிப்தில் தோன்றி இந்தியாவிற்குத் தொடர்ச்சியாகக் கொண்டு செல்லப்பட்டதாகத் தாவரவியலாளர்களால் நம்பப்படுகின்றது.


மருத்துவகுணமும், குதிரைப் போன்ற விலங்குகளின் மென்முடிக்கு நிறமூட்டியாகவும், 

ஆண், பெண் என இருபாலரும் உடற்கலையின்‌ ஒரு அங்கமாகவும் பயன்படுத்தி வந்துள்ளனர்.


தொய்யில் என்றால் சங்ககால் பெண்கள் சந்தனத்தால் மார்ப்பில் வரைந்துக் கொள்ளும்‌ படங்களே தொய்யில் என்று அழைக்கப்படுகிறது.


ஐவணம், அழவணம் என்றெல்லாம் அழைக்கப்படும் மருதாணியை கொங்கு மண்டலத்தில் மயிலாஞ்சி என்கிறார்கள். 


இப்போ மெஹந்தி என்கிறார்கள் வடமொழியில்.


மஞ்சிட்டி, அவுரி, இம்பூறல் வரிசையில் மருதாணியும் இயற்கை சாயமூட்டியாக இடம்பெறுகிறது.


கல்யாணத்துக்கு ஏன் மருதாணி?


அழகுக்காக மட்டுமின்றி, பதட்டம், மன அழுத்தம் ஆகியவற்றை குறைக்கப் பயன்படுகிறது.


வட்டமாக வைத்துக்கொள்ளும் மருதாணி, உள் மற்றும் வெளி சூரியனை பிரதிநிதித்துவப்படுத்தும் குறியீடாக பயன்படுத்தப்படுகின்றது. 


 "உள்  ஒளி விழிப்பு" எனும் கருத்தை மையமாகக் கொண்டுள்ளன. 

பாரம்பரிய இந்திய அலங்காரங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளங்கையில் சூரியன் என இங்கு குறிப்பிடுவது கை மற்றும் கால்களை நோக்கமாகக் கொண்டாகும். உள்ளங்கையில் சூரியன் வடிவம் இடுவது இந்தியாவின் பாரம்பரிய அலங்காரத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.


அஸாமில் திருமணமாகாத பெண்களின் மூலம் "ரொங்காலி பிகு" எனும்‌ வைபவத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. ஆஃப்கானில் இஸ்லாமியர்கள் பெண்கள் பூப்புடைந்ததின் குறியீடாக மருதாணியைப் பயன்படுத்துகின்றனர்.


இந்தியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்காசிய நாடுகளில் பெண்கள் பெரிதும்‌ விரும்பி கைகளிலும், கால்களிலும் மருதாணியை வைத்து அழகு செய்துக் கொள்கின்றனர்.


மருதாணியின் மருத்துவ குணங்கள்:

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿


மருதாணியின் விதைகள் பீட்டா ஐயோனன் (Beta Ionone) என்ற வேதிப்பொருளைக்கொண்டது. இது, பல்வேறு நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.


🌿உடலுக்குக் குளிர்ச்சி


இது உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடிய தாவரம். மருதாணி இலையை சட்னியைப்போல நன்றாக, விழுந்தாக அரைத்து இரவு தூங்கப் போவதற்கு முன்னர் பாதத்தில் தடவிக்கொள்ளலாம். அதேபோல் கை, கால் விரல்களில் வைத்துக்கொண்டாலும், இது உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும்.சிலருக்கு குளிர்ச்சி தாங்காது அவர்கள் மட்டும் பாதாம் பிசினுடன் சேர்த்துப் பயன்படுத்தலாம்.


🌿முடி வளர்ச்சி


அரைத்த மருதாணி இலைகளைத் தினமும் தலையில் தடவி வர, பொடுகுகள் குறைந்து தலைமுடி பளபளப்படையும். மேலும் முடி நல்ல கருமையாகவும் மென்மையாகவும் காட்சிதரும். இளநரை போன்ற நரை சம்மந்தமான பிரச்னைகளுக்கும் இது நல்ல தீர்வைக் கொடுக்கும்.


