☕☕☕☕☕☕☕☕☕☕☕☕
வணக்கம் தோழமைகளே !
ஒரு கப் காஃபி குடிச்சுகிட்டே பேசுவோமா?
ஆமாங்க இன்று உலக காஃபி தினம்.
முதல் கப் ஆஃப் காஃபியை யார் தயாரிச்சா?
ஜீனி போட்டு குடிக்க கத்துக் கொடுத்தது யாரு?
இந்தியாவுக்கு எப்படி காஃபி வந்தது?
இப்படி நிறைய நிறைய பேசலாம் வாங்க....
அப்படியே டைம் மிஷினில் 9ம் நூற்றாண்டுக்கு போவோம் வாங்க...
இப்போ நாம இருக்குற இடம் கிழக்கு ஆப்பிரிக்கா.
அதாங்க டைம் மிஷினுக்கு வெளியில் போயிட்டிங்கனா எத்தியோப்பியான்னு சொல்வீங்க.
அங்க பாருங்க ! நிறைய ஆடுகள் மேயுதா?
அங்கேதான் நம்ம ஹீரோ கல்டி ஆடு மேய்கிறார் பாருங்க. அந்த ஆடுங்க ஏதோ ஒரு பழத்தை சாப்பிடுதுங்க பாருங்க...
என்ன இது ஆடெல்லாம் இவ்ளோ சுறுசுறுப்பா இருக்கே....
வாங்க கல்டி கிட்டே கேட்போம். என்ன கல்டி சார் ஆடெல்லாம் சுறுசுறுப்பா ஆயிடுச்சு.
அதான் நானும் சாப்பிட்டு பார்த்தேன், எனக்கும் சுறுசுறுப்பா இருக்கு...
வாங்க, மொரோக்கோ நாட்டை சேர்ந்த நூரூதீன் அபு அல் ஹசன் வந்திருக்கார் அவர்கிட்டே கொடுத்து பார்ப்போம், அவர் என்ன சொல்றார்னு கேட்கலாம்.
சலாம் அலைக்கும், அய்யா இன்று ஒரு பழம் கிடைத்திருக்கு, ஆடுகள் சாப்பிட்ட உடன் சுறுசுறுப்பா ஆயிடுச்சி, நானும் சாப்பிட்டேன் எனக்கும் சுறுசுறுப்பாவும், புத்துணர்ச்சியுமா இருக்கு அய்யா. நீங்க பார்த்து சொல்லுங்க...
அலைக்கும் சலாம், கல்டி கொடு பார்ப்போம்.
இரு உடைச்சி பார்ப்போம் அட இரண்டு விதை இருக்கே, இரு இதை சாப்பிட்டு பார்ப்போம்.
பொடித்த காபி விதைகளை சுடு நீரில் போட்டு குடிக்க ஒரு சுறுசுறுப்பும், உற்சாகமும், புத்துணர்ச்சியுமா இருக்கே...
இந்த நறுமணம், பழத்திலிருந்து வரவில்லை, விதையில் இருந்துதான் வருது...
இரண்டு விதைகளில் ஏதாவதொன்று வளராமல், ஒன்று மட்டும் வளர்ந்தால் அதற்கு பீபெர்ரி என்று பெயர். சாதாரண காபியை விட இந்த பீபெர்ரி கசப்பாக இருக்கும்.
அட! அது தான் first cup of coffee of the world.
சரி கல்டி, நாங்க டைம் மெஷினில் 17ம் நூற்றாண்டுக்கு போறோம்...
அதுவரை இதை கேளுங்க...
இஸ்லாமியர்கள் பரவியிருந்த இடங்களில் இந்தப் பானமும் பரவியது.
ஆரம்பத்தில் கிறித்துவர்களுக்கு இந்தப் பானம் குடிப்பதற்கு அனுமதியில்லை.
1607-ம் ஆண்டு ஆய்வுப்பயணம் மேற்கொண்ட ஜான் ஸ்மித் என்பவரால், "காபி"
புது உலகுக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.
