#பச்சையம்_என்பது_பச்சை_ரத்தம்
- கவிஞர் பிருந்தா சாரதி.
ஒரு பார்வை - கோ.லீலா.
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
சூழலியம் என்றால் என்ன ?
நம்மை சுற்றியுள்ள அனைத்தும் சேர்ந்ததே சூழலியம்.அனைத்தும் என்பது காடு,கடல்,மலை,வயல், பாலை ஆகியனவும் அதில் வாழும் உயிரினங்கள், மலர்கள் அந்நிலத்திற்கான பொழுதுகள், இசைக்கருவிகள், தெய்வங்கள் ஆகியவை உள்ளடக்கம்.
அதைதான், தொன்மையும், வளமையும் மிக்க தமிழ் இலக்கியத்தில் திணை என பிரித்துள்ளனர். தமிழிலக்கியத்திற்கு பல்லாண்டுகளுக்கு பின் எழுத்துரு பெற்ற ஜப்பான் அதை கிகோ என தனது ஹைக்கூ கவிதையில் பொதித்து தந்தது.
சூழலியல் என்பதே கொடுத்தலும், பெறலுமே... அந்த அடிப்படையில் ஒரு மாபெரும் இலக்கிய இலக்கண வகைப்பாடுகளை இந்த சமூகத்திற்கு தந்த தமிழிலக்கியம், ஜப்பானிலிருந்து ஹைக்கூவை பெற்றுக்கொண்டது.
அவ்வகையில்... இன்றைய தமிழிலக்கியத்தில் சூழலியல் என்ற உரைக்காக கவிஞர் பிருந்தாசாரதி அவர்களின் பச்சையம் என்பது பச்சை ரத்தம் என்ற பசுமை ஹைக்கூ நூலை எடுத்து இருக்கிறேன்.
படைப்பு பதிப்பகம், சூழலியல் இலக்கியத்தில் தனி முத்திரை பதித்து வருகிறது, அதிலொரு சிறந்த புத்தகம்தான் பச்சையம் என்பது பச்சை ரத்தம்.
சங்க இலக்கியத்திலிருந்து, இன்றைய இலக்கியம் வரை இயற்கையை பாடுவதில் தமிழ் இலக்கியத்திற்கு இணை தமிழ் இலக்கியமே.
மரத்தை தோழியாக கருதி பாட்டு இயற்றிய தமிழ் புலவர்களின் மரபணுவில் பிருந்தா வந்ததற்கு சாட்சியம் "பச்சையம் என்பது பச்சை ரத்தம்"
திருக்குறளில் இல்லாத சூழலியமும், மேலாண்மையும் இல்லை.
திருக்குறள் ஏழு சீர் கொண்டது போல் மூன்று வரியில் சூழலியம் பேசி இருக்கிறது இந்நூல்.
திருக்குறள் போலவே வான் சிறப்பில் துவங்கி நீர், காற்று, ஆகாயம், பூமி, தீ என அய்ந்து இயற்கையையும் கவிதையாக்கி, அதன் இன்றைய நிலையையும் விளக்கி, கூடவே பல்வேறு தாவரம், உயிரினங்களையும் பதிவு செய்துள்ளது இந்நூல்.
நீர்
💦💦💦
முதல் குறும்பா
1
🌧️
மழை எழுதுவதை
மனிதனால்
எழுதமுடியாது
🌧️
மழை எதை எழுதுகிறது... பூமியெனும் காகிதத்தில் பச்சையத்தை பதியம் போடும் மழை எழுதுவதை மனிதனால் எழுத முடியுமா என்றொரு கேள்வியை எழுப்பி வான் சிறப்பை கூறுவதோடு, மனிதனே உன் இறுமாப்பிற்கு ஒரு குட்டு வைத்து அடக்கமாய் இரு, உன்னால் முடியாது என்கிற கவிதையை நவீன குறள் என்பேன்.
ஏன் நவீன குறள் என்கிறேன்... இதோ நம் அய்யன் வள்ளுவர் கூறியது.
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.
மழை இல்லையென்றால் பசும்புல்லின் தலையை காண முடியாது என்கிறார் வள்ளுவர்.
அதே தமிழ் மரபணுவின் நீட்சியாய் மழை எழுதுவதை உன்னால் எழுத முடியாது என்கிறார் கவிஞர் பிருந்தா சாரதி அவர்கள்.
ஏன் இன்று அதை சொல்கிறது இந்த கவிதை என்று இன்னும் கூர்ந்து அவதானித்தால், காலநிலை மாற்றத்தால், பருவமழை பருவம் மாறி பொழிவதும், பொய்ப்பதும் நிகழ்வதற்கு காரணம் மனிதன், அவன் இன்று வானை வில்லாய் வளைக்கும் அறிவியல் அறிந்தும், நீரை உருவாக்க முடியாது, நீர் எழுதும் எதையும் மனிதா உன்னால் உருவாக்க முடியாது என்கிறது இந்த மூன்று வரி நீரின் ஆதாரமான மழையை போற்றி.
அடுத்து ஒரு குறும்பா...
2
💦
ஏதோ உலக இலக்கியமாம்
நீர் எழுதிய இலக்கியம்தான்
இந்த உலகமே
💦
இந்த குறும்பா...
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்நின்று அமையாது ஒழுக்கு.
என்கிறார் வள்ளுவர்.
நீர் இல்லாது உலகில் ஒழுக்கம் நிலை பெறாது என்கிறார்.
உலகமே நீர் எழுதிய இலக்கியம்தான்... வேறெந்த உலக இலக்கியத்தையும், உலகம் இல்லையென்றால் படைக்க முடியாது... நீரிஇன்று அமையாது உலகு என்கின்ற அதே வேளையில், ஒவ்வொரு கவிதையிலும், இயற்கையை மீறி மனிதனால் ஒன்றும் செய்து விட முடியாது, நீ எது செய்தாலும் அது இயற்கைக்கு முன் மிகச் சிறிதே என ஒரு குட்டு வைத்தப்படி செல்கிறது கவிதை.
கற்றறிந்தவன் என்ற இறுமாப்பெல்லாம் நீருக்கு முன் செல்லாது...இயற்கையே இறைமை என்கிறார் கவிஞர். இன்றைய நவீன யுகத்திலும், தமிழிலக்கியம் சூழலியலை மறந்துவிடவில்லை என்பதற்கு, இக்கவிதையே சான்று.
உணவுச் சங்கிலி
🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛
3
அடுத்ததொரு துளிப்பாவில்
☘️
மாடு மேய்கிறது
வெட்டுக்கிளி கத்தரிக்கிறது
புல் வளருகிறது
☘️
இயற்கையின் ஒவ்வொரு அசைவையும் உற்று அவதானிக்கும் ஒருவரால்தான் இதை எழுத முடியும்...
மாடு, வெட்டுக்கிளி என்ற இரு உயிரினங்களை பதிவு செய்திருப்பதோடு, ஒரு சூழலியல் நிகழ்வை காட்சிப்படுத்தியிருக்கிறார் கவிஞர்.
உணவுச்சங்கிலியை சமன் செய்து இப்பூமி இயங்க சிற்றுயிர் முதல் பேருயிர் வரை ஒன்றை ஒன்று சார்ந்தே வாழ வேண்டும்.
புற்களின் அளவுக்கதிகமான வளர்ச்சியை கட்டுப்படுத்துவதில் வெட்டுக்கிளிகளுக்கு பெரும் பங்கு உண்டு, மாடு மேய்கிறது எனும்போது அது மருதநிலமாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. மாட்டின் சாணம் புல் வளருவதற்கான சத்துமிகு உரம்...
மாடு, வெட்டுக்கிளி எனும் இரு தாவர உண்ணிகள்,புல்லின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகின்றன என்பது வெளிப்படையாக சொல்லப்பட்டிருக்கிறது... அடுத்து சொல்லாமல், வாசகனுக்கு விடப்பட்ட தொடர் சிந்தனைதான் பெரும் அற்புதம்,
சாணம் போட்டு புல்லை வளர்க்குது மாடு,புல்லை வெட்டி போடுது வெட்டுக்கிளி, அதை மேயுது மாடு, வெட்டுக்கிளியை யார் கட்டுப்படுத்தறது?
வெட்டுக்கிளி இருந்தால் கரிச்சான் குருவி இருக்கும், நூற்றுக்கணக்கான வெட்டுக்கிளியை உண்டு, கழிவாகவும், வாய் வழியே கக்கலாகவும் வெளியேற்றும் பூச்சிகள் மண்ணிற்கு உரம்.
இப்படி ஒரு உயிர்கோளத்தை கொண்டுள்ள ஒரு காட்சியை நறுக்கென மூன்று வரிகளில் சொல்லி செல்கிறது இந்த உணவுச் சங்கிலி கவிதை.
வெட்டுக்கிளி சிலநாடுகளில் உணவாக பயன்படுத்தப்படுகிறது, கூடவே குறியீடாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆண்டன் செக்காவின் ஜெர்ரி பாரிஸ் வெட்டுக்கிளி கதையை நினைவூட்டி உணவுச் சங்கிலியோடு இலக்கிய சங்கிலியை பிணைத்து செல்கிறது இத்துளிப்பா. எவ்வளவு இடையூறுகள் வந்தாலும், தடுத்தாலும் வளர்ந்து விடும் புல், யாவருக்கும் இயற்கை சொல்லும் பாடம் அல்லவா?
4
☘️🐆
புலி உறுமியது
பயப்படாமல் நிமிர்ந்தே
நிற்கிறது சிறு புல்.
☘️🐆
முந்தைய துளிப்பாவில் மருத நிலத்தில் உருவாகிய ஒரு உயிர்கோளத்தை காட்சிப்படுத்தியவர், மெல்ல நம்மை ஒரு வனத்திற்குள் அழைத்து செல்கிறார்.
புலி, புல் என்ற இரண்டு முரணான பதிவுகள் மூலம் எத்தகைய சூழலியல் அறிவியலை கடத்துகிறார் என்று பார்ப்போம்.
புலியை பார்த்தால், பயந்து ஓடும் பேருயிர்கள் இருக்க, புல் பயப்படாமல் நிமிர்ந்து நிற்கிறது என்கிறார். இதில் உள்ள இலக்கியச்சுவையை ரசித்தபின் சூழலியலுக்குள் செல்வோம்.
வலியோன் வலியோனையே எதிர்ப்பான் என்று ஒரு பொருளும், எவ்வளவு பெரிய வலியவர் ஆயினும், அவரால் தனக்கு ஒன்றும் ஆகிவிடாது எனும்போது, நிமிர்ந்து நிற்பது இயல்பு என்றும் ஒரு பொருள் மறைபொருளாய் இருப்பது சுவையல்லவா.
சூழலியலுக்கு வருவோம், புலி மாமிச உண்ணியான புலி உணவு பிரமிடின் உயர்நிலையில் உள்ள ஒரு உயிரினம்.புலி புல்வெளியில் நிற்கிறது, ஏன் ? வரும் மானை உணவாக்கி கொள்ள...
புல்லை மான் உணவாக்கி கொள்ளும், மானை புலி உணவாக்கி கொள்ளும். ஒன்றை சார்ந்தே இன்னொன்று என்பது இயற்கையின் நியதி. கூடவே வனத்தில் உணவுச் சங்கிலியை சமன்நிலையில் வைப்பது எது என்பதையும் கூறி உணவுச் சங்கிலி எனும் பெரும் சூழலியல் அறிவியலை கூறுகிறது இக்கவிதை.
புலி பசித்தாலும் புல்லை தின்னாது எனும் கருத்தை வெளிப்படையாக சொல்லாலமல் புரிய வைப்பது. இக்கவிதையின் அறிவாக மிளிர்கிறது.
நெகிழி
🌷🌷🌷🌷🌷
5
🌿
நெகிழி மாவிலைத் தோரணம்
மாந்தோப்பை அழித்துக் கட்டிய
வீடுகள்.
🌿
இயற்கையின் சீரழிவை சாடும் ஹைகூ.
மிகவும் தாக்கமான செய்தியையும், ஒரு இலகுத் தன்மையுடன் சொல்லும்போது எளிதில் புரியவும், சுருக்கென தைக்கவும் செய்வதால், செய்தியின் அடர்வை புரிந்து செயல்பட முடியும்.
இலகுத்தன்மை பலநேரங்களில் வெறும் காட்சிப்படுத்துதலாக மட்டும் கூட இருக்கலாம்.
உடலை லேசாக ஆக்கும் உயிர்காற்று தரும் மாவிலையை பாடியிருப்பது அற்புதம்.
உடலின் தேவையான உயிர்காற்றை தருவது மரங்கள்தான்.
ஆழ்ந்து நுரையீரல் கொள்ளும் அளவு உயிர்காற்றை உள்ளிழுக்க, உயிர்காற்றின் அளவு அதிகரிக்க அதிகரிக்க குண்டலினி விழித்துக் கொள்ளும். உடல் லேசானதாக ஆகிவிடும். (lightness).
உடலின் பிரக்ஞையற்று போவதே... உடல் லேசாக தோன்றுவதற்கு காரணம்.
நோயுற்றவன் எலும்பும், தோலுமாக இருந்தாலும், உடலே பாரமாகும். உயிர்காற்று குறைய வலியும், நோயும் வலிந்து வர தேகம் பாரமாகும்.
உடலை லேசாக்கும் ஒன்றைப் பற்றியும்...
அவற்றின் அழிவு எனும் கனமான செய்தியை இலகுத்தன்மை ஹைகூவில் வைத்திருப்பது ஒரு பிரமிப்பை தருகிறது.
"கண்ணை விற்று சித்திரம்" வாங்கும் அறியாமையை விடவும் மோசமானது இயற்கையை அழித்து செயற்கைக்குள் நுழைவது.
