Intellectual Property Rights என ஆங்கிலத்திலும் அறிவுசார் சொத்துரிமை என தமிழ்நாட்டிலும், புலமைச் சொத்து என இலங்கையிலும் வழங்கப்படுகிறது.
அறிவுசார் சொத்துரிமை என்பது, அந்தந்த மண்ணில் உருவாக்கப்பட்ட நிலம்சார் வாழ்வியல் பதிவுகள், கலை இலக்கிய படைப்புகள், அந்தந்த நிலப்பகுதியில் மட்டுமே விளையக்கூடிய பிரத்யேக பயிர்கள், தானியங்கள், பாரம்பரிய அறிவு சார் மருத்துவ குறிப்புகள் போன்ற இன்னும் பலவாகும்.
எடுத்துக்காட்டாக, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, தஞ்சை ஓவியம், தஞ்சாவூர் தட்டு, தஞ்சாவூர் மல்லி, வேப்பம், மஞ்சள், ஓலைச்சுவடிகள், மண்சார் இனக்குழு தலைவன், தலைவிகளின் சிற்பங்கள் ( மதுரை வீரன், கருப்பண்ண சாமி, முருகன், பெரியநாயகி அம்மாள், பொம்மி போன்ற சிற்பங்கள்...), சிதம்பர நடராசரின் நடன சிற்பம், மர சங்கிலி, கல் சங்கிலி, யாளி, அக்காமலை க்ராஸ் ஹில் ஒன்றையொன்று விழுங்குவது போன்ற ஓவியங்கள் என பல தனித்தன்மை வாய்ந்த கலைகள், உணவு வகைமைகள், செடிகள், என ஒவ்வொன்றுக்கும் அந்தந்த நிலத்திற்குரிய அறிவுசார் சொத்துரிமை அந்தந்த மண்ணிற்கு உரியவருக்கே உண்டு அதாவது அந்தந்த அரசு நிறுவனங்களுக்கே உரிமை, அந்த உரிமையை மீறியோ அறியாமலோ பிற நாட்டிற்கோ, நாட்டு மக்களுக்கோ விற்கவோ, அறிவுசார் சொத்துரிமையை வழங்கவோ அரசு தலைபட்டால், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அவற்றை தட்டிக் கேட்க உரிமை உண்டு.
பொதுவாக உலக அளவில் அங்கீகரிக்கப்படும் அறிவுசார் சொத்துரிமைகளில், காப்புரிமை, பதிப்புரிமை, வணிகச் சின்னம், படைப்புரிமம், புவிசார் குறியீடு, வணிக இரகசியம் ஆகியவையும் அடங்கும்.
தொட்டு உணரக்கூடிய சொத்து, தொட்டு உணர முடியா சொத்து என இரு வகையாக இச்சொத்துக்கள் இருக்கின்றன.
தனிமனித அறிவுசார் சொத்துரிமை, பொதுவுடமை அறிவுசார் சொத்துரிமை என அதிகாரம், பதிவுபெறல், பாதுகாத்தல், பயன்படுத்துதல், என்பதின் அடிப்படையில் சிறுசிறு மாறுபாடுகளை கொண்டுள்ளன.
இனக்குழு சமூகமும், சொத்து உடைமை சமூகமும் சமகாலத்தில் இருப்புக் கொண்டிருந்த காலத்தில் விளைந்த சில வாழ்வியல் இலக்கியங்கள், ஆணைகள், கலை படைப்புகள் ஆகியவை பொதுவுடமை சொத்துரிமைக்கு உரியனவாக பெரும்பாலும் இருக்கின்றன.
இனக்குழு சமூகம் என்பது ஆதிகால பொதுவுடமை சமூகமாகவும், சொத்துடைமை சமூகம் என்பது அரசு நிறுவனங்கள் தோன்றிய பின் உருவான சமூகமாகவும் கொள்ளலாம்.
இவ்விரண்டும் சமகாலத்தில் இருப்பு கொண்டிருந்த பொழுது விளைந்த #திருக்குறள் #தொல்காப்பியம் போன்றவை அந்தந்த நாட்டின் பொதுவுடைமை அறிவுசார் சொத்துரிமைக்கு உரியதாகும்.
அயோத்தி தாசரின் பாட்டனார் கந்தசாமி அவர்கள் ஆரிங்டன் துரையிடம் சமையல் கலைஞராக பணியாற்றிய போது, அடுப்பெரிக்க வந்த ஓலைச்சுவடிகளை, அவர் ஆரிங்டன் துரையிடம் கொடுக்க, அவர் தனது நண்பரான, தமிழில் செய்யுள் வடிக்கும் அளவிற்கு தமிழை கற்றறிந்த எல்லீஸ் துரையிடம் கொடுக்க திருக்குறள் எனும் உலக பொதுமறை உலகிற்கு கிடைத்தது.