🌿தூக்கமின்மைக்கு மருந்து


மருதாணிப் பூக்களை ஒரு துணியில் சுற்றி, தூங்கும்போது தலைமாட்டில் வைத்துக்கொண்டால் நன்றாகத் தூக்கம்வரும்.


🌿மேகநோய்க்கு மருந்து


மேகநோய்க்கு ஆகச்சிறந்த மருந்தாக இது இருக்கிறது. இதன் இலையுடன் மிளகு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக அரைத்து, அதைப் பாலுடன் சேர்த்து வெறும் வயிற்றில் அருந்திவந்தால் மேகநோயால் உண்டாகும் புண்கள் குணமாகும்.


🌿தீக்காயங்களுக்கு மருந்து


இதன் இலைகள் குளிர்ச்சித் தன்மைகொண்டவை. இதனால் தீக்காயங்களால் உண்டாகும் எரிச்சலுக்கு இது சிறந்த மருந்தாகும். எரிச்சலைக் குறைத்து, புண்கள் ஆறவும் இது துணைபுரியும்.


🌿கல்லீரலைக் காக்கும்


கல்லீரல் பிரச்னையால் உண்டான நோய்களை இது குணப்படுத்தும். குறிப்பாக, மஞ்சள்காமாலைக்கு இது மருந்தாகப் பயன்படும். ஆனால், மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துக்கொள்வது நல்லது.


மேலும் மருதாணியால் உண்டாகும் நன்மைகள்:

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

இதன் இலையை அரைத்து தினமும் வாய்க்கொப்பளிக்க, ஆறாத அம்மைப் புண்கள், எரிச்சல் தரும் வாய்ப்புண்கள், தொண்டை கரகரப்பு ஆகியவை குணமாகும்.


அரைத்த  இலைகளை குளிக்கும்போது சோப்புடன் தேய்த்து குளித்துவர, கருந்தேமல், படை போன்றவை சரியாகும்.


மருதாணி இலையை அரைத்து நெற்றியில் தடவினால் தலைவலி குணமாகும்.


பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் உண்டாகும் அதிகமான ரத்தப்போக்கு நிற்கும். வெள்ளைப்படுதலைச் சரிசெய்யும்.


இதன் இலைச்சாறு வயிற்றுப்போக்கு, சீதபேதி போன்ற வயிற்றுக் கோளறுகளைக் கட்டுக்குள் கொண்டுவரும்.


நகச்சுத்தி, கால் ஆணி போன்றவற்றுக்கு இது மிகச்சிறந்த நிவாரணி.


உடல் சூட்டால் உண்டாகும் கண்ணெரிச்சலைத் தீர்க்கும்.


மருதாணி கஷாயத்தை சுளுக்கு உள்ள இடத்தில் ஒற்றடமிட்டால் விரைவில் சரியாகும்.


இயற்கை தந்த அற்புதக் கொடை இந்த மருதாணி. அதனால் இயற்கையாக வளரும் மருதாணி இலைகளைத்தான் நாம் பயன்படுத்த வேண்டும். அழகுக்காக என்றாலும்கூட ரசயானப்பூச்சுக்களைத் தவிர்க்க வேண்டும். மருதாணி அழகோடு, ஆரோக்கியத்தைத் தரும் அற்புத மூலிகை! இதைச் சரியாகப் பயன்படுத்தி பல்வேறு வகையான நோய்களிலிருந்து விடுபடுவோம்! உடல்நலத்தைச் சிறப்பாகப் பேணுவோம்.


அன்புடன்

- கோ.லீலா.


பி.கு : நம்ம மருதாணிப் போட்டிருக்கோம்னு இந்த சமூகத்துக்கு அறிவிக்கிறது எவ்வளவு பேச வேண்டியிருக்கு....😀


சூரியன் கொஞ்சம் ஒரு பக்கமா ரவுண்ட்ஸ் போயிட்டார்.


ஃப்ரியா விடுங்க... அதையெல்லாம் கேட்கக்கூடாது.

No comments:

Post a Comment