கண்ணை விற்பது கூட தனிமனித விருப்பமும், அதன் விளைவுகளை அவன் மட்டுமே சந்திப்பான்.
இயற்கையை அழித்தால் வாழும் சமூகமும், வருங்கால சந்ததியினரும், இன்னும் உயிர் பெறாத உயிரினங்களுக்கும் கூட அழிவைத்தரும் என்பதை உணர்த்தும் ஹைகூ.
உயிரை இசைப்பதும் அசைப்பதும் மரமே. அதிலும் மாமரம் என்பது இனிப்பை ஊட்டி இன்னுயிராக்கி விடும் தன்மையுடையது.
சட்டென்று நெகிழி காலம், என்று சொல்லிவிட தோன்றுகிறது.
மாவிலைத் தோரணம், வீடுகள் ஆகிய சொற்களே இந்த ஹைகூவிற்குரிய கிகோ ஆகும்.
தமிழகத்தில் மாவிலை தோரணம் விழா காலங்களில் வீட்டு முகப்பில் கட்டும் கலாச்சாரம் இருக்கிறது.
மா என்பதன் மூலம் மே மாதம் என்றும், மாவிலை தோரணம், வீடுகள் என்பதன் மூலம் புதுமனை புகுவிழாவிற்கு கட்டப்படும் தோரணம் என்று அவதானித்தால் மே இறுதியிலிருந்து ஜூன் மாதம் ( வைகாசி வரை) இவ்விழாக்கள் தமிழ்நாட்டில் நிகழும் கலாச்சாரம் இருப்பதால் இந்த ஹைகூவின் காலம் கோடைக்காலம் என அவதானிக்கப்படுகிறது.
கோடைக்காலம் : மே, ஜூன், ஜூலை.
தட்ப வெட்ப நிலை :
கோடைக்காலத் தொடக்கம், கோடை வெப்பம், கோடை இரவு, கோடை குளிர்ச்சி, ஜூன் இருட்டு.
உயிரினங்கள் : எறும்பு, குருவிகள், வண்ணத்துப் பூச்சிகள்.
மாமரம் நல்ல நிலையில் இருந்தால், இவ்வுயிரினங்கள் மரத்தில் இருக்கும்.
*
அழகிய முரண்
****************
அழித்து என்பதற்கு முரணாக கட்டிய என்பதும்.
நெகிழி மாவிலை தோரணங்கள் மாந்தோப்பு என்பதற்கு முரணாகவும் அமைந்துள்ளது.
நெகிழி மாவிலை தோரணம் என்றவுடன் ஒரு கொண்டாட்ட மனநிலை உண்டாகி விட காட்சிகள் விரிய என்ன விழா அல்லது பண்டிகை என யோசிக்கும்போதே மாந்தோப்பு அழித்தக் கட்டிய வீடுகள் என ஒரு மின்வெட்டு திருப்பம் என்றால் உண்மையிலேயே மின்வெட்டு திருப்பம்தான் தருகிறார் கவிஞர்.
நவீன கால மனிதர்கள் எவ்வளோவோ
படித்திருந்தாலும், ஒவ்வொரு வாழ்வியலிற்கு பின் உள்ள அறிவியலை, சூழலியலை, பண்பாட்டை, கலாச்சாரத்தை, வரலாற்றை, அறிய மறந்த, மறுக்கின்ற முட்டாள்தனத்தை மென்மையாக எள்ளி நகையாடுகிறது இந்த ஹைகூ.
அப்படியென்ன அறிவியல் பார்ப்போம், அதற்கு முன் மீண்டும் படிப்போம்.
அறிவியல் பார்வை.
***************************
கிணற்றில் சுத்தம் செய்ய இறங்குவதற்கு முன் மாமரக் கிளையை முதலில் வெட்டி உள்ளே இறக்குவர். இதன் மூலம் கிணற்றுக்குள் இருக்கும் நச்சு வாயுக்களை நீக்கி, சுத்தமான காற்று கிடைக்கும் என்பதே இதற்கான காரணம்.
மாவிலை தோரணம் எதற்காக கட்டுகிறோம். அரச இலை, ஆல இலை என பல்வேறு இலைகள் இருந்தாலும் ஏன் மாவிலை தோரணம் கட்டுகிறோம்...
மாவிலைகள் அடர் பச்சை நிறத்தில் இருக்கும், அழுகாது, மாறாக உலர்ந்து காய்ந்து சருகாகிவிடும்.
பொதுவாக மரங்களுக்கு கரியமில வாய்வை உள்ளிழுத்து, உயிர்காற்றாகிய ஆக்ஸிஜனை வெளியிடும் தன்மை உண்டு.
நமக்கான உயிர்காற்றை தருவது மரம். மாவிலைக்கே அந்த இயல்பு
நிறைந்திருப்பதால், பலர் கூடும் விழா மற்றும் பண்டிகை கூட்டங்களில் மாவிலைத் தோரணம் கட்டப்படுகிறது.
காய்ந்து சருகானாலும், கரியமில வாய்வை உள்ளிழுத்து ஆக்ஸிஜனை வெளியிடும் தன்மை கொண்டது மாவிலை.
இதம் மூலம், உடலின் நலம் பேணப்படுவதோடு, மாவிலை ஒரு கிருமி நாசினியும் கூட என்பதால் கிருமித் தொற்றுக்களையும் வீட்டின் முகப்பிலேயே துரத்திவிடும்.
இப்போது ஒரு கேள்வி எழலாம், துக்க நிகழ்வுகளிலும் கூட்டம் கூடுமே என.
ஆம் ! மாவிலை போன்றே அழுகாது காய்ந்து சருகாகும் தன்மையுடைய வேப்பிலைக்கும் தோரணத்தில் பங்கு உண்டு.
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.
(அதிகாரம்:ஒப்புரவறிதல் குறள் எண்:217)
இதற்கு பெரிதும் பொருந்தக்கூடிய மரம் வேம்பு. வேப்பிலையை இத்தகைய நிகழ்வுகளுக்கும், நோய்கண்ட வீட்டின் முன்பும் வைப்பதன் மூலம் கிருமித் தொற்றுகளை விரட்டுவதோடு, கசப்பான நிகழ்வினை குறிக்கவும் (Indicator) வேப்பிலையை பயன்படுத்துகின்றனர்.
இவ்வளவு பெரிய அறிவியலை உணர்ந்த நம் முன்னோர்கள் ஒவ்வொரு வீட்டிலும் மா, வேம்பு, வாழை போன்றவற்றை பேணி பாதுகாத்து வந்தனர்.
அறிவியலை ஏட்டில் மட்டும் படித்துவிட்டு, இயற்கைக்கு முரணாக, எதற்கு பயன்படுத்துகிறோம் என்ற சிந்தனையற்ற, எதையும் ஒரு அழகிற்காகவே செய்யும் நவீன முட்டாள்தனத்தை இதை விட எப்படி அழுத்தமாக சாடமுடியும்.
நெகிழி என்ற சொல் எவ்வளவு அடர்வான அறிவியல் பின்னணி உடையது என்பதை அறிவோம்.
மரங்களை அழித்து, நமக்கான மருத்துவ நலன்களையும் அழித்து மண்ணையும் நலங்கெட செய்வதோடு, மண்ணை முற்றிலும் கொல்லும் ஒன்றுதான் நெகிழி.
நெகிழி மட்கிப்போக 1000 ஆண்டுகள் ஆகும். அதுவரை மண்ணின் மீது விழும் மழைநீரை ஊடுருவி செல்ல தடை செய்யும்.நிலத்தடி நீர் recharge ஆகாமல் போகும்.
ஒரே ஒரு மாவிலைத் தோரணமா? என்ற கேள்வி எழலாம்.
"வீடுகள்" என்ற சொல்லின் அடர்வு மற்றவற்றை விளக்கிவிடும்.
"நச்சு மாமரமாயினுங் கொலார்"
திருச்சதகம், திருவாசகம், பாடல் 96
என மாணிக்க வாசகர் பாடுகிறார். விஷ மரமெனினும் கொல்ல மாட்டார்கள் என்ற வரிகளின் மூலம் மரங்களை எப்படி போற்றி பாதுகாத்து வந்துள்ளனர் என்பதும், ஒவ்வொரு மரமும் இப்பூமியில் வாழத் தகுதியுள்ளது, அதன் பயனை நாம் அறியாமல் இருக்கலாம். ஆனால் இந்த பூமி அதை அறிந்து வைத்திருக்கும் என உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள்.
விஷ மரமானாலும் கூட மனிதர்கள் வெட்ட மாட்டார்கள் என்று காளிதாசரும் குமார சம்பவ காவியத்தில் பாடுகிறார் (2-55).
மரங்களை வெட்டாதே என்று காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடிய பாடலும் புறநானூற்றில் (57) வருகிறது:-
"கடிமரம் தடிதல் ஓம்பு – நின்
நெடுநல் யானைக்குக் கந்து ஆற்றாகவே"
– என்கிறார் புலவர்.
இப்படி தமிழர்களின் சங்க இலக்கியம் மரங்களைப் போற்றி பாடியுள்ளன.
அகநானூற்றில் வாகை, புன்னை, கடம்பம் முதலான மரங்கள் காவல் மரங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
வாகை மரம் நன்னனது காவல் மரமாகவும், புன்னை மரம் திதியனின் காவல் மரமாகவும், கடம்ப மரம் கடம்பரின் காவல் மரமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
“தமிழ் வேந்தர்கள் வெற்றியைக் குறிக்கும் மரமாகக் கடம்ப மரம், புன்னை மரம், கணைய மரம், கடிமரம், வேப்ப மரம், மாமரம், வாகைமரம் என ஏழு வகையான மரங்களைப் போற்றி வந்தனர் என்றும் குறிப்புகள் கூறுகிறது.
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
இன்றைய கவிஞர்களுக்கு, மரங்களின் அழகை, பயனைப் போற்றி பாடுவதை விடவும் மரங்களை அழியா விடாமல் காக்கும் பொருட்டு, பாட வேண்டிய பொறுப்பு மிகுந்துள்ளது என்பதை அறிவோம்.
அத்தகைய பொறுப்பை சரிவர செய்திருக்கிறது இந்த ஹைகூ.
சிறுக கட்டி பெருக வாழ் என்றால் என்ன...
வீடு சிறியதாக இருக்கவேண்டும், நிறைய மனிதர்கள் ( உறவுகள் ) வாழவேண்டும். இதன் மூலம் ஒருவருக்கு ஒரு வீடு என கட்டவேண்டிய அவசியமற்று போகும், வீடு கட்ட தேவைப்படும் நிலப் பயன்பாடும் குறையும்.
ஒவ்வொரு வீட்டிலும் தனிதனியாக நிலத்தடி நீரை உறிஞ்சுதல், தனிதனியாக நெகிழி குப்பைகள் உருவாகுதல்,மரங்களை அழித்தல் என எல்லையற்ற துன்பத்தை பூமிக்கு கொடுக்கிறோம்.
உணவு உற்பத்திக்கான நிலத்தை கட்டிடங்கள் ஆக்ரமிக்க செய்கின்ற மடமையினால் உணவு உற்பத்தி குறைதலும் உருவாக, வாழ்வியல் மேலாண்மை என்பது பெரும்படாகும் என்பதைதான் இந்த ஹைகூ சொல்கிறது.
"மாந்தோப்பு" என குறிப்பிடப்பட்டிருந்தாலும், எல்லையற்ற விரிவுகளை கண்முன் நிறுத்துகிறது இந்த ஹைகூ.
காடுகள், நெல்வயல் இன்னும் பிற விளைநிலங்களுக்கும் ஏற்படும் அழிவையும், அதன் மூலம் ஏற்படும் சீர்கேட்டையும் சொல்லும் இந்த ஹைகூ பாராட்டுக்குரியது.
ஒரு மூன்று வரிக்கு இவ்வளவு பெரிய சிலாகிப்பு தேவையா ? எனில். அவசியம் தேவை.
அலட்சியமாக கடந்துவிடும் தன்மையால் பல்வேறு நலன்களை இழந்திருக்கிறோம்.
இப்படி பல்வேறு தளங்களில் பயணிக்க வைக்கும் ஹைகூ மகிழ்ச்சியென்றால், சமூக சிந்தனையை தாங்கி நிற்கும் ஹைகூ பெருமையல்லவா.
6
☘️
முல்லையில் பாக்கு
மருதத்தில் வெற்றிலை
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
☘️
முல்லை, மருதம் என நிலவகைகளையும்,அதற்குரிய பயிர் வகைகளையும் பதிவு செய்திருக்கும் ஹைகூ, வருங்கால சந்ததியினருக்கு, இச்செய்திகளை கடத்தும் காலபெட்டகம் ஆகும். சட்டென ஒரு மின்னல் வெட்டாக அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே எனும் வரிகள், நம் நிலத்துக்குரிய பண்பாட்டை கூறுகிறதே என்று வியக்கும்போதே... அடுத்த பிரிலியன்ஸ் அசர வைக்கிறது
முல்லை நிலத்திற்கு செம்புலம்( செம்மண் பரத்தியிருத்தலால்) என்ற பெயரும் உண்டு... அகத்திணை இருத்தல் நிமித்தம்.
மருதத்திணைக்கு கடவுள் இந்திரன் வானம் மற்றும் மின்னலுக்கு உரியவர்... அகத்திணை ஊடல்.
முல்லை நில தலைவன்/தலைவியோடு மருதம் நில தலைவன்/ தலைவி
செம்புலப் பெயல் நீர் போல ... வெற்றிலையும் பாக்குமாக இணைந்தப்பின் செந்நிறத்திலெது வெற்றிலைஎது பாக்கு என இனம் பிரிக்க முடியும்...
