இன்று, அன்னை வங்காரி மாத்தாயின் பிறந்தநாள். உலக குளுமை நாளும் கூட கென்யாவின் நைரோபியில் இகிதி கிராமத்தில் ஏபரல் 1,1940 ஆம் ஆண்டு பிறந்தவர்.
ஒரு காடு பற்றியெரிகிறது.
சிங்கம், புலி, யானை போன்ற பெரிய விலங்குகள் முதல் மான், மயில், மாடு போன்றவையும் திகைத்து நிற்கின்றன, தன் வாழ்விடம் கண்முன் பறிபோவதை தடுக்க இயலாது மிரண்டுப்போய் காண்கின்றன, நீரோடை ஓரம் வெப்பம் தணிய கண்ணீர் மல்க ஓடி ஒதுங்கி நிற்கின்றன...
பச்சை கரம் நீட்டி குளுமை தந்த பெரும் மரங்கள் கருகி வீழ்கின்றன, மண்ணில் சருகுகளுடையே வாழும் வண்டினமும், புழுக்களும் வெந்து மடிகின்றன.
ஒரே ஒரு சிட்டுக்குருவியை தவிர அத்தனை உயிர்களும் செயலிழந்து திகைப்பில் நிற்கின்றன.
சிட்டுக்குருவியோ, நீரோடைக்கு சென்று தன் சின்னஞ்சிறு அலகுகளால், நீரை முகர்ந்து முகர்ந்து காட்டுத்தீயில் ஊற்றுகிறது. சின்னஞ்சிறு சிறகுகளை சிறகடித்து பல்லாயிரம் முறை நீரோடைக்கும் பறக்கிறது.
திகைத்து நின்ற பெரிய உயிர்கள் ஏளனம் செய்கின்றன, சின்னஞ்சிறு குருவியே ! உன்னால் இக்காட்டுத்தீயை அணைக்க முடியுமோ. உன் சின்னஞ்சிறு அலகால் எவ்வளவு தண்ணீரை முகர்ந்து செல்வாய் என்று, சிட்டுக்குருவியின் ஊக்கத்தை குறைக்கின்றன.
நேரத்தை வீணாக்க விரும்பாத சிட்டுக்குருவியோ ! பறந்தப்படியே சொன்னது.
என்னால் முடிந்ததை செய்வேன். செய்வதை சிறப்பாக செய்வேன் என்கிறது.
இப்படியொரு கதையை படித்திருக்கிறேன்.
அந்த சிட்டுக்குருவிதான், கோல்டுமேன் விருதும்,நோபல் விருதும் பெற்ற அன்னை வங்காரி மாத்தாய் அவர்கள்.
கிழக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் முனைவர் பட்டம்பெற்ற முதல் பெண்மணி, பல்கலைக்கழக பேராசிரியராக பணியாற்றிய முதல் பெண்மணி,
சூழலியலாளர் ஒருவருக்கு வழங்கப்பட்ட முதல் அமைதி நோபல் பரிசு என்பதும், பெற்றவர் கிழக்கு ஆப்பரிக்காவை சேர்ந்தவர் என்பதும், பெண் என்பதும் கூடுதல் சிறப்பு.
வளர்ச்சி என்ற பெயரில் அழிக்கப்பட்ட காடுகளை சீர் செய்ய புவி தினத்தன்று கென்ய பெண் சுற்றுச்சூழல் முன்னோடிகளை மரியாதை செய்யும் வகையில் ஏழு செடிகளை நட்டு, சின்னஞ்சிறு கட்டடத்தில் துவங்கப்பட்ட
#பசுமை_பட்டை_இயக்கம் ( Green belt movement) மாபெரும் பெண் இயக்கமாக மாறியது.
நீர், மரம், காடு,சுற்றுச்சூழல் ஒன்றோடு ஒன்று இணைந்தவை, தனித்தனி கூறாக பார்க்க இயலாது என்ற மாத்தாய் #மாற்றத்திற்கான_பெண்கள் இயக்கத்தை உருவாக்கி, பெண்களின் நலனில், முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு செயலாற்றினார்...