எல்லீஸ் துரையின் பெயரில் சென்னையில் வீதிகளின் பெயர் உண்டு. எனினும் எல்லீஸ் துரை #திருக்குறளின் அறிவுசார் சொத்துரிமையை கொள்ள இயலாது. அவரும் அதை கோரவில்லை.
இவ்வாறு பல்வேறு இலக்கியங்களும், மருத்துவ குறிப்புகளும், கலைவடிவ சிற்பங்கள், ஓவியங்கள் வழியே அடுத்த தலைமுறைக்கு விட்டு சென்ற அறிவியல் உண்மைகளை பாதுகாக்க வேண்டியது அந்தந்த மண் சார் மக்களின் பெருங்கடமை யாகும்.
சூழலியல், அறிவியல், நாத்திகம் என எழுதும் ஒரு எழுத்தாளருக்கு ஏன் சட்டென அறிவுசார் சொத்துரிமை சட்டம் குறித்தும், வரலாறு, சமூகவியல், தொல்லியல், வேளாண்மை, கலை இலக்கிய படைப்புகள் குறித்தான சிந்தனை வந்திருக்கிறது என்றொரு கேள்வி எழும்.
முதல்தர மாணக்கர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று சட்டம், மருத்துவம், பொறியியல்,
மேலாண்மை போன்று படித்து விட்டு, உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ தொழில்சார் வல்லுநர்களாக இருந்து விடுகின்றனர்... அவர்களின் கண்டுபிடிப்புகளுக்குரிய உரிமத்தை மட்டும் பெற்றுக்கொள்வார்கள்.
ஆனால், வரலாறு, தொல்லியல், இலக்கியம் படித்தவர்கள், ஆளும் அதிகாரம் கொண்டவர்களின் துணையோடு பல்வேறு வரலாற்று மாற்றங்களை செய்து, ஒரு குறிப்பிட்ட சமூகத்தின், நாட்டின், இனத்தின் கலாச்சார பண்பாடு, கலை இலக்கியங்கள், மருத்துவம் மற்றும் பல அறிவுசார் சொத்துகளின் காலகிரமங்கள், உரிமை ஆகியவற்றை மாற்றி விடுகின்றனர்.
திருவள்ளுவர் நாயனார் என்று சிறுவயதில் படித்த நினைவுண்டு, ஆனால் இன்று மலேசியா, ஜெர்மனி போன்ற நாடுகளில் சில கூட்டங்கள் திருவள்ளுவரை சமயமுனி என பரப்பி வருகின்றன.
திருக்குறளில் இல்லாத கடவுள் என்ற சொல்லை முதல் அதிகாரத்தின் தலைப்பாக வைத்துள்ளனர்.
தொல்காப்பியத்தில் கடவுள் வாழ்த்து என்பது மூலப்பிரதியில் இருந்ததா? இருக்கிறது எனில் அதில் எதை அல்லது எந்த கடவுளரை வழிப்பாடு செய்ய சொல்கிறார், இடைச்செருகல்கள் என்னென்ன?
திருக்குறளிலோ, தொல்காப்பியத்திலோ, கீழடி, சிந்து சமவெளி நாகரீகத்திலோ, இடைச்செருகல் மற்றும் காலகிரமங்களை மாற்றுதல் போன்றவற்றை practicing Lawyers, Doctors, Engineers, Gombass கள் செய்யவில்லை. மாறாக வரலாறு, தொல்லியல், இலக்கியம், ஆன்மீகம் போன்றவற்றை படித்தவர்களே வரலாற்றுப்பிழைகளை திட்டமிட்டு அரங்கேற்றுகின்றனர்.
அதை, நுட்பமாக ஆழ்ந்து அகழ்ந்து நோக்கினால், அவரவர் நாட்டு பெருமை, கலாச்சாரம், பண்பாடு, சாதி, மொழியை தூக்கி நிறுத்தும் நோக்கில், அறிவுசார் சொத்துரிமைக்கு சகல உரிமை உடைய மண்ணின் மாண்புகள், வாழைப்பழ ஊசியாக, மிக தேர்ந்த சொற்களால் கீழ்மைப்படுத்தப்படும்.
இந்த குழு அல்லது கூட்டத்தில் பெரும்பாலும், புலம்பெயர்ந்த மக்கள் பெருவாரியாக இருப்பர்.