இதற்காகதான் வெற்றிலை பாக்கு மாற்டி திருமணத்தை முடிவு செய்யும் வழக்கம் இருந்திருக்குமோ என்றும் தோன்றுகிறது.
காதல் மணத்திற்கு நிலமோ, மொழியோ எந்த பாகுபாடும் கிடையாது என்பதை குறிஞ்சி திணை பாடலொன்று சொல்கிறது.
🌷
யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்
யானும் நீயும் எவ் வழி அறிதும்,
செம் புலப் பெயல் நீர் போல,
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
🌷
மருத நிலத்தாருக்கும், முல்லை நிலத்தாருக்கும் ஒருவரின் பெற்றோரை இன்னொருவருக்கு தெரியாது, ஆயினும் அன்பு கொண்ட நெஞ்சமாக கலந்தனவே எனும் ஹைகூ காதலைதானே பாடுகிறது என்றால்...காதலை இயற்கையின் வழியே பாடுதலும், செடி, கொடி, மரம், பறவைகள் மூலம்( படிமமாக) சொல்வதுமே தமிழர் மரபு.
வெற்றிலை என்ற கொடி, பாக்கு மரம் என குறிப்பிடுவதன் மூலம் பாக்கு நீர் நிறைந்த பகுதியில் விளையும் தன்மைகொண்டது இவ்வரியின் மூலம் நீர்வளம் மிகுந்த காலமாகவும் உணர்த்துகிறது ஹைகூ.
சுற்றுச்சூழல், நிலவகை, நீர்வளம், விவசாய பயிர் வகைகள், தமிழர்தம் பண்பாடு, காதலென்பது எப்படி இருக்க வேண்டும் என்பதையெல்லாம் ஆவணப்படுத்தி இருக்கும் இந்த ஹைகூ, நிச்சயம் காலங்கடந்தும் தமிழர்தம் சூழலியல் போற்றும் தன்மையை உலகிற்கு வெளிச்சமிடும்.
7
🐛
மண்ணுக்கு மசக்கை
வயிற்றில் நெளிகிறது
மண்புழு.
🐛
இயற்கையைப் பாடும் ஹைகூவின் உன்னதம் அளப்பரியது.
சின்ன சின்ன உயிரினங்களையும் அவதானித்து, அதன் உயர்வுகளை முழுதும் சொல்லாமல் கோடிட்டு காட்டி வாசகரை அந்த தளத்தில் பயணிக்க வைக்கும் ஆற்றல் பெரிது.
தூரத்தில் இருக்கும் ஒன்றை அல்லது ஒருவரை போற்றுகின்றபோது அருகில் இருப்பதை தவற விட்டு விடுகிறோம்.
உயரத்தில் இருப்பது மட்டுமல்ல, பள்ளத்திலும் ஆச்சரியங்கள் ஏராளமாய் இருக்கின்றன என்பதை காணும் கண் கொண்டோரே கலைஞர் ஆகின்றார்.
வண்ணத்துப்பூச்சிகளை பாட ஆயிரமாயிரம் கவிஞர்கள் இருக்கிறார்கள்...
கரப்பான் பூச்சிகளையும், மண்புழுக்களையும், சிலந்திகளையும், கொசுக்களையும், பன்றிகளையும் பாட யார் இருக்கிறார்கள்?
சங்கத் தமிழ் புலவர்கள் எல்லாவற்றையும் பாடி வைத்திருக்கிறார்கள். அதே போன்று ஹைகூ கவிஞர்களும் பாடி இருக்கிறார்கள்.
குறிப்பாக ஹைகூ கவிஞர் இசா அவர்கள் சிற்றுயிர்களோடு பேசுவதே ஹைகூவாகி உள்ளது.
எனில், முன்னோர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்தலையே தலையாய கடனாக கொண்டிருந்ததின் காரணம் அதன் பின்னிருந்த பயன்பாட்டு அறிவியல் அறிவும், வருங்கால சந்ததியினரின் மீதான நேசமும்தான் காரணம்.
அழகியலை ரசித்தல் என்பதை விடவும் மேன்மையானது இயற்கையை நேசித்தல். இயற்கை மீதான அதீத நேசமே அதை பாதுகாக்க துடிக்கின்ற இதயம்.
அன்று முதல் இன்று வரை இயற்கை நேசித்தவர்கள் ஆனந்த மயமாகவே வாழ்ந்திருக்கின்றனர்.
விண்ணோடும் மண்ணோடும்
உறவாடும் கண்ணோடு
இயற்கையது கவிபாடும்
பெரிதென்றும் சிறிதென்றும்
ஏதுமில்லை உயிர்களில்
கொண்டிருக்கும் உருவில்.
ஆற்றுகின்ற பணியொன்றே
அரியன இவையென்றும்
அரியோ இவையென்றும்
விழிவிரிய வைக்கும்
இயற்கையின் ரகசியம்
பூமிக்கு நன்செய் அதிசயம்.
கவித்துவ கண்களுக்கே
தென்படும் பொக்கிஷம்.
மண்ணகழ்தல் மரமேறல்
விண்ணளத்தல் மழையாதல்
மயிலென தோகைவிரித்தல்
மண்புழுவென நெளிதல்
சிறுத்தையென சீறல்
சிருங்கார புன்னகையுடன்
செவ்வந்தியாய் மலர்தல்
பறவையாய் சிறகுவிரித்தல்
பருத்த உடலுடன் காதசைத்தல்
புல்லென முளைத்தல்
மரக்கிளையென முறிதல்
பனித்துளியில் வாழ்தல்
பரிதியில் கரைதல்
எண்ணற்ற வாழ்வு
எண்ணம் போல் வாழ வாய்த்தவன் இயற்கையின்
குழந்தையல்லவா...
அவரே கவிஞருமென்றால் பூமிக்கு நலன் தரும் கவிதைகளை படைக்காமல் இருப்பார்களா?
மொழி வளர்த்தல் மட்டுமில்லை, மொழிக்கும் முன்பான பூமியை பாதுகாத்தலும் ஒரு கவிதையின் வேலை அல்லது கடமையாகும்.
அறிவியல் தமிழ் இன்றைய தேவையெனில், தமிழ் மூலம் அறிவியல் பேசுதல் அதற்கான அடித்தளம் ஆகும்.
அப்படியொரு வேளாண் அறிவியல் பற்றிய ஹைகூதான் இந்த ஹைகூ
மழைக்காலத்திலேயே மண்புழுக்கள் அதிகமாக காணப்படும். உயிரினங்களின் இயக்கமும் இருக்கும், காலம் அறிவிக்க கூவும் சேவலும், பெட்டையும் மண்ணில் இருந்து உண்ணும் உணவு மண்புழு, மற்ற பூச்சி வகைகளும் ஆகும். ஒன்றன் மீது ஒன்றாக விழும் இலை மண்ணில் கிடக்க நாளடைவில் மண்புழு உற்பத்திக்கு உதவும்.
மண்ணிற்கு மசக்கையா? என்ற சிறு புன்னகையுடன் மேலும் தொடர்ந்து படிக்க "வயிற்றில் நெளிகிறது" என்ற வரியை தொடர்ந்து வரும் மின்வெட்டு திருப்பம்தான் " மண்புழு" இந்த ஒற்றை சொல்தான் முழு ஹைகூவையும் இயற்கை சார்ந்த ஹைகூவாக மாற்றி விடுகிறது.
அற்புதமான சிந்தனை.
மண்புழு என்ற ஒற்றை சொல்
வேளாண்மை, விலங்கியல், தாவரவியல்,சுற்றுச்சூழல், நுண்ணுயிரியல் என பல்வேறு துறைக்கும் தொடர்புடையது.
இலக்கியப் பார்வை.
***********************
உழவுத் தொழில் செய்யும் ஒருவனை தலைவனாகக் கொண்டு எழுந்த இலக்கியமே "பள்ளு" எனப் பெயர்பெற்றது.
பள்ளுவில் சிறந்தது
"முக்கூடற் பள்ளு".
இந்நூலின் காலம் கி.பி 1680 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
" மீது உயர்ந்திடும் தெங்கு இளநீரை
மிடைந்த பூகம் சுமந்து தன் காயை
சூதம் ஒன்றிச் சுமக்கக் கொடுக்கும்
சூதம் தன்கனி தூக்கும் பலாவில்
ஓதும் அந்த பலாக்கனி வாழை
உறுக்கவே சுமந்து ஒண்குலை சாய்க்கும்
மாதுளம் கொம்பு வாழை தாங்கும்
வளமை ஆசூர் வடகரை நாடே"
என்பாள் மூத்த பள்ளி.
பூகம்- பாக்கு மரம், மிடைந்த - நெருங்கிய, சூதம் - மாமரம்
தெங்கின் இளநீரை, நெருங்கி வளர்ந்திருக்கும் கமுகு( பாக்கு) தாங்கும். கமுகு, தன் குலையை அருகில் வளர்ந்திருக்கும் மாமரங்களைச் சுமக்கச் செய்யும். மாமரங்கள் தன் கனிகளை அருகில் வளர்ந்திருக்கும் பலா மரங்களில் சாரச் செய்யும். பலாக்கனிகளை வாழை மரங்கள் சுமக்கும். வாழைக் குலைகளை மாதுளங் கொம்பு தாங்கும் ஆசூர் வடகரை நாடே என்கிறாள் மூத்த பள்ளி.
இதன் மூலம், இன்று பெருமையாக பேசிக்கொள்ளும் கலப்புப் பண்ணை ( Mixed farming) மற்றும் பல்லடுக்கு வேளாண்மை ( Multi Storey Farming) கி.பி 16ம் நூற்றாண்டிலேயே தமிழர்களுக்கு பரிச்சயமான ஒன்றாக இருந்திருக்கிறது என அறியப்படுகிறது.
இப்படி இயற்கை வேளாண்மையை பாடியவர்கள் மண்புழு பற்றிய ஒரு அரிய செய்தி குறிப்பினை தருகிறார்கள்.
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.
- குறள்.
ஏர் உழுதலை விட எரு இடுதல் நல்லது, இந்த இரண்டும் சேர்ந்துக் களை நீக்கிய பின், நீர் பாய்ச்சுதலை விடக் காவல்காத்தல் நல்லது.
அகல உழுவதிலும், ஆழ உழுதல் நன்று என படித்திருக்கிறோமே, இதில் உழுவதைவிட எருவிடு என்கிறாரே வள்ளுவர்.
என்ன காரணமாக இருக்கும்.
மண்புழு இருக்கும் பூமியில் ஏரோட்ட வேண்டிய அவசியமில்லை என்பதோடு "மண் புழுக்கள் மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஓர் உயிருள்ள கலப்பை" என்கிறது சங்கப்பாடல்கள். இயற்கை எரு என்பது கழிவுகளே.
கழிவுகளில், மண்புழு செழித்து வளரும். அதற்கும் ஏரோட்டுவதற்கும் என்ன தொடர்பு... வாருங்கள் அறிவியல் என்ன சொல்கிறதென்று பார்ப்போம்.
சுற்றுச் சூழல் பார்வை.
**************************
ஒரு பிடி மண்ணில் இலட்சக்கணக்கான பாக்டீரியாக்கள், நுண்ணுயிரிகள், பூஞ்சைகள், பாசி வகைகள், நூற்புழுக்கள் இருக்கிறது.
இரசாயன உரங்களால், அவற்றை அழித்து விட்டோம், அதன் விளைவுகளை பின் பார்ப்போம்.
ஒரு சதுர அடிக்கு பத்து மண்புழுக்களும், ஒரு ஏக்கருக்கு நான்கு இலட்சம் மண்புழுக்களும் இருந்தால் போதும், நிலத்தை உழவு செய்ய வேண்டியதில்லை ஒரு மண்புழு ஒரு நாளில் பத்து முறை மண்ணில் மேலும் கீழும் நகர்ந்து செல்கிறது. அது 20 துளைகள் போடுகிறது .
ஒரு நாளில் ஒரு ஏக்கரில் 80 லட்சம் துளைகள் போடும்போது 90 நாட்களில் 72 கோடி துளைகள் போடுகிறது இதனால் நிலத்தை உருகிட வேண்டிய அவசியம் இல்லை.
இப்போது ஹைகூவிற்கு வருவோம்.
முதல் வரி
"மண்ணுக்கு மசக்கை"
என்பதில் மசக்கை என்பது ஒரு பிறப்பளிக்க போகும் ஒரு பெண்ணிற்கு, முதல் பன்னிரெண்டு வாரங்களில், உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களுக்கு தகவமைத்து கொள்வதற்கு முன் ஏற்படும் உடல் மாற்றமாகும்.
எனில், மண்ணைப் பெண்ணாக பார்க்கும் நம் கலாச்சாரமும், மண் விளைச்சலுக்கு தயாராகும் நிலையையும் கூறுகிறது.
"வயிற்றி நெளிகிறது
மண்புழு"
என்ற வரிகளின் மூலம், விளைச்சலை நலமாக்க மண்ணிற்கு தேவை மண்புழு என்று கவனப்படுத்தப்படுகிறது.
வயிற்றில் நெளிகிறது என்ற வரிதான், நாம் சொன்னது போல் மண்புழு மேலும், கீழுமாக அசைகிறது என்பதை உறுதி செய்கிறது.
மேலும் வயிற்றில் என்பதன் மூலம், மண்ணின் மேலாக இல்லாமல், மண்ணிற்கு உள்ளாக மண்புழு இருப்பதாக பொருள் தருகிறது. அதில் என்ன சிறப்பு என்பதை பார்ப்போம்.