1690-ம் ஆண்டு, வணிகரீதியாக முதல்முதலில் டச்சுக்காரர்களால் காபிச்செடிகள் பயிரிடப்பட்டு, ஏற்றுமதி செய்யப்பட்டன.
அட 17ம் நூற்றாண்டுக்கு வந்திட்டோம், இதென்ன ப்ரான்ஸ் போல் இருக்கே..
ஆகா ! இங்கே வித விதமா உணவு கிடைக்குமே...
ஐ ! ஜீனி போட்ட காஃபி
*****************************
1713-ம் ஆண்டு, பிரெஞ்சு மன்னன் 14-ம் லூயிக்கு, காபிச்செடி ஒன்று பரிசாக வந்திருக்கே..
காபியோடு `சர்க்கரை' கலக்குறாங்களே.
இவர், காலத்தில்தான் முதன் முதலில் காஃபியில் ஜீனி போட்டிருக்காங்க..
இருங்க இருங்க, இதே டைமில், மெக்காவிற்கு போவோம் வாங்க...
கர்நாடகா மாநிலம் சிக்மகளூரிலிருந்து சூஃபி துறவி பாபா பூடான் ’ஹஜ்’ பயணமாக மெக்கா வந்திருக்கார், வாங்க அவரை சந்திப்போம்.
அட! சூஃபியிஸம் எனும் அரிய தத்துவத்தை சொல்றாரே... இந்தியாவிற்கு தான் போறார்.
வாங்க அவரை பின் தொடர்வோம்.
அட இந்த இடம் "ஏமன்" ஆச்சே.
துறவி ஏதோ குடிக்கிறாரே...
ஆமா! செகண்ட் கப் ஆஃப் காஃபி...
கஹுவா விதையை கேட்கிறாரே...
என்னது கஹுவா வா? ஆமா அரேபிய மொழியில் கஹுவா அப்படின்னா விதையிலிருந்து உருவாக்கப்படும் பானம் என்று பொருள்.
கொஞ்ச நாட்களில் கஹியா ன்னு சொன்னாங்க, அதாவது பசியை போக்கும் பானம் என்று பொருள், பிறகு காஃபி ஆகிவிட்டது.
சரி, என்ன நடக்குதுன்னு பாருங்க, அரேபியர்கள் காஃபி விதைகளை தர மாட்டேங்கறாங்களே....
அதானே ! ஏய் அங்க பாரு, நம்ம சூஃபி துறவி, எத்தியோப்பில் ஆடு தின்ன காஃபி விதையை ஆட்டைய போடுறார்.
எத்தனை எடுத்திருக்காருன்னு கவனி.
ஏழு வறுக்காத காஃபி விதை. சரி சத்தம் போடாமல் அவரை பின் தொடர்ந்து என்ன செய்றார்னு பார்போம்.
ஆகா ! இந்தியா வந்திட்டோம். இந்த இடம்தான் சிக்மங்களூர்.
சூஃபி பாபாவின் ஊர் போலிருக்கே.
ஆமாம், வாங்க பார்ப்போம்...
ஏழு விதையையும் நடவு செய்றார்.
சரி வாங்க, டைம் மெஷினில் நம்ம காலத்துக்கு போவோம்... அதுவரை இந்த கதையை கேளுங்க.
சூஃபி துறவி நடவு செய்த அந்த ஏழு காஃபி விதைதான் கர்நாடகா,கேரளா,ஆந்திரா தமிழ்நாடுன்னு இன்று காஃபி தோட்டமாக பல்கி பெருகி நம் மனதை கொள்ளையடித்து கொண்டிருக்கிறது.
1822-ம் ஆண்டு, `மாதிரி எஸ்ப்ரெஸ்ஸோ மெஷின் (Prototype Espresso Machine)' பிரான்ஸில் கண்டுபிடிக்கப்பட்டது.