காடுகளை அழித்து, உணவு பயிரையும் அழித்து பணப்பயிர்களான காஃபி, தேயிலை பயிடுவதை கண்டித்த மாத்தாய், உகூரு எனும் பூங்காவை தகர்த்து 60 அடுக்கு கட்டடம் வருவதை தன் போராட்டத்தால் தடுத்து நிறுத்தியவர்.
ஏராளமான எதிர்ப்புகள், தோல்விகள், நகையாடல்களை கண்டவர். இறுதியில் எனக்கான இது எனக்கான பாதை இதில் நான் நடக்கிறேன், விழுகிறேன் எழுகிறேன் மீண்டும் நடக்கிறேன், யார் எதை சொன்னாலும், என் செயலை கைவிட மாட்டேன் என்று உறுதிக்கொண்ட அன்னையைப் பற்றி இன்னும் ஆயிரம் பக்கங்கள் எழுதலாம்.
ஓயாது, காட்டுக்கு நீர்திவலைகளை சுமந்து சிறகடித்த சிட்டுக்குருவி 2001 ல் தன் சிறகடிப்பை நிறுத்திக்கொண்டது, அதற்குள்ளாக 14 கோடிக்கும் அதிகமான மரங்களால் பூமிக்கு ஒரு பச்சை பொன்னாடை போர்த்திவிட்டது.
ஏபரல் 1 முட்டாள் தினமாக மற்றவர்களுக்கு இருக்கலாம், என்னைப் போன்றோருக்கும், கென்யார்களுக்கும் இதுவே பெண் கல்வியறிவு பெற்ற பெருநாள்.
அந்த சிட்டுக்குருவியின் சிறகுகளை நான் பொருத்திக்கொண்டிருக்கிறேன்.
சுற்றுச்சூழல், நீர்,காடு, மரம் முக்கியமென உணர்ந்து செயலாற்ற துவங்கிய போது, நான் உன்னை அறிந்திருக்கவில்லை அன்னையே ! அறிந்தபின் ஒருநாளும் உனை மறந்திருக்கவில்லை உன்னையே!
அறிந்திருக்க விட்டாலும் உனது சிந்தனையே எனதாகவும் இருந்திருக்கிறது, உன் ஆன்மாவே எனை வழி நடத்தியிருப்பதாக நம்புகிறேன்.
மரம் நடுவதில் மட்டுமல்ல, வாழ்விலும் உன் பாதையே எனக்குமானதாக இருக்கிறது.
வாங்காரி மாத்தாயின் ஒவ்வொரு
சொற்களும் வீரியம் மிகுந்தவை.
நேர்மையும், நெஞ்சுரமும் கொண்ட பெண்.
ஆப்பிரிக்காவில் தான், ஆதியினம் தோன்றியதாக ஆய்வுகள் சொல்கின்றன... பெண்ணே விவசாயத்தையும் கண்டுபிடித்தாள்...
ஒரு பெண்ணின் கையில் விதையிருந்தால், அது இந்த மானுடம் பயனடையும்.
கார்ப்பரேட் அந்த விதைகளை கைப்பற்றிக்கொண்ட நிலையில், பெண்ணே விதையாக மாற வேண்டிய சூழல் நிலவி வரும் வேளையில் தன்னையே விதையாக மாற்றிக்கொண்டு எங்களுக்கெல்லாம் முன்னோடியாக நிற்கும் அன்னை வங்காரி மாத்தாய் அவர்களை, அவர்களது பிறந்த தினத்தன்று வணங்குகிறேன்.🙏🙏🙏
பி.கு : அன்னைக்கான மரியாதையை என் முதல் நூலான #மறைநீர்நூலில் பக்கம் 54ல் செலுத்தியிருக்கிறேன் என்பதில் மகிழ்கிறேன்
அன்புடன்
- கோ.லீலா
No comments:
Post a Comment