முதல் வகை மண்புழுக்கள் மண்ணின் மேற்பரப்பில் இருந்து ஒரு அடி ஆழத்தில் வாழ்பவை
இரண்டாம் வகை மண்புழுக்கள் ஒரு அடி ஆழத்திற்கு கீழேயும் 3 அடி ஆழம் வரையிலும் வாழக்கூடியவை மூன்றாம் வகை மண்புழுக்கள் மேற்பரப்பிலிருந்து மூன்று அடிக்கு 10 அடி வரையிலும் வாழ்பவை.
இதிலிருந்து, இரண்டாம் அல்லது மூன்றாம் வகை மண்புழுக்களைதான் கவிஞர் குறிப்பிட்டிருக்கார் என புலப்படுகிறது.
இரண்டாம் வகை முன் மண் புழுக்கள் மண்ணில் உள்ள உயிரின பொருட்களை உண்பதோடு விவசாய கழிவுகளையும் உட்கொள்கிறது மண்ணின் உட்பகுதியில் மேலும் கீழும் நகர்வதால் மண்ணிற்கு நல்ல காற்றோட்ட வசதி ஏற்படுத்தித் தருகிறது.
மூன்றாம் வகை மண் புழுக்கள் நிலத்திற்குள் நீர்ப்பிடிப்பு அதிகமாக்கும் வகையில் செயல்படுகிறது பணி துளி நீரைக்கூட 3 அடிக்கு கீழ் கொண்டு செல்லும் தன்மை படைத்தவை.
மண்புழுவினால் மண்ணின் வளம் பெருகும், மண்ணின் மூச்சுவிடும் (respiration of soil) திறன் அதிகரிக்க,seepage of water மற்றும் நுண்ணுயிர்கள் செழித்து இருக்கும்...
அதனால் என்ன பயன் நம்மாழ்வார் அய்யா என்ன சொல்கிறார் கேட்போம்...
நுண்ணுயிர், உயிரியியல், நிலவளம், நீர்வளம் - ஒருங்கிணைந்த பார்வை.
***********************************
"செம் புலப் பெயல் நீர் போல" என்ற குறுந்தொகை பாடலும் அதையே சொல்கிறது "மண்ணில் விழுந்த மழைநீர் மண்ணின் தன்மை பெறுதல் போல்"
நில வளமே நீர்வளம் என்பதை உறுதி செய்கிறது.
நம்மாழ்வார் அய்யா சொல்கிறார்...
நிலவளம் என்பது மண்ணின் இயற்பியல், உயிரியல், மற்றும் இரசாயனத் தன்மையை பொறுத்து அமையும்.
மண் பொலபொலவென இருக்க வேண்டும் இது இயற்பியல் தன்மை.
மண்ணில் நுண்ணுயிரிகள், மண்புழு, பூரான், கரப்பான் பூச்சி போன்ற உயிரினங்கள் வாழவேண்டும்.
இலைதான் வேருக்கு உணவளிக்கிறது, எனில் வேரில் தண்ணீர் மற்றும் எரு இடுவதன் பயன்தான் என்ன?
எரு என்பது விலங்கு மற்றும் தாவர கழிவுகளே, அதில் வளரும் நுண்ணுயிர் மற்றும் உயிரினங்கள்தான் மண்ணிலிருந்து வரும் நைட்ரஜன்( உயிர்சத்து), பாஸ்பரஸ்(மணி சத்து) மற்றும்
பொட்டாஷ்( சாம்பல் சத்து), ஆகியவை இலகுவாக வேர்வழியே தாவரங்களுக்கு செல்ல, மண்ணை இலகுவாக்கி தருகிறது.
வளிமண்டலத்திலிருந்து இலவசமாக 78% நைட்ரஜன் கிடைக்கும் போது,வெறும் 46% மட்டுமே நைட்ரஜனை கொண்ட யூரியா விவசாயிகளின் மத்தியில் விற்பனைக்கு பிரபலமானது.
இயற்கை உரம் இல்லாத காரணத்தால்,மண் கடினமானது.
இரசாயன உரம் மண்ணில் உள்ள உயிர்களை அழித்து மண்ணை கெட்டிப்படுத்தி விடுவதால், ட்ராக்டர் கொண்டே உழவேண்டிய சூழல்,இதனால் ஏரோட்டி உழும்போது கிடைக்கும் மாட்டு சாணம் கிடைக்காது.
மேலும் இரசாயன உரங்களில் உப்பு அதிகமாக இருப்பதால், "உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான்" என்பதற்கிணங்க, விவசாயத்திற்கு அய்ந்து மடங்கு தண்ணீர் அதிகமாக தேவைப்படுவதோடு, தண்ணீரின் தரமும்
கேள்விக்குரியதாகி விடுவதோடு, நிலத்தடி நீரையும் மாசுபடுத்தி விஷத்தன்மையை பரவ வழி வகுத்து விடுகிறது.
ஆனால், மண்புழுவும்,மற்ற உயிரினங்களும் நிலத்திற்குள் நீர்பிடிப்பு அதிகமாகும் வகையில் செயல்படும் என்கிறார்.
இந்த ஹைகூவின் மூலம் மண்புழு உரம், இயற்கை வேளாண்மை, மண்வளம், உயிரியியல், இன்னும் பல்வேறு தளங்களில் பயணிக்க வைத்து பாரம்பரிய வேளாண் முறைக்கு திரும்ப ஒரு நினைவூட்டல் அளிக்கிறார்.
8
🌳
காலையில் பூபாளம்
மாலையில் நீலாம்பரி
மரம் வளரும் வீடுகள்.
🌳
இந்த ஹைகூ சொல்லும் சூழலியல் கருத்து மிகவும் முக்கியமானது.
மரம் நட்டால் மழை வரும் என்றொரு பொது கருத்தை கடந்து, மரங்களை நடுவதன் மூலம் பல்லுயிர் பெருக்கமும் ஒரு மைக்ரோ க்ளைமேட்டும் அங்கு உருவாகும் என்பதையும் உணர்த்தும் ஒரு சூழலியல் ஹைகூ.
நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் ஒன்று இங்கு நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலாது.
கிளி வளர்த்தேன்
பறந்துவிட்டது
அணில் வளர்த்தேன்
ஓடிவிட்டது
மரம் வளர்த்தேன்
இரண்டும் திரும்பி வந்து விட்டது
-கவிஞர் அப்துல்கலாம்
இந்த கவிதையின் நீட்சியாக இந்த ஹைகூவை காண்கிறேன்.
மரம் உள்ள வீடுகளில் பறவைகள் வாசம் செய்யும். காலையில் பூபாளம் பாடி எழுப்பும் கடிகாரங்கள் அவை. மாலையில் கூடடையும் போது போடும் கெச்சட்டம் நீலாம்பரி என்கிறார் கவிஞர்.
இயற்கையோடு எந்த ராகம் எதற்கு என்ற இசையறிவையும் ஊட்டும் ஹைகூ இது.
புத்தனின் தோளில் புறா அமரும்... காரணம் சாந்தமும், அன்பும் கொண்ட மனிதர்களை உயிர்கள் வணங்கும்...
அப்படிதான் மரம் கொண்ட வீடுகளில் வாழும் மனிதர்களும், அங்கு பறவைகள் தோளில் அல்ல, குடியே புகுந்து விடுகின்றன.
ஒரே ஒரு மரத்திற்கே இப்படியென்றால், நிறைய மரங்கள் வளர்த்தால் நிறைய பறவைகள் வருகை தருமே...
பறவைகளினால் என்ன பயன்..
விதைகளை பரப்புவதில் முக்கிய பங்கு பறவைகளுக்கு உண்டு, கூடவே உணவுச் சங்கிலியில் வண்டுகள், பூச்சியினங்களை உண்டு சூழலியலை சமன்நிலையில் வைத்திருக்கும் பெரும் பணிகளை செய்பவை பறவைகள்.
கூண்டு பறவைகளை வீட்டின் முகப்பில் தொங்கவிடும் பழக்கம், நாகரிகத்தால் வளர்ந்து விட்டோம் என்று சொல்லும் பலரின் வீட்டிலும் உள்ளது, அதற்கு குட்டு வைக்கிறது இக்கவிதை.
கூண்டு பறவைகள் முகாரியை அல்லவா பாடும்.
இன்னிசை எங்கே பிறக்கும், உயிர்கள் மகிழ்ந்திருக்கும் நொடியில் இசை பிறக்கிறது, உயிர்கள் எங்கே உயிர்ப்புடன் இருக்கும், உயிர் வாழ தேவையான பிராண வாயு இருக்குமிடமே உயிர்கள் இசைக்குமிடம், இசையுமிடம்.
ஒரு மரம் இரண்டு தொழிற்சாலைகளுக்கு சமம் எனும் பிராண வாயுவை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்று.
கரியமில வாயுவை உறிஞ்சிக்கொள்ளும் தொழிற்சாலை இரண்டு. இத்தகைய தொழிற்சாலை ஒரு இன்னிசை மேடையாக, விதை பரப்பும் உயிரினத்தை கொண்டாடும் குடியிருப்பாக, நிழல் தரும் தன்னலமற்ற உயிராக, வளர்ந்து நிற்கிற மரங்களை, பறவைகளை ஒரு சேர கொண்டாடி, வீட்டில் முகாரியை ஒலிக்க விடாது இன்னிசையை ஒலிக்க விட இயற்கை அளித்த கடிகாரத்தை கொண்டு உடல் நலன் பேண சூழலியல் சமனை உணர என பல்வேறு செய்திகளை தாங்கியுள்ளது இந்த ஹைகூ.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.
என்ற குறள் தான் பல்லுயிர் அதாவது Bio diversity பேசுகிற ஒரு இலக்கியமாக அறிந்துணர்ந்தேன். அதன் வழி வந்த தமிழர்தம் மரபின் நீட்சிதான் இந்த ஹைகூ
இயற்கையைப் போற்றி கொண்டாடு என்பதை சுருக்கமாக, திருக்குறள் போன்று இக்கால மக்களுக்கு புரியும் வண்ணம் எளிய சொற்களில் அடர்வான பொருண்மையுடன், இனிய இசையுடன் சொல்லும் இந்த ஹைகூ ஒரு சூழலியல் ஹைகூ என்பது தெளிவாக புலப்படுகிறது.
9
🌳
மரத்தடியில் கடவுளா
மரமே கடவுள்தான்
மூச்சுக் காற்றும் அதன் அருள்.
🌳
மிக அற்புதமான சூழலியல் கவிதை. கூடவே நம் முன்னோர்களின் அறிவார்ந்த செயலும், அதை இன்று உணராது கடவுளை எடுத்துக்கொண்டு மரத்தை வெட்டித்தள்ளும் மடமையை எள்ளி நகையாடுகிறது.
மரமே இறைத்தன்மை கொண்டதாக, நம் முன்னோர்கள் கொண்டாடினார்கள். பிறப்பு முதல் இறப்பு வரை மரத்துடன் பயணித்த மனிதன், அம்மரம் வழங்கும் மூச்சுக்காற்றையும், மற்ற நலன்களையும் சந்ததியினர் பெற வேண்டும் என்றே மரத்தை இறைமையாக போற்றி வணங்கினர். இன்றும் வனங்களில் வனத்தேவதையாக மரங்களையே வழிப்படுகிறோம்.
உத்தமர்தாம் ஈயுமிடத்து ஓங்குபனை போல்வரே
மத்திமர்தாம் தெங்குதனை மானுவரே—முத்தலரும்
ஆம் கமுகு போல்வார் அதமரவர்களே ( வெண்பா)
இதில் பனை, தென்னை, வாழை பற்றிய விவரணைகளும், அதற்கு ஒப்பான மனிதர்களையும் விவரிக்கிறது.
சங்க காலத்தில் ஒவ்வொரு மரத்தை பற்றியும் பதிவு செய்திருக்கிறார்கள்.
காளிதாசரின் சகுந்தாலத்தில் முழுக்க முழுக்க தாவரங்களின், விலங்குகளின் அன்பை பாடியிருப்பதை போல் பச்சையம் என்பது பச்சை ரத்தம் நூலும் முழுமையாக சூழலியலை பாடியிருக்கிறது.
அரச மரம், ஆலமரம், வேப்ப மரம்,கடம்ப மரம், கொன்றை மரம், வில்வ மரம் போன்ற மரங்களை தொன்றுதொட்டு தமிழர்கள் கடவுளாக வணங்கி வந்ததற்கான சான்றுகள் அகநானூறு, நற்றிணை, புறநானூறு ஆகியவற்றில் பதிவாகி உள்ளன.
கடவுளாக மட்டுமின்றி, மகனாக, தங்கையாக, தோழியாக மரத்தை கொண்டாடிய மாபெரும் பண்புடையோ தமிழர்.
இந்நிலையில், சாலையை அகலமாக்கும் பொருட்டு மரங்களை வெட்டிவிட்டு, மரத்தடியில் இருக்கும் கடவுளர் சிலைகளுக்கு, டைல்ஸூம், கான்கிரீட் கூரையுமிட்ட கோயில்கள் கட்டுகின்ற, இன்றைய சமூகத்திடம் கேட்கும் கேள்வியாகவும், பதிலாகவும் இந்த ஹைகூ நிற்கிறது.
மரத்தடியில் கடவுளா?
மரமே கடவுள் என்ற கவிதையில் மூச்சு காற்றே அதன் அருள் என்பதுதான், சாலையை விரிவு செய்து, வாகனத்தை தொழிற்சாலைகளை பெருக்கி கரியமில வாயுவை அதிகமாக உமிழ செய்யும் மானுடமே, நீ வெட்டும் மரமல்லவா, அந்த கரியமில வாயுவை சுவாசித்து, நமக்கு வேண்டிய மூச்சுக் காற்றை அருள்கிறது.