1938-ம் ஆண்டு பிரேசிலில் ஏற்பட்ட அளவுக்கு மீறிய காபி உற்பத்திப் பிரச்னையைச் சரிசெய்யும் வகையில், அந்நாட்டு அரசுடன் இணைந்து `இன்ஸ்டன்ட் காபி' பவுடரை முதன்முதலில் தயார்செய்தது `நெஸ்லே' நிறுவனம்.
காஃபி நல்லவரா கெட்டவரா?
********************************
காபியில் நிறைந்துள்ள ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் நமது செல்களை நச்சுகள், இரசாயனங்கள் போன்றவற்றினால் பாதிப்படைவதிலிருந்து தடுக்கிறது.
இந்தாண்டின் தொடக்கத்தில் இதழ் ஒன்றில் பதிப்பிக்கப்பட்ட ஆராய்ச்சி முடிவின்படி, ஒரு நாளைக்கு மூன்று கோப்பை காபி குடிப்பவர்களுக்கு இதயம் சம்பந்தமான நோய்களினால் உயிரிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
மேலும், ஒருவரது ஆற்றலையும், விளையாட்டு திறனையும் உடனடியாக புதுப்பிப்பதற்கு காபி பயன்படுவதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.
என்றாலும், கர்ப்பிணி பெண்கள் ஒரு நாளைக்கு இரண்டு கப்பிற்கு மேல் குடிக்க கூடாது என்கிறது ஆய்வு.
காஃபியில் எத்தனை காஃபியடி.
***********************************
காபி , ஃபில்டர் காஃபி, டிகிரி காஃபி, டிகாக்ஷன் காஃபி, வடிகட்டாத எஸ்ப்ரஸ்ஸோ காபி, இன்ஸ்டன்ட் காஃபி, கிரீன் காஃபி காப்பிச்சினோ காஃபி, ஐஸ் காஃபி.
இதெல்லாம் மேட்டரே இல்லை...
🐈🐈🐈🐈🐈🐈🐈🐈🐈🐈🐈🐈
சிவெட் என்ற பூனையின் கழிவில் தயாரிக்கப்படும் காஃபிக்குதான் ஏக க்ராக்கி.
புனுகு பூனை வகையை சேர்ந்த பூனைக்கு இந்த காஃபி விதையை கொடுக்கிறார்கள். பாதி செரிமானம் ஆன விதையோடு, செரிமானம் ஆகாத விதையும் பூனையின் கக்கா வா அதாங்க கழிவா வெளியில் வர அதை பொடி செய்து காஃபி போடுறாங்க.
சரி மூக்கை பிடிச்சிகிட்டு ஓடுறவங்க, இதன் விலையை கேளுங்க, மயக்கம் போட்றுடுவீங்க....
அதான் விலை அதிகம் இல்லை -$80 தானாம்.
பூனைக்கு ஒரு காலம்னா யானைக்கு ஒரு காலம் வரும்ல.
🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘
தாய்லாந்திலுள்ள யானைகளால் உண்ணப்பட்டு அதன் மலத்திலிருந்து பெறப்படும் பிளாக் ஐவோரி காபி என்றழைக்கப்படும் காபி கொட்டைகள் தற்போது பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.
இதன் 35 கிராம் அளவுள்ள சிறிய பை 85 டாலர்களுக்கு அமெரிக்காவில் விற்பனை செய்யப்படுகிறது.
காஃபிக்கும் கவிதைக்கும் தொடர்பு இருக்கான்னு தெரியாது...
ஆனால் காஃபிக்கும் காதலுக்கும் தொடர்பு இருக்குங்க...
சரி இன்னொரு நாள் சந்திப்போம். ஒரு ஃப்ல்டர் காஃபி போட்டு குடிக்கப் போறேன்.
Since
"A cup of coffee is my cup of Tea"
பை பை மக்கா !
அன்புடன்
- கோ.லீலா.
No comments:
Post a Comment