அருமை தெரியாமல் விற்றால் நாங்கள் வாங்குவோம் அதில் என்ன தவறு போன்ற சிறுபிள்ளைத்தனமான பொறுப்பற்ற பேச்சையும் பேசுவார்கள்.
ஒரு நாட்டின் ராணுவ ரகசியத்தை ஒருவன் அறமின்றி விற்கிறான் என்றால் அவன் தேசத்துரோகி, அவனிடமிருந்து அதை விலைக்கு பெறுபவன், பெரும் கொள்ளைக்காரன் மட்டுமல்ல, அறமற்றவன் இல்லையா? பெருங்குற்றவாளி இல்லையா ?
அப்படிதான், ஓலைச்சுவடிகளை, நடராஜர் சிலைகளை, ஐம்பொன் சிலைகளை அரசுக்கும், நீதிக்கும் தெரியாது விற்பது தேச துரோகமெனில் , அதை வாங்குவதும் குற்றமே.
கஞ்சா விற்பதும் வாங்குவதும் குற்றம், லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் அதே போல்தான் ஒரு நாட்டின் அறிவுசார் சொத்துகளை , விற்பதும், வாங்குவதும் குற்றமே ?
கஜினி முகமது பதினெட்டு முறை ( உண்மையில் 17 முறைதான் படையெடுத்தார்) இந்தியாவை நோக்கி படையெடுக்க காரணம் என்ன?
இந்தியா கலைச்செல்வமும், இலக்கியமும், அருட்செல்வமும், பொருட்செல்வமும், ஞானச்செல்வமும், வேளாண் அறிவும், நீர் மேலாண்மையும், கட்டிட அறிவும், நெசவு என பல தளங்களில் விரிவான ஆழமான அறிவை கொண்டிருந்த நாடு என்பதால்தான், பல மன்னர்களால் பல முறை படையெடுப்புக்கு உள்ளான நாடு.
மிளகு வாங்க வந்தவன்தானே நம்மை அடிமையாக்கி ஆண்டான்.
அப்படிதான், நவீன யுகத்திலும் மின்மயமாக்கி தருகிறேன், சேமிக்கிறேன், பாதுகாக்கிறேன் என்றெல்லாம் புன்னகையோடு ஊடுருவும் அந்நிய சக்திகளை நாம் இனங்கண்டு ஒதுக்க வேண்டும்.
முதலில், நம் நாட்டின் அறிவுசார் சொத்துரிமை உடையவற்றை முதலில் முறையாக பதிவு செய்தல் வேண்டும்.
அறிவுசார் சொத்துரிமையின் விரிவாக்கம், வளர்ச்சி, முக்கியத்துவம், நோக்கம், நன்மைகள், பாதுகாப்பிற்கான தேவை, அவற்றை பாதுகாக்க வரையறுக்கப்பட்டுள்ள சட்டங்கள் குறித்தும், அறிவுசார் சொத்துரிமைகளை Memorandum of Undetanding ( MoU) அரசு சாரா உள்நாட்டு நிறுவனங்கள், அரசு சாரா, இந்திய குடியுரிமை உள்ள / இந்திய குடியுரிமை இல்லாத உறுப்பினர்கள் / தலைவர்களை கொண்ட அந்நிய நாட்டு அமைப்புகளுக்கு வழங்கும்படும் போது, பின்பற்றப்பட வேண்டியவை, கவனத்தில் கொள்ள வேண்டியவை என்னென்ன? என்பதை நாளை பார்ப்போம்...
அது சரி ! ஓலைச்சுவடிகளை, கல்வெட்டுகளை சேகரிக்கவும், வாசிக்கவும், பாதுகாக்கவும், அவற்றை மின்மயமாக்கவும்,
தமிழ்நாட்டில் பிறந்து, வாழும் குடியுரிமையுடன் தமிழை தாய்மொழியாக கொண்ட தமிழன் ஒருவர் கூட ஓலைச்சுவடிகளை வாசிக்கும் பெரியோர்களும், மின்மயமாக்க தெரிந்த தொழில்நுட்பம் பயின்று தேர்ந்த இளைஞர்களும் இல்லையா என்ன?
என்ன கூத்து இது? வைத்தீஸ்வரன் கோயிலில் வரிசையாக நாடி ஜோதிட சென்டர்களில் இருப்பவர்கள் ஓலைகளை வாசிக்கிறார்களே ! இதை குறிப்பிடும் போது மிக ஏளனமாக தோன்றலாம். ஒன்று வாசிப்பது உண்மை எனில் அவர்களை பயன்படுத்தி அறிவுசார் சொத்துகளில் என்ன உள்ளது என அறியலாம். திருக்குறள் போல் பல பொக்கிஷங்கள் கிடைக்கலாம்.