மரத்தை வெட்டிவிட்டு, கரியமில உமிழ்வை அதிகரிக்கும் உன் மடமை எள்ளலுக்கு உரியது அல்லவா? மரத்தினடியில் கடவுளா? மரமே கடவுள்தான் உணர்ந்து செயல்படு என்று கூறும் இந்த ஹைகூ மூலம் மரத்தின் தன்னலமற்ற சேவை புரியும். மனிதனுக்கு வேண்டாதவற்றை தான் உண்டு, உயிர்ப்புடன் நாமிருக்க மூச்சுக்காற்றை அருளும் மரமே கடவுள் என்கிறது ஹைகூ. உண்மைதானே.
முல்லை தாய கல் அதர்ச் சிறு நெறி
அடையாது இருந்த அம் குடிச் சீறூர்த்
தாது எரு மறுகின், ஆ புறம் தீண்டும்
நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்து,
உகு பலி அருந்திய தொகு விரற் காக்கை 5
புன்கண் அந்திக் கிளைவயின் செறிய,
படையொடு வந்த பையுள் மாலை
இல்லைகொல் வாழி தோழி! நத்துறந்து
அரும் பொருட் கூட்டம் வேண்டிப்
பிரிந்து உறை காதலர் சென்ற நாட்டே?
நற்றிணை 343
விழுதுகள் கொண்ட
ஆலமரத்துக் கடவுளுக்கு
மக்கள் பொங்கலிட்டுப் படைத்து,
காக்கை உண்ணுவதற்காக வைத்த பலிச்சோற்றை உண்ட,
தொகுத்துப் பற்றும் விரல்களைக் கொண்ட காக்கைகள்
கிளைகளில் படைப்படையாக மாலையில் அமர்ந்திருக்கும். என்பதாகல் தொடரும் இப்பாடலிலும்...
கடவுள் ஆலத்துத் தடவுச்சினைப் பல்பழம்
நெருநல் உண்டனம் என்னாது, பின்னும்
செலவுஆ னாவே, கலிகொள் புள்ளினம்;
அனையர் வாழியோ இரவலர்; அவரைப்
புரவுஎதிர் கொள்ளும் பெருஞ்செய் ஆடவர் 5
உடைமை ஆகும், அவர் உடைமை;
அவர் இன்மை ஆகும், அவர் இன்மையே.
- புறநானூறு 199லும்
ஆலம் கடவுள் என போற்றப்பட்டிருப்பது தெளிவாகிறது.
மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்
கொடியோர்த் தெறூஉம் என்ப யாவதும்
என்ற குறுந்தொகை பாடலில் (மரா -கடம்பம்) கடம்ப மரத்தில் வாழும் கடவுள் முன் தலைவன் தலைவிக்கு உறுதி கூறுவதாக பாடல் மூலம் கடம்ப மரம் கடவுளாக வழிப்படப்பட்டது
புலனாகிறது.
எரிமருள் வேங்கைக் கடவுள் காக்கும், குருகார் கழனியின் இதணத்து ஆங்கண்
என்ற நற்றிணை பாடலும் வேங்கை மரத்தை வணங்கியதை புலப்படுத்துகிறது.
சங்ககால இலக்கியத்தின் தொன்மம் என்பது இயற்கையை வழிபடுதல், அதனினும் குறிப்பாக மரங்களை வழிப்படுதல். உருவ வழிப்பாடும், அவித்த சோறிட்டு படைத்தலும் தமிழரின் மரபன்று என்பதையும் இப்பாடல் பதிவு செய்கிறது.
சமூகமே ! உணர்ந்துக்கொள், நீ உயிர்வாழ மூச்சுக்காற்றை வரமளிக்கும் மரமே இறைமை என்கிறார் கவிஞர்.
10
🌻
விதையில் இருக்கிறது
பிரபஞ்சத்தின்
மூலப்பத்திரம்
🌻
Lao Tzu - To see things in the seed, that is genius.
விதையின் ஆற்றலை கண்டறிபவனே மேதை என்கிறார் லாவோட்ஸ்.
பல்லாயிரக் கணக்கானோர் தினம் ஏதோ ஒரு தானியத்தை பார்க்கிறோம், அதன் மூலப்பத்திரம் எதுவென்று உணர்வதில்லை.
விதையை நோக்கும் எல்லோராலும் அதிலொரு பூத்து, காய்த்து, கனிந்து, பல்லுயிர்களுக்கு வாழ்வளித்து, மழைகொடுக்கப்போகும் மரமொன்று இருப்பதை தரிசித்து விட முடிவதில்லை. அப்படி தரிசிக்க முடித்தவரை லாவோட்ஸ் மேதமை நிறைந்தவர் என்கிறார்.
ஞானம் நிறைந்தவர் என்றே நான் சொல்வேன்.
லாவோட்ஸ் இந்த வாசகத்தை, ஒரு சிறு சிந்தனை, பெரும் மாற்றத்தை தரக்கூடும் என்பதை உணர்த்துவதற்காக சொல்லியது.
உண்மையில், விதை என்ற ஒரு சொல் எவ்வளவு அற்புதமான சொல்...
என்ன அற்புதம் என்றால் "die to grow" என்பதுதான் விதையின் சிறப்பு. எல்லா விதைகளும் வளர்ந்து விடுவதில்லை என்றாலும், அமைதியாக உறங்குவதில்லை.
விதை என்பதின் பொருள் பண்பாக கீழ்கண்டவற்றை கொண்டுள்ளன.
நவீன, மகிழ்ச்சியான, திறமையான,நிதானமான, அதிர்ஷ்டம்,கொந்தளிப்பான, தீவிர,செயலில், படைப்பு, கவனத்துடன் ,தாராள , நட்பு எனில் விதை என்ற சொல்லின் அடர்வு புரிய வருகிறது.
ஒரு சின்னஞ்சிறு விதையால் பெரியதொரு காட்டை உருவாக்க முடிகிறது. சின்னஞ்சிறு விதையால் பூமியின் பெரும்பரப்பை தன் வசமாக்க முடிகிறது.
வெளியில் இருந்து வரும் ஒளியையும், மண்ணின் சத்துக்களையும், நீரையும் உண்டு விடா முயற்சியால் மேலெழும் விதைதான் இப்பிரபஞ்சம் இயங்குவதற்கான முன்னோடியும். அப்படியாக மனிதனும் வெளியில் இருந்து கிடைக்கும் இறைத்தன்மையை கொண்டு அகத்தை திறந்துக்கொள்ள வேண்டும்.
A seed will open many doors
மூலப்பத்திரம் என்றொரு சொல் மிக முக்கியமானதாக கருதுகிறேன்.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் பரவலாக பரவி வரும் காலத்தில் பிரபஞ்சத்தின் மூலப்பத்திரம் விதையில் இருக்கிறது என்பது ஒரு எச்சரிக்கை குரலாகவும் உணர்கிறேன்.
மூலப்பத்திரம் பத்திரம் என்பதாகவும் கேட்கிறது இக்குரல்.
விதை தானியங்களை நாமே சேகரித்திருந்த போது, நம்மின் பிரபஞ்சம் நம்முடையதாக இருந்தது.
மரபணு மாற்றமெனும் மாய அறிவியல் பிசாசு உள்நுழைந்து மூலப்பத்திரத்தை உரியவரிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கும் அபாயம் நிகழ்கிறது என்பதை உணர்ந்தும், உணர்த்தியும் சூழலியல் அக்கறையை சொல்லும் ஹைக்கூவாக மிளிர்கிறது.
ஒரு விதையில் இருந்து ஒரு பிரபஞ்சம் வருகிறதெனில், முந்தைய பிரபஞ்சத்தில் இருந்துதான் விதை வந்திருக்க வேண்டும். பெருவெடிப்பு மற்றும்குவாண்டம் இயக்கவியலை தொடர்புபடுத்தும் ஒரு அண்டவிடலாகவும் தோன்றுகிறது. பிரபஞ்சம் Sexual ஆ அல்லது asexual propagation ஆ என அறிவியல் ஆய்வு கொண்டால், ஆய்வின் ஆழத்தில் கிடைப்பது கவித்துவமேயன்றி வேறில்லை.
அந்த கவித்துவதை, அகழ்ந்து ஆய்ந்து பாராமல், லாவோட்ஸ் கூறியது போல் கண்டமாத்திரத்தில் உணர்வதென்பது மேதைமையோ அல்லது ஞானமோ அன்றி வேறில்லை.
மூலப்பத்திரத்தை பத்திரப்படுத்த கவிஞர் விடுத்துள்ள குரலை செவிமடுத்து, சூழலியல் காப்போம்.
The seed cannot know what is going to happen. The seed has never known the flower, and the seed cannot even believe that he has the potentiality to become a beautiful flower. ~ Osho
ஆனால், ஒரு கறுமையான அல்லது அழுக்கு நிறமான விதையிலிருந்து இவ்வளவு ஆற்றல் வெளிவரும் என்றுணர்ந்து, சரியான் சூழலில் பயிர் செய்ய முற்படுவோரே... விதையின் ஆற்றலை தரிசிக்கும் பேறு பெற்றோர்.
இக்கவிதை அப்பெரும் தரிசனத்திற்கு நம்மையும் விரல் பிடித்து அழைத்து செல்கிறது என்பது மறுக்கப்பட முடியாத பேரூண்மை ஆகும்.
11✅
🌳
கிழிந்தது ஓசோன் வளையம்
மௌனமாய்
கூரை வேயும் மரங்கள்.
🌳
இந்த ஹைகூ சூழலியல் ஹைகூ என சொல்ல வேண்டுமா என்ன?
இன்றைய காலநிலை மாற்றம் குறித்து பல்வேறு விவாதங்களும், ஆய்வுகளும் நடந்து வருகின்றன.
காலநிலை மாற்றத்தை உருவாக்கும் ஓசோன் பற்றிய ஹைகூ எழுதியதற்கே கவிஞருக்கு ஒரு பாராட்டு தெரிவிக்க வேண்டும்.
ஓசோன் என்பது மூன்று ஆக்ஸிஜன் அணுக்களை கொண்டது ( O3). பூமியிலிருந்து 50 -60 கி.மீ உயரத்தில் 20-25 கி.மீ அடர்த்தி அளவிற்கு படர்ந்துள்ள இப்படலம்தான் ஓசோன் படலம்.
சூரியக் கதிர் வெளியிடும் அகசிவப்பு பூமிக்கு வெப்பத்தை கொண்டு செல்கிறது.
பூமியில் வாழும் உயிரினங்களுக்கு பெரும் பாதிப்பை தரும் புற ஊதா கதிர்களுடமிருந்து பூமியை காப்பற்றுவதில் பெரும்பணியாற்றுகிறது ஓசோன் படலம்.
ஓசோன் படலத்தில் துளைகள் ஏற்பட்டுள்ளது, அதாவது ஓசோன் படலம் கிழிந்து விட்டது.
ஓசோன் எப்படி கிழிந்தது? கிழிந்ததால் ஏற்படும் பிரச்சினைகள்...பற்றிய சிந்தனையை தூண்டி அதற்கான தீர்வையும் மூன்றே வரியில் சொல்லியிருப்பதுதான், இந்த ஹைகூவின் சிறப்பு ஆகும். காலநிலை மாற்றத்தை பாடும் ஒரு ஆகச்சிறந்த சூழலியல் ஹைகூவாக ஜொலிக்கும் இந்த ஹைகூ, ஒரு கவிஞர் சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய தொண்டயாற்றியுள்ளது என்றே கூறுவேன்.
ஓசோன் எப்படி கிழிந்தது என்ற சிந்தனையை தூண்டுகிறது ஹைக்கூவின் முதல் வரி
"கிழிந்தது ஓசோன் வளையம்"
ஓசோன் சேதமடைவதற்கு முக்கிய காரணம் குளோரோ புளூரோ கார்பன் என்பதும் 1985ல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குளோரோ புளூரோ கார்பன், அன்றாடம் நாம் உபயோகிக்கும் குளிர்சாதனப் பெட்டி, ஏசி, ஏர் கூலர்கள், தொழிற்சாலை ஆகியவற்றில் குளிரூட்டுவதற்கு பயன்படுத்துகின்றனர். இதிலிருந்து வெளியேறும் வாயு, நூறு வருடம் வரை அப்படியே இருக்கும்.
சூரியக்கதிர்கள் வாயுவின் மீது படும்போது நடைபெறும் வேதியல் மாற்றத்தால், ஓசோன் ஆக்ஸிஜனை இழுத்துக்கொண்டு கார்பன் மோனாக்சைடாக மாறுகிறது. இதனால் வளி மண்டலம் முழுவதுமாக சிதைக்கப்படுகிறது. இந்த காரணங்களுக்காக 1987 ஆம் ஆண்டு இந்த குளுரோ புளுரோ கார்பன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதற்கு பதிலாக குளோரின் இல்லா ஹைட்ரோ புளுரோ கார்பன், குளிர்சாதனப் பெட்டியில் உபயோகிக்கப்படுகிறது.
இவ்வளவு அதிமுக்கியமாக கவனப்பட வேண்டிய செய்தியைதான் ஹைகூவின் முதல் வரி கூறுகிறது.
குளிர்சாதனப் பெட்டி, ஏ.சி ஆகியவற்றை குறைவாக பயன்படுத்தவும், தவிர்க்க முடியாத சூழலில் குளுரோ புளுரோ கார்பன் உள்ள சாதனங்களை தவிர்த்து, குளோரின் இல்லா ஹைட்ரோ புளுரோ கார்பன், உள்ள சாதனங்களை வாங்க கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தையும் சொல்கிற இந்த ஹைகூ காலத்தின் அவசியம்.
