Friday, 4 May 2018

இலை.....



வானத்து நட்சத்திரங்கள்
பூக்களாய் மலர்ந்திருக்கின்றன
பூக்கொய்யும் பொருட்டு
இலைகளோடு பேசுகின்றேன்
ஒவ்வொரு இலையும்
ஒரோர் கதை வைத்திருக்கின்றன
ஒரு நாள் இலைகளோடு
ஒரு இலையாக வாழக் கேட்கிறேன்
இப்போது கிளையில் இலையாய்
மழைநாளில் குடையின்றி
நனைந்து சிலிர்க்கிறேன்
மழை ஓய்ந்த பின் நானோர்
மழையென சொட்டுகிறேன்
அதற்கு முன்னே குட்டையென
மழைநீர் ஏந்துகிறேன்
பூக்களை தேடி வரும்
வண்ணத்துப் பூச்சிகளை
குருவிகளை தாலாட்டும்
பசும் தூளியாகிறேன்….
காற்றிலசையும் பூக்களின்
தலைவருடும் விரல்களாகிறேன்
மெல்ல கதிரவனின் ஒளி பாய
பச்சையம் சமைக்கும் தாயானேன்
மாலையின் தென்றலில்
நடனமிடும் மங்கையானேன்
இரவில் பூக்கள் யாவும்
மின்னும் நட்சத்திரமாக
வானை போர்வையாக்கி
பார்வையிலிருந்து மறைகிறேன்.
விடியும் போதே ஒருநாள்
முடிந்தென அறிவிப்பு வர
சருகாகி உரமாகும் வாய்ப்பிழந்து
வெற்று மானுடமாகிறேன்.


-கோ.லீலா.

No comments:

Post a Comment