மருத்துவ குறிப்புகள் கிடைக்கலாம்
இல்லை அவர்கள் பொய்யாக வாசிக்கிறார்கள் எனில், அவ்வகவு கடையை நடத்த அனுமதிக்கலாமா?
இது பொய் என சொல்வார்கள், என்பதால் காஞ்சீபுரத்தில் அகத்திய நாடி ஜோதிடத்தில், 2002 ல் ஓலைச்சுவடி பார்க்க சென்றோம் ( எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை என்பது தனிக்கதௌ)
கைரேகையை பெற்றுக்கொண்டு மறுநாள் வரச்சொன்னார்கள் என சென்றோம், ஒரே ஒரு கட்டில் ஒவ்வொரு ஓலையாக வாசித்து, அத்தன் ( அப்பா) பெயரும், அம்மை ( அம்மா) பெயரும், உடன் பிறந்தோர் எண்ணிக்கை, பெயர் எதில் பொருந்தி வருகிறதென பார்க்க நான்கைந்து ஓலைகளை படித்து ஒதுக்கிய பின் அய்ந்தாவதோ, ஆறாவதோ ஓலை பொருந்தி வர அதில் உள்ளபடியே வாசித்து, நமக்கு புரியும் தமிழில் சொல்லி, நோட்டில் எழுதியும், கேசட்டில் பதிவு செய்தும் தந்தனரே. இன்றும் வைத்துள்ளேன்.
தமிழ்நாடெங்கும் பரவி கிடக்கும் ஓலை வாசிப்பாளர்களை ஒருங்கிணைத்து, ஊதியம் அளித்தால், சட்டென வேலை முடியுமே.
மேலும், கல்வெட்டு, ஓலைச்சுவடிகளை பதிவேற்றம் செய்து, தேவநகரி எழுத்துக்களை இன்றைய தமிழ் எழுத்துக்கு மாற்றவும் அவற்றை வருடிகளால் ( Scanner) மின்மயமாக்கம் செய்யும் தமிழ் நாட்டு இளைஞர்கள் இருக்கின்றனரே.
எதெதெற்கோ செலவு செய்யும் போது, இந்த இளைஞர்களுக்கு அரசே நேரடி தொகுப்பூதியம் அளித்து பணியில் அமர்த்தலாமே.
இப்போதும், தமிழ்நாட்டு இளைஞர்கள்தான் அப்பணிகளை அயல்நாட்டினரின் அமைப்பிற்கு கீழ் குறைந்த ஊதியத்தில் செய்து வருகிறார்கள்.
அரசு நிறுவனம் ஒரு பணியை Out sourcing செய்யும் போது, பணியாளர்களை அமர்த்திக்கொள்வது, ஊதியம் அளிப்பது யாவும் பணியை எடுத்து முடித்து தருவதாக ஒப்பந்தம் செய்துக்கொண்ட நிறுவனத்தின் பொறுப்பே ஆகும்.
பணியின் ஒவ்வொரு கட்ட நிறைவுறுதலுக்கும் ( Completion in stages) அரசு நிறுவனம் தொகையை வழங்கும். பணியின் நேர்த்தி, நம்பகத்தன்மை, பதிவு கோப்புகள், அரசு இறையாண்மையை பாதிக்க கூடிய, முக்கிய அரசு ரகசிய கோப்புகள் போன்றவற்றை திரும்ப பெறுதலும், அரசு நிறுவனத்தில், இப்பணிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட துறைசார் வல்லுநர்களின் பொறுப்பு ஆகும்.
அரசு வேறு அரசாங்கம் வேறு என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.
அறிவுசார் சொத்துரிமைகளை பாதுகாப்பதில் அரசு மற்றும் அரசாங்கத்தின் அங்கு குறித்த சட்டத் திட்டங்கள் அந்தந்த நாட்டுற்கு தக்க மாறுபடும்.
பலரின் வேண்டுகோளுக்கு இணங்க இத்தொடர் எழுதப்படுகிறது.
வேப்பங்குச்சியின் காப்புரிமையை அய்யா நம்மாழ்வார் தமிழகத்திற்கு பெற்று தந்த வெற்றி கதை அடுத்த பாகத்தில்...
Stay tuned...
பொறிஞர் கோ.லீலா
சூழலியல் எழுத்தாளர்
தமிழ்நாடு