என்னென்ன பிரச்சினைகள் எனில் புற ஊதா கதிர்களின் அதீத வெப்பத்தால், பனிக்கட்டிகள் உருகுவதன் மூலம் கடல் மட்டம் உயர்தல், அதனால் நிலப்பரப்பு அழியும் அபாயமும், அதிக வெப்பத்தினால் வறட்சி அதிகரிக்க துவங்கும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, மனிதர்கள் மற்றும் விலங்குகளை நேரடியாக எளிதில் தாக்கும் இதன் மூலம்தோல் புற்றுநோய், கண்ணில் சதை வளர்தல், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உடலுக்கு பல்வேறு விதமான நோய்களை உண்டாக்கும்.
தாவரங்களின் உற்பத்தி திறனையும் குறைத்து விடும், கடல்வாழ் உயிரினங்களை அழித்துவிடும் அபாயத்தையும் உருவாக்கிவிடும்.
தீர்வாக, குளுரோ புளுரோ கார்பன் உள்ள சாதனங்களை தவிர்க்க வேண்டும், மண்ணிற்கு ஊறு விளைவிக்கும் நெகிழி தயாரிப்புகளை குறைக்கவேண்டும்
தற்போது பருவ நிலை மாறுகிறது. இதன் காரணம் ஓசோன் படலமும் புவி வெப்பமயமாதலுமே ஆகும். மரத்தை வெட்டி, காடுகளை அழித்து, புவிவெப்பமாதலுக்கு வழிவகுக்கின்றனர். மரங்களை அதிகளவில் வளர்த்து காடுகளை காத்தால், புவிவெப்பமயமாதலை தடுப்பதோடு, வளிமண்டலத்தையும் காக்கலாம்.
அதைதான் அடுத்த இரண்டு வரிகளில்
மௌனமாய்
கூரை வேயும் மரங்கள்
என்கிறது ஹைகூ. இயற்கை, இயன்றவரை ஏற்பட்ட அழிவை சீர்செய்யவே முயற்சி செய்கிறது. ஆனால் மனிதனின் தொடர் வன்முறையால் வலுவிழக்கும் இயற்கையின் கண்கூடான காட்சிதான் கிழியும் ஓசோன் படலம்.
இன்றைய சமூகத்திற்கும், வருங்கால சமூகத்திற்கும் தீங்கு ஏற்படாமலிருக்க வழிகூறும் இந்த ஹைகூ சுற்றுச்சூழலை பாதுகாக்க உறுதிமொழியினை ஏற்க வைக்கிறது.
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரிடர்களை சொல்லி முடியாது. அதை சரிசெய்ய வேண்டிய பொறுப்புணர்ந்த கவிஞராக இந்த ஹைகூவை படைத்துள்ள கவிஞருக்கு பாராட்டுக்கள்.
மரம் வளர்ப்போம் ! புவி வெப்பமயமாதலை தடுப்போம் !!
12✅
💦
வற்றியது நிலத்தடி நீர்
எலும்புக்கூடுகளாய் நிற்கும்
நகரங்கள்.
💦
நிலத்தடி நீரைப் பற்றிய ஒரு ஹைகூ...
நிலத்தடி நீரைப்பற்றியெல்லாம் கவிஞர்கள் கவலைப்பட மாட்டார்களா?
நீ குடித்ததால் தேநீர் கோப்பைக்கு
உன் இதழின் சுவை இப்படி எழுதுறவங்க, நீரைப்பற்றி, நிலத்தடி நீரைப்பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டாங்களான்னு உள்ளுக்குள் மருகிய காலமுண்டு.
இதோ, வரும் உலக தண்ணீர் தினம் மார்ச் 22/2022 ன் மய்யக் கருத்தாக்கமும், கவனமும் நிலத்தடி நீர்தான். இச்சமயத்தில் இந்த ஹைகூ பற்றி எழுதுவதில் மகிழ்கிறேன்.
இந்த ஆண்டின் மய்யக்கருத்து
Groundwater: making the invisible visible”
ஆங்கில வாசகமே invisible, visible என்ற முரணான சொற்களுடன் கவிதை போல் தோன்றுகிறது.
பூமி நிலைபெற நிலத்தடி நீர் மிக மிக அவசியம். உலகத்தின் குடிநீர் தேவையில் 50%, பாசனத்தேவையில் 40%, தொழிற்சாலையின் தேவையில் மூன்றில் ஒரு பங்கை நிலத்தடி நீரில் இருந்துதான் பெறுகிறோம்.
நிலத்தடி நீரே ஆற்றோட்டத்திற்கு உயிர்நாடி. அடியோட்டம் ( lateral and base flow) இல்லையென்றால், ஆற்றின் உயிர் கேள்வி குறியாகும். அடுத்து நிலச்சரிவு ஏற்படவும், சுற்றுச்சூழல் சமனை இழப்பதற்கும் வழிவகுத்து விடும் நிலத்தடி நீரின் குறைவு.
நிலத்தடி நீரின் குறைவால் காலநிலை மாற்றமும்.
கடல்நீர் உட்புகுதலும் (intrusion of sea water) நிகழ்கிறது.
கடல்நீர் உட்புகுதலால், நிலம் முழுதும் உப்புத்தன்மை பெறுவதால், பயிர்களும் வளர்ச்சிக்குன்றி உணவு பற்றாக்குறை ஏற்படுகின்றது.
உணவு பாதுகாப்பு ( Food security),
இருக்கும் நன்னீரும் உப்பு நீராதலுடன், வறட்சியை குறைந்த காலளவு கூட தாங்க இயலாத அளவிற்கு பயிர்கள் மாயும் அபாயமும் நடக்கின்றன என்பது கண்கூடு.
குரானில் 39:21ல் நிலத்தடி நீரைப்பற்றிய குறிப்பு உள்ளது.
Do you not see that Allah sends down rain from the sky—channelling it through streams in the earth—then produces with it crops of various colours, then they dry up and you see them wither, and then He reduces them to chaff? Surely in this is a reminder for people of reason.
39:21. "நிச்சயமாக அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி வைத்து, பிறகு அதனை பூமியில் ஊற்றுகளாக ஓடச்செய்கிறான் என்பதையும், பிறகு அதன் மூலம் பயிர்களை அதன் நிறங்கள் மாறுபட்டதாக வெளிப்படுத்துகிறான், பிறகு அது உலர்ந்து மஞ்சள் நிறமுள்ளதாக இருக்க காண்கிறீர் என்பதையும், பிறகு அதனை கூளமாக ஆக்குகிறான் என்பதையும் ( நபியே) நீர் ! பார்க்கவில்லையா? நிச்சயமாக இதில் அறிவுடையவர்களுக்கு உறுதியான படிப்பினை இருக்கிறது. (குரானில் பொழிப்புரையில் நிலத்தடி நீர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது)
என்பதை 1400 ஆண்டுகளுக்கு முன்பே குறிப்பிட்டிருப்பது வியப்பளிக்கிறது.
1400 வருடத்திய அறிவியல் செய்தியொன்றை, இளைய சமூகத்திற்கு கடத்தும்பெரும்பணியை இந்த ஹைகூ செய்கிறது.
ஆனால், இன்றோ அதன் நிலை, மனிதனின் அளவற்ற ஆசையினால் பூமித்தாயின் மேனியெங்கும் துளையிட்டு நிலத்தடி நீரை உறிஞ்சிவிடுகிறான்.
நிலத்தடி நீர் என்பது, பூமியின் தாய்பால் போன்றது, அதை முற்றிலும் உறிஞ்சிய பின், நகரங்கள் யாவும் உயிரற்ற எலும்புகூடுகளாய் நிற்கும் என்பதைதான் இந்த ஹைகூ சொல்கிறது.
எடுக்குமளவுக்கு மீண்டும் செலுத்த தவறுவது மனிதனின் பேராசையே அன்றி வேறில்லை.
அதைதான்...
India's great moral leader Mohandas Gandhi famously said that there is enough on Earth for everybody's need, but not enough for everybody's greed.
இன்னும் கூட இந்த மனிதர்களின் பேராசை குறையவில்லை...
மழைநீர் என்பது மண்ணிற்கும், மலை பொதும்புகளுக்கும், கடலுக்கும் போக மிச்சம்தான் மனிதனுக்கு. ஆனால் அந்த உணர்வே இன்றி, மண்ணை தொடாமல் நேரடியாக வேருக்கு நீர் வார்க்கும் அறிவியல் இன்று செயல்பாட்டிலும், விவாதத்திலும் இருக்கிறது.
மண்ணில் வாழும் சின்னஞ்சிறு உயிர்களுக்கு நீரில்லாது போகும், மண்ணின் சுவாசிப்பு நின்று போகும், நிலத்தடி நீர் குறைந்து போகும், நீர் மண்ணோடு வினை புரியும்போது கிடைக்கும் தாதுக்களை நிலம் இழக்கும். ( இதைக்குறித்து இரண்டு நாட்களுக்கு முன் நடந்த விவாதமொன்றில் என் கருத்தினை பதிவு செய்து இருக்கிறேன்)
உடனடி தீர்வாக தெரிந்தாலும், நீடித்த பயன் தரும் ஒரு அறிவியல் அல்ல அது. மாறாக மனிதன் பேராசையால் தினம் முட்டையிடும் வாத்தின் வயிற்றைக் கிழிக்கும் மடமைக்கு சமம் அல்லவா?
அதைதான் இந்த ஹைகூ சொல்கிறது. இதில் நகரம் என்ற சொல் மிக முக்கிய பங்கு வகுக்கிறது. நகரமயமாகுதலால், மக்கள்தொகை ஓரிடத்தில் குவியும்போது, குடி நீர், தேவையும், தொழிற்சாலை தேவையும் அதிகரிப்பதால் நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப்படுகிறது, அதனால் நகரங்கள் எலும்புக்கூடாக நிற்கிறது என்றொரு பொருளும் இதில் புதைந்துள்ளது.
நகரமயமாக்கல், மற்றும் நிலத்தடி நீரின் இன்றியாமை ஆகிய இரு சூழலியல் கருத்துக்களை இன்றைய நிகழ்வோடு ( எலும்புக்கூடாய்) கூறி ஒரு அச்சத்தையும், விழிப்புணர்வையும் ஒரு சேர தருகிற ஹைகூவாக மதிப்புறுகிறது.
13✅
🌳
மூத்த மரங்களைப் போல்
வேர்விட்டவை
ஆதிவாசிக் குடியிருப்புகள்.
🌳
இயற்கை என்பது அனைத்து உயிர்களையும் உள்ளடக்கியது.
மனிதனும் கடைசி படைப்பாக அதனுள் வருகிறான்.
எல்லா உயிரினங்களும் வனங்களில் மகிழ்ந்திருக்க, மனிதன் மட்டும் வெளியேறி, காட்டை அழிக்கும் பெருநோய் பீடித்து அலைகிறான்.
மண்ணை விட்டு அகலாத மூத்த மரங்களின் வேர்களென வனத்தை விட்டகலாத ஆதிவாசிகள்தான், இன்றைய இயற்கையை பாதுகாக்கும் பேராற்றலை பொக்கிஷமாக பெற்றவர்கள்.
காதலர் தினமும், முத்த தினத்தையும் அறிந்திருக்கும் யாருக்கும் ஆதிவாசிகளின் தினத்தையோ ( ஆகஸ்ட் 9), அதன் முக்கியத்துவத்தையோ அறிய வேண்டும் என்ற முனைப்பு இல்லாதிருக்கும் இன்றைய நாளில் ஆதிவாசிகளை பற்றிய ஒரு ஹைகூ என்பது போற்றத்தகுந்தது.
முதல் வரியில் "மூத்த மரங்களைப் போல்" என்ற வரி எவ்வளவு பேருண்மை !
ஆம் ஒரு தருவை போன்று ஆனந்தித்தும், இயற்கையோடு இணைந்தும், கொடுப்பதை இயல்பாகவும், பெறுவதைப் பற்றிய பிரக்ஞையற்றும், பிற உயிர்களோடு இணங்கியும், இயற்கை விதிகளை மதித்தும் வாழும் ஆதிவாசிகளை மூத்த மரம் என்று கூற காட்டைப்பற்றியும், ஆதிவாசிகளைப்பற்றியும் கூர்ந்த அவதானிப்பு வேண்டும் என்று வியந்து அடுத்த வரிக்கு சென்றால் அடடா !
"வேர்விட்டவை" தானாக இடம் பெயராதவை என்ற பொருளுடன், வேர்விட்ட மூத்த மரங்களை, பெயர்த்து வேறிடத்தில் நட்டால் என்னவாகும்?
மரமும் அழிந்து, மரத்தினால் பல்கி பெருகிய பல்லுயிர் (bio diversity) அழியும், அதனால் காலநிலை மாற்றமும், சூழலியல் சமமின்மையும் (ecological imbalance) நிகழும்.
அப்படிதான், ஆதிவாசிகளின் வேர்விட்ட குடியிருப்பை அப்புறப்படுத்தினால் காடழியும் என்கிறார் கவிஞர்
"வேர்விட்ட" என்ற ஒற்றைச்சொல்தான் இன்று நிகழும் ஓராயிர அரசியலை சொல்கிறது.
ஒரு மனிதனுக்கு வாழ்வில் கிடைக்க வேண்டிய ஆனந்தமும், ஞானமும் இயல்பாகவே இயற்கையின் மூலம் கிடைக்கிறதென்றால், அதை விடுத்து தனியாக படிக்க வேண்டும் என்றொரு அவசியமில்லை.
ஆனால், இயற்கையை உணர்ந்த பேரறறிவும், பேராற்றலும் கொண்ட ஆதிவாசிகளை வனபாதுகாப்பு சட்டம் எனும் பெயரில் வனத்தை விட்டு வெளியேற்றுவது எத்தகைய விளைவுகளை காட்டிற்கும், கானுயிர்களுக்கும் விளைவிக்கும் என்பது சமவெளி மனிதர்களுக்கு புரிவது மிகவும் கடினமான ஒன்றே.
Importance of habitat பற்றி அறிந்த பல வல்லுநர்கள் இயங்கும் குழுவே கூட, ஆதிவாசிகளை வனத்தை விட்டு வெளியேற்ற காரணமாக இருக்கின்றனர் என்பது நிதர்சனமான துயர்மிகுசெய்தி.
சாலையோர கானுயிர்களுக்கு, நாம் உண்ணும் தின்பண்டங்களை தருவதோ, வீட்டிற்கு கொண்டு வந்து வளர்ப்பதோ எப்படி சட்டப்படி தவறோ , அப்படியான ஒரு தவறுதான் ஆதிவாசிகளை இடம்பெற செய்தல்.
இயற்கையில் கிடைத்த கிழங்குகளை, கனிகளை தானியங்களை, தேனை உண்டு வந்தவர்களுக்கு, ரேஷன் அரிசி வழங்கப்பட்டது, அவர்களுக்கு அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டது, பெரியவர்கள் தம் பாரம்பரிய உணவை உண்டு கொண்டனர், ஆனால், சிறார்களோ தம் பாராம்பரிய உணவிற்கு பழக்கப்படாது துன்புற்றனர்.
இயற்கையில், யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டுப்பசுகளுடன் பேசவும், இருளில் பொருட்களை காணும் ஆற்றலும் கொண்டிருப்பவர்கள் நம் ஆதிவாசிகள்...
அதை, நூலாசிரியர் தனது நூலான "இருளும் ஒளியும்" நூலில்
விலங்கின் கண்கள் வேண்டும்
இருளை அறிய
என்றும்
இருளில் இருந்து புறப்பட்டவன்
இருளைப் பார்த்து
பயப்படுவதுதான் வியப்பு
என்றும் பதிவு செய்துள்ளார்...
இதன் மூலம், காட்டை விட்டு வெளியேறிய மனிதனின் நுண்புலன்கள் தன் கூர்மையை இழந்து விட்டதை குறிப்பிட்டிருக்கிறார்.
அதை தொடர்ந்து இந்நூலில் வேர்விட்ட ஆதிவாசிகள் குடியிருப்பு என்று முடித்து, பல செய்திகளை சொல்லாமல், புரிந்து செயல்படு என்பதாக
முடித்திருப்பதும், வாசகனுக்கு பல எண்ணக்கதவுகளை திறக்க வல்லவை.
ஆம் !
மூத்த மரங்களைப்போல்
வேர்விட்டவை
ஆதிவாசி குடியிருப்புகள்.
அவற்றை என்பதின் மூலம் அவர்களையும், அகற்றி விடாதீர்கள் என்ற வேண்டுகோளின் மூலம் காட்டின் பாதுகாப்பை முன் வைக்கிறார் கவிஞர்
வன உரிமைச் சட்டம் 2006 இவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறது.
ஓடும் நீரின் வேரையறுக்கும் வேதனை என்ன என்பதை அறியாதவர்கள்தாம், ஆதிவாசிகளை இடம்பெயர்ப்போர், வேர்விட்ட மரத்தை அகற்றினால் மண் சரியும்.
ஆதிவாசி குடியிருப்பை அகற்றினால் மனிதம் சரியும்...
உயிருக்கும், உணர்வுக்கும் பணமே இழப்பீடு எனும் கீழ்மையை அறியாதவர்கள் ஆதிவாசிகள்.
வேர்விட்ட மரங்களும், ஆறுகளும், ஆதிவாசிகளும், வனத்தாயின் கைரேகைகள்.
செரிவான மரங்கள் கொண்ட பகுதி காடெனும் அறியாமையில் ஆதிவாசிகளை அங்கு இடம்பெயர்த்து அவர்களின் பண்பாட்டை, கலாச்சாரத்தை, ஆழ்ந்த வன அறிவை அழித்து விடாதீர்கள் என்ற அறைக்கூவலே இந்த ஹைகூ.
14✅
🍿
ஒவ்வொரு தானியத்திலும்
எழுதப்படுகிறது
கார்ப்பரேட் பெயர்.
🍿
இன்றைய விவசாயிகளின் நிலையை, சூழலை இதைவிட வலிமையாக கூறிவிட முடியுமா?
ஒவ்வொரு தானியத்திலும்
என்ற முதல் வரி ஆழ்ந்த
சிந்தனைக்குரியது. ஆடிப்பட்டம் தேடி விதை எனும் சொறோடரும், அதன் பின்னுள்ள பெரும் அறிவியலையும் நினைவூட்டக்கூடியவை
பட்டம் என்பது காலநிலையின் குறியீட்டு வார்த்தை ஆகும். பட்டத்துக்கு ஏற்றவாறு பயிர் செய்வது மிகவும் முக்கியம் ஆகும்.
பாரம்பரிய விவசாயத்தில் பட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஒரு பயிர் சாகுபடி செய்த நிலத்தில் தொடர்ந்து மீண்டும் அதே பயிரைச் சாகுபடி செய்யவும் மாட்டார்கள்.
வருடத்தில் எந்தெந்தப் பட்டத்தில் என்னென்ன பயிர் சாகுபடி செய்ய வேண்டுமோ அந்தந்தப் பட்டத்தில் அந்தந்தப் பயிர்தான் சாகுபடி செய்வார்கள்.
ஆடிப்பட்டத்தில் தானியப் பயிர்கள் அனைத்தும் சாகுபடி செய்வார்கள், தவிரக் காய்கறிப் பயிர்களும் பெரும்பாலானவைற்றைச் சாகுபடி செய்வார்கள்.
மார்கழிப்பட்டம், மாசிப்பட்டம், சித்திரைப்பட்டம் என்றும் தமிழ் மாதங்களைக் கணக்கிட்டும் அந்தந்தப் பட்டத்துக்கு ஏற்ற பயிர்களைச் சாகுபடி செய்வார்கள்.
ஆடிப்பட்டத்தில் பாதி நிலத்தில் மானாவாரியாகச் சாமை விதைத்து கார்த்திகை, மார்கழி மாதங்களில் அறுவடை செய்யலாம்.
மீதிப் பாதி நிலத்தில் மாசி, பங்குனி மாதங்களில் சோளம் விதைத்து ஆனி மாதவாக்கில் அறுவடை செய்யலாம்.
மறு வருடம் சாகுபடி செய்யும்போது முந்தைய வருடம் சாமை விவசாயம் செய்த நிலத்தில் சோளமும், சோளம் விவசாயம் செய்த நிலத்தில் சாமையும்தான் சாகுபடி செய்வர்.
நிலத்தில் ஒரு பயிர் செய்தால் அந்தப் பயிரின் ஆயுளுக்குப் பின்னால் அவற்றின் கழிவுகளும் அவற்றில் அண்டி வாழ்ந்து வந்த நோய்க் கிருமிகளும், அடுத்து அதே பயிர் செய்யும்போது புதிதாகச் செய்யும் பயிரையும் பாதிக்க ஏதுவாகிறது.
மாற்றுப் பயிர் செய்யும்போது மாற்றுப் பயிர்களுக்கு முந்தைய பயிரின் கழிவுகள் எருவாகப் பயன்படுவதோடு முந்தைய பயிரில் தங்கி வாழ்ந்த நோய்க்கிருமிகளும் புதுப்பயிரைத் தாக்குவது இல்லை.
நோய்களும் நோய்க்கிருமிகளும் பயிருக்குப் பயிர் வேறுபடுகின்றன. அதனால் பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை. மாறாக கிருமிகளை அழிகின்றன.
குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின்னால் வேறெரு பயிர் செய்தபின்னால் மீண்டும் பழைய பயிர் சாகுபடி செய்வதால் எந்தப் பாதிப்பும் ஏற்படுவது இல்லை. இடைக்காலத்தில் அவை பெரும்பாலும் அழிந்து விடுகின்றன.
ஒவ்வொரு தானியமென்பது, அனைத்து பட்டங்களுக்கும் உரிய தானியங்கள் என்று கொள்ள வேண்டும்.
மண் வகை, நீரின் இருப்பு, காலநிலையை பொருத்து பயிரிட்டனர்.
காலநிலை கார்ப்பரேட் கையில் சென்றதும் பட்டங்கள் முறையின்றி, எவ்வகை மண்ணிலும், எல்லா வகை பயிர்களையும் பயிரிட ஒரு நிர்பந்தத்தை உருவாக்கியது கார்ப்பரேட், மண்ணாவது ஒண்ணாவது, கொடுக்கும் விதையை நடவு செய்,கொட்டு இரசாயன உரைத்தை என்றது கார்ப்பரேட். அமோக விளைச்சலின் ஆனந்தம் விடைப்பெறுவதற்குள் தெரிய வந்தது, நெல்லு கோட்டை போடுறதும், விதை தானியம் எடுத்து கலசத்தில் வைத்த பெரும் அறிவியலும் கார்ப்பரேட்டால் அடித்து செல்லப்பட்டது.
விளைந்ததெல்லாம் விதையாக முடியா மலட்டுப்பயிர்கள், மீண்டும் சாகுபடி செய்யணுமா, விதைக்கு கையேந்தி நிற்க வேண்டிய நிலை.
அதுமட்டுமின்றி, முதல் உலகநாடுகளின் கைதான் கார்ப்பரேட் ஆக இருக்க, மூன்றாம்
உலக நாடுகளின் இயற்கை வளங்களை கொள்ளையடித்தது எப்படி "மறைநீராக", மறைவளமாக...
கோக்கோ உண்வாக இல்லாத நாட்டில் கோகோவை விதைக்க வைத்தது, மானியம் கொடுத்து, நீர்வளத்தை மறைமுகமாக சுரண்டிக்கொண்டது. இப்போது நம் நாட்டின் பட்டங்களில் விளையும் தானியங்கள் மட்டுமல்ல உலகளாவிய
" ஒவ்வொரு தானியத்திலும்
எழுதப்படுகிறது
கார்ப்பரேட் பெயர்"
எனில், உலகெங்கும் இருக்கும் மூன்றாம் உலகநாடுகளின் நீர்வளம் மறைமுகமாக சுரண்டப்படுகிறது.
எதை, எவ்வளவு, எங்கே விதைக்க வேண்டும் என்பதை கார்ப்பரேட் முடிவு செய்கிறது. அந்த தானியம் எங்கெங்கு செல்ல வேண்டும் என்பதையும் அதுவே முடிவு செய்கிறது. உணவு பாதுகாப்பு ( food security) என்பதும், நீர்வளமும், கேள்விகுறியாகி உள்ளது.
அய்யா, நம்மாழ்வார் அவர்கள் கூறியது போல் availability, accessibility, affordability என்பதை உற்று நோக்கினால் கார்ப்பரேட்டின் பெயர் எப்படி ஒவ்வொரு தானியத்திலும் எழுதப்பட்டிருகிறது என்பது புரியும்.
தானியம் என்ற சொல் ஒரு குறியீடு... அதன் பின், காய்கறிகள், கனிகள், மாமிசங்கள், முட்டைகள், உடைகள் என ஏராளமான பொருட்களும் இருக்கின்றன.
நாம் இட்லி சாப்பிடுவதிலிருந்து நூடுல்ஸூக்கு மாறிவிட்டோம் என்றால், இளநீரில் இருந்து கோக், பெப்ஸிக்கு மாறி விட்டோம், வடையிலிருந்து பீட்ஸா, பர்க்கருக்கு மாறிவிட்டோம் என்றால், நம்மின் சுவையரும்புகள் யாரின் கட்டுப்பாட்டில் உள்ளன? என்ற அதிர்வூட்டும் கேள்வி எழுகிறது.
அரிசி, பருப்பு எல்லாம் எங்கே செல்கிறது, முட்டை எங்கே செல்கிறது... முதலாம் உலக நாடுகளில் வசிக்கும் அரிசியை,பருப்பை உணவாக உட் கொள்வோர்க்கும், மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக (Value added product) மற்றோருக்கும் செல்கிறது.
டஸ்ட் என்றால் தூசி, தூசியான டீத்தூள்தான் விளைவிப்பவனுக்கு, ஆட்டிவிப்பவனுக்கு முதல்தர தேயிலை.
கோக்கோ, வெண்ணிலா, மல்பெர்ரி, ஊறுகாய் வெள்ளரிக்காய் என பல்வேறு பயிர் வகைகளிலும் கார்ப்பரேட் தன் பெயரை, ஒவ்வொரு மூன்றாம் உலக நாடுகளின் மண்ணையும், தண்ணீரையும் குழைத்து, அந்நாட்டு மக்களின் வியர்வை சிந்த சிந்த எழுத வைத்துக்கொண்டது.
சொந்த விதையில்லை, நீர்வளம் மறைநீராய் கொள்ளைப்போகும், நம் உழைப்பு சுரண்டப்படும், ஆனால் நம் பெயர் எதிலும் இருக்காது.
இதற்கும் முன்பாக J. C குமரப்பா அவர்கள் சொல்லிய கருத்தாக்கம் கொண்ட நூல் ஒன்றை கவனம் கொள்ள செய்கிறது இக்கவிதை
Animal based economy and machine based economy. ஐ விரிவாக பேசும் நூல் மாடுகளை விற்று, ட்ராக்டர் வாங்கிய பின் மகசூல் கூடியது, அது தேவைக்கு அதிகமான உற்பத்தியாகி, சேகரிக்க இடமின்றி வீணாக போனது, வறுமை கோடுதான் மேலும் கீழுமாய் மாற்றி மாற்றி வைக்கப்பட்டதே தவிர. வறுமையின் நிலை அங்கேயேதான் நிற்கிறது, அல்லது இன்னும் கீழே சென்று விட்டது.
இன்னும் இன்னும் இதை குறித்து பேச நிறைய நிறைய உள்ளது.
நிதர்சனத்தை நச் என முகத்தில் அறையும்படி சொல்லும் சூழலியல் கவிதை இது என்றால் அது மிகையல்ல.
ஆம் !
ஒவ்வொரு தானியத்திலும்
எழுதப்படுகிறது
கார்ப்பரேட் பெயர்.
பூமிக்காக அடித்துக்கொண்டு சாகும் மக்களே! அதில் விளையும் நெல்லில் நம் பாட்டன் பெயரில்லை, நம் தகப்பன் பெயரில்லை, நம் பெயரில்லை, நம் மகவின் பெயருமில்லை, ஆனால் நம் ஒவ்வொருவரிலும் பெயரிலும் கடன் இருக்கிறது மக்களே.
அதைதான் சாட்டையென சுழட்டியிருக்கிறது இந்த ஹைகூ.
இதற்கு வரையப்பட்டிருக்கும் படம் ultimate.
இந்த கவிதையின் மூலம், ஒரு இயற்கையின் காதலியாக நான் அடையும் மகிழ்ச்சிக்கு அளவில்லை, இந்த தமிழ் சமூகம், மீண்டும், அறிவியலை, சூழலியலை, பழந்தமிழர் மரபு வழியில் நின்று பாடுகிறது.
இனி பூமிப்பந்தை காக்க பல்லாயிர கரங்கள் விரையுமென நம்பிக்கை கொள்கிறேன்.
15✅
🎮
மின்னணுக் குப்பை
சொல்லவில்லையா
நம் அறிவே குப்பையென
🎮
மின்னணு இன்றைய உலகத்தை உள்ளங்கையில் தந்திருக்கிறது என்று இறுமாந்திருக்கும் நாம் மறந்து விட்டது... மின்னணு உபகரணங்களை தயாரிக்கும் போது உருவாகும் கழிவுகளையும்,பயன்படுத்த நிலையை அடைந்த மின்னணு உபகரணங்கள் குப்பையாக இவற்றையெல்லாம் எங்கே கொட்டுகிறோம்?அதன் விளைவுகள் என்ன என்பதை யோசித்திருக்கிறோமா?
மின்னணுக் குப்பைகளை கடலில் கொட்டுகிறோம், மற்றும் நிலத்தில் குவித்தும், எரித்தும் கடலை, நிலத்தை, காற்றை மாசுபடுத்தி விடுகிறோம்.
மின்னணு குப்பை என்ற ஒற்றை வரியில் விரிகின்ற செய்திகள்...
ஐ.நா.சபை அறிக்கையின்படி மின்னணுக் கழிவுகள் பிரச்சினையில் ஆசியாவில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரப்படி இந்தியாவில் மின்னணுக் கழிவுகளை உருவாக்குவதில் மும்பை முதலிடத்திலும், இரண்டாம் இடத்தில் தமிழகமும் உள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
ஒரு நிமிடத்திற்கு உலகில் எட்டு டன் எடையுள்ள மின்னணுக் குப்பைகள் உருவாகுவதாக ஆய்வு அறிக்கை ஒன்று அதிர்ச்சி தகவலை அளிக்கிறது... எதிர்காலத்தில் உலகமே ஒரு
குப்பைத்தொட்டியாக மாற்றிவிடும் அபாயம் இருக்கிறது.
2021 ல் மட்டும் தூக்கி வீசப்பட்ட மின்னணுக் குப்பைகள் 5.70 கோடி டன் எடை உடையதாக இருக்கிறது, இது சீனப் பெருஞ்சுவரின் எடையை விட அதிகம்.
இப்போது மூன்றாவது வரி மிகச் சரியானதாகும்...
நம் அறிவே குப்பை என்கிறது மூன்றாவது வரி சரிதானே.
ஆம் மிகவும் உண்மை, இதை குறித்து 2013 ம் ஆண்டு தினமலரில் பொள்ளாச்சி பகுதி செய்தியில் Impact of E -waste on water conservation என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.
இன்று சுமார் 9 ஆண்டுகள் கழித்து, அதன் கருப்பொருளோடு ஒரு கவிதையை காண நேர்கையில் மகிழ்வும், நிலை மாறாது, இன்னும் மோசமாகி இருப்பதை நினைத்து வருத்தமும் மேலிடுகிறது.
கடலில் கொட்டப்படும் மின்னணுக் குப்பையை உண்ணும் கடல்வாழ் உயிரினங்கள் மூலம் மனிதர்களின் உடலுக்கு இடம் மாறும் இந்த மின்னணுக் குப்பைகள் உருவாக்கும் நோய்கள் ஏராளம்.
துசுயந்தன் வரலாற்றில் சகுந்தலை ஆற்றில் தவறவிடும் மோதிரம் மீன் வழியே துசுயந்தனை அடைவதுதான், நீர்வாழ் உயிரினம் மூலம் கன உலோகங்கள் மனிதனை அடைந்தற்கான சான்று.
கடலில் எதை வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் கொட்டலாம் என்கிற மனிதனின் தட்டையான அறிவு குப்பையின்றி வேறென்ன.
கண்ணை விற்று சித்திரம் வாங்கும் மடமை,குப்பை அறிவுதானே.
கடலின் சூழல் Ocean Ecology) கெடுவதால் ஏற்படும் அபாயம் வனத்தை நிலைக்குலைய செய்யும்.
கடலும் வனமும் வான்வழியே பேசிக்கொள்ளும். கடல் வனத்திற்கு நிகராக 40% ஆக்ஸிஜனை கொடுத்து, கரியமில வாயுவை உறிஞ்சிக்கொள்ள கூடியவை. கடலின் மிகப்பெரிய
நீர்பரப்பிலிருந்து ஆவியாகும் நீரைதான், வனங்கள் மழையாக்குகின்றன என்ற மிக நுட்பமான அவதானிப்பை இழந்த சமூகத்திற்கு பச்சையம் என்பது பச்சை ரத்தம் என்ற நூலில் இந்த கவிதையை வைத்து அந்த நுட்பத்தை வெளிச்சமிடுகிறார் கவிஞர்.
கடல்வாழ் உயிரினங்களின் அழிவால், கடலின் வெப்ப நிலை மாறும்போது பெரிய காலநிலைமாற்றம் உருவாகுகிறது.
பசிஃபிக் பெருங்கடல் சூடாகி உள்ளது, காரணம் கடலின் அடியில் 14 லட்சம் சதுரகிலோமீட்டருக்கு Great pacific garbage patch ( பெரிய பசிபிக் குப்பை இணைப்பு ) உள்ளது, என்பதை சார்லஸ் மோர் 1992 ல் கண்டுபிடித்து சொல்லியிருக்கிறார்...
ஏற்கனவே காடுகளை அழித்து விட்டோம் என்பதால் கடல் தன்னியல்பில் உறிஞ்சும் கார்பன் டை ஆக்ஸைடை விட அதிகமாக உறிஞ்சுகின்றன... இதனால் கடலின் வெப்பம் மாற்றமடைகிறது.
இதன் மூலம் லாநினா, எல்நினோ போன்ற காலநிலை மாற்றங்கள் உருவாகின்றன.
ஏனென்றால், கடலுக்கடியில் கிடக்கும் குப்பையில் 46 % மீன்பிடி உபகரணங்கள், மீதமுள்ளவை
மின்னணுக் குப்பைகள்.
அதில் நெகிழி அதிகம், இவை துகள்களாக மாற 600 ஆண்டுகள் ஆகும்.
காலநிலை மாற்றத்திற்கும் அடிபோடும் இந்த மின்னணுக் குப்பைகள் பூமியின் யாவற்றையும் குலைத்து விடக் கூடியவை என்பதை அறியாத அறிவு குப்பைதானே.
இந்த மின்னணுக் குப்பையில் அதிகம் இருப்பது சிலிகான், காரியம், யிட்ரியம், வெள்ளி, கேலியம் தங்கம்,ஆர்சனிக், இன்டியம், டான்டுலம் என பல்வேறு தனிமங்கள், இவைகளை எரிக்கும்போது வரும் நச்சுவால் ஏற்படும் நோய்கள் கணக்கிலடங்கா.
சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தும் இந்த
மின்னணுக் குப்பை
சொல்லவில்லையா
நம் அறிவே குப்பையென
என சென்னையில் 1/2 கிலோ மீட்டர் அளவேயுள்ள ரிச் ஸ்ட்ரீடில் உலகில் தேடப்படும் பல மின்னணுக் பாகங்கள் இங்கு மலிவான விலையில் கிடைக்கிறது. மறுசுழற்சி, சரிசெய்து பயன்படுத்துதல் என்பதற்கு இடமே கிடையாது, தூக்கி வீசிவிட்டு புதிதாக வாங்கிகொள்ளும் நுகர்வோர் கலாச்சாரம் பெருக, மின்னணுக் குப்பையும் பெருகி விட்டது. இது சென்னையின் நிலை. மற்ற நகரங்களை எண்ணிப் பாருங்கள் !
வருங்கால சந்ததியினருக்கு குப்பை உலகத்தையா தந்து செல்லப்போகிறோம்.
எனில் நம் அறிவே குப்பைதானே.
இவ்வளவு கனமானதொரு செய்தியை தந்துள்ளன மூன்று வரிகள். அவசியமானதொரு சூழலியல் ஹைகூகளை தாங்கிய பச்சையம் என்பது பச்சை ரத்தம் நூல் இந்த பூமியை தைப்பதற்கான நூல் என்பதில் ஐயமில்லை.
16
🌿🐛
ஒரு புல் ஒரு பூச்சி
வாழும் வரை
இவ்வுலகம் வண்ணமயம்
🌿🐛
இந்த ஹைக்கூவை படித்தவுடன் நினைவுக்கு வந்தது, பாஷோவின் ஹைக்கூ ஒன்று.
ஒரு புல்லிதழ்
ஒரு மின்மினிப் பூச்சி
நிலங்கள் மீண்டும் பூக்கும்
-பாஷோ
ஒரு புல் ஒரு பூச்சி வாழும்வரைதான் இது உலகம். புல் பூச்சி என்ற உணவு சங்கிலியின் ஒற்றைக் கண்ணியை மட்டும் கூறி மற்றவற்றை வாசகரின் சிந்தனைக்கு விட்டது சிறப்பு. அழகு என்று சொல்லாமல் வண்ண மயம் என்பதன் மூலம் புல்,பூச்சி, மரம், மலர்,அதில் தங்க வரும் பறவைகள் என்பவற்றால் நிறையும் வண்ணங்களையும்... வான், முகில், மழை, வெய்யில், வானவில்,பனி என பல்வேறு பரிமாணங்களும் நிகழ வண்ணங்களால் மெருகேறும் உலகம் என்பதையும் சொல்கிறது ஹைகூ.
அழகு என்பதை விடவும் வண்ணமயம் என்ற சொல்லினால் விரிந்து பரந்த உலகின் வண்ணங்களைப் போலவே ஹைகூவும் விரிகிறது.
அழகு ஒவ்வொருவருக்கும் ஒன்று. வண்ணம் என்பது யார் நோக்கினும் ஒன்றே. பொதுவுடமையை சொல்கிறதோ ஹைகூ.
மகரந்த சேர்க்கை செய்ய ஒரு பூச்சியும், மலர்ந்து விட ஒரு புல்லிதழும் தேவை... அதுவே இப்பூமியை நிலைக்கொள்ள செய்யும், செய்கிறது.
வனத்தின் குறியீடாக ஒரு புல்லையும், ஒரு பூச்சியையும் கொள்ள வேண்டும். வனமே வண்ணம்.
ரவிவர்மன் அறியாத வண்ணங்களை எல்லாம் இயற்கை வனத்தில்தான் ஒளித்து வைத்திருக்கிறது.வண்ணமயம் என்பது நிறம் மட்டுமல்ல.... உயிர்களின் ஆனந்தநிலையையும் குறிக்கிறது.
மழைப்பொழிந்தால், பூமியெங்கும் உயிர்ப்புடன் அசைந்தாடும் உயிர்களின் வனப்புகளில் இந்த உலகத்தின் வண்ணத்தை காணலாம்.
அப்படியொரு மழையை கொண்டு வர ஒரு செடியும், ஒரு கானுயிரும் வேண்டும்.
ஒவ்வொரு உயிரினங்களிலும் ஒரு ஜோடியை தாங்கி மிதந்த நோவாவின் பேழைப்போல், இக்கவிதை உலகம் உய்ய இரு உயிர்களை தாங்கி நிற்கிறது.
இன்றைய நாளில்
#பச்சையம்_என்பது_பச்சை_ரத்தம் என்ற நூல் சிறந்த சூழலியல் கவிதைகளை கொண்ட நூல்... காலத்தின் தேவை. ஒரு தாவரத்தை தழுவிக்கொள்ளும் மழையின் ஆனந்தத்தோடு, காதலோடு வனத்தை தழுவி பச்சையம் பூசிக்கொண்ட இக்கவிதைகள் பசுமை மாறாது என்றும் வாழும்.
ஒரு புல் ஒரு பூச்சி
ஒரு சூழலியல் கவிதை நூல்
துளிர்க்க வைக்கும் வனத்தை.
பேரன்பில் நனைத்த
வாழ்த்துக்களுடன்
-கோ.லீலா