வணக்கம்
தோழமைகளே ! நலமா?
நீண்ட நாட்களுக்குப் பிறகு சுவையான தலைப்புடன் வந்திருக்கிறேன்.கதை கேட்க
தயாரா?
மிளகு கொடி |
அறுசுவை எனப்படுவது நாக்கு அறியக்கூடிய ஆறு வகை சுவைகளாகும். பழங்கால இந்திய மருத்துவங்களும், ஆயுர்வேதமும் சுவைகளை ஆறு வகைகளாகப் பிரிக்கின்றன.
அவையாவன: துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு
ஆகியனவாகும். ஆயுர்வேதம் உடலின் ஆறு முக்கிய
தாதுக்களுடன் இச்சுவைகளைச் சம்பந்தபடுத்தி, உடல் வளர்ச்சியில் இச்சுவைகளின்
பங்குகளை விளக்குகின்றது.
தொன்றுதொட்டு
பழக்கத்தில் இருந்து வரும் இந்திய
மருத்துவங்களாகிய ஆயுர்வேதம், சித்த மருத்துவம் போன்றவற்றில்
சுவைகள் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
உடலானது இரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு முக்கிய
தாதுக்களைக் கொண்டது என்பதனால் உடலை
"யாக்கை" என்று கூறினர். இதில்
ஏழாவது தாதுவான மூளை சரிவர
இயங்க முதல் ஆறு தாதுக்கள்
தகுந்த அளவில் இருத்தல் அவசியம்.
இந்த ஆறு தாதுக்களும், ஆறு
சுவைகளுடன் கீழ்கண்டவாறு சம்பந்தப்பட்டுள்ளன.
இனிப்பு - தசையை வளர்க்கின்றது
புளிப்பு - கொழுப்பினை வழங்குகின்றது
கார்ப்பு - எலும்புகளை வளர்க்கின்றது
உவர்ப்பு - உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது
துவர்ப்பு - இரத்தத்தைப் பெருக்குகின்றது
கசப்பு - நரம்புகளை பலப்படுத்துகின்றது.
அக்கால
மருத்துவங்களும், உணவு முறைகளும் இதனை
அடிப்படையாகக் கொண்டே இருந்துவந்தது. உடல்
தாதுவைப் பெருக்க, சமன் செய்ய அதற்கு
ஏற்றவாறு உணவு வகைகளைத் தயாரித்து
வந்தனர். இதனைக் கொண்டுதான் "உணவே
மருந்து, மருந்தே உணவு" என்று
சொல்வார்கள்.
நாக்கின்
சுவைக்கு அடிமைப்பட்ட நாம் மனமும் சுவையும்
அதிகரிக்க அதிகமான கார உணவுகளை
உட்கொள்கிறோம். இதனால் குடலில் புண்
உண்டாகி, பல நோய்களால் அவதிப்படுகிறோம்.
அவ்வாறே புளியும் அதிகமாக உட்கொண்டால் உடல்
நலத்திற்கு கேடு விளைவிக்கும். இதனை
"காட்டு விலங்குகளை அழிக்கப் புலியையும், நாட்டு மக்களை அழிக்கப்
புளியையும் வைத்தான்"
என்றொரு பழமொழி உண்டு.
விலங்குகளும்,
பறவைகளும் நாமுண்ணும் முறைப்படி உப்பும், காரமும், புளியும் சேர்த்து உண்பதில்லை.இவைகள் நம்மைப்போல் பலவித
நோய்களுக்கு ஆட்படுவதில்லை.ஆகவே நமது உணவில்
காரம், புளி மற்றும் உப்பு குறைவாக
இருப்பது நலம். இதுவே "உணவே
மருந்தாகும்" என்பதற்கு சிறந்த வழி என்பது
திண்ணம்.
கார்ப்பு/காரம்
(PUNGENT)
காரம்
என்றவுடன் மிளகாய் தான் நினைவுக்கு வரும் என்றாலும் இன்று நாம் விரிவாக பேசப்போவது
மிளகைப் பற்றி… ஏன் என்ற கேள்வி உங்களுக்கு எழும் அதற்கான பதிலையும் பார்ப்போம்.
காய்கறி
என்று சொல்கிறோமே அதில் கறி என்றால் இறைச்சி அல்லவா? என நினைத்துக்கொண்டு,அதை ஏன் காயுடன்
சேர்த்து சொல்கிறார்கள் என தோன்ற, தேடல் தொடங்கியது,தேடலில் பண்பாட்டு அசைவுகள் புத்தகம்
கிடைக்க அதில் கிடைத்தது பதில்.
கறி
என்றால் காரம் என்று பொருள் என அறிய,ஆவல் இன்னும் அதிகமாக காரம் குறித்து தேடல் தொடர்ந்தது.
இந்தியாவை
இயற்கை வாழ்விடமாக கொண்ட மிளகு வரலாற்றுக்கு முந்தைய காலந்தொட்டே இந்திய சமையலில் தாளிப்பு
பொருளாக பயன்பட்டது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.குறிப்பாக தென்னிந்தியாவின் கேரளாதான்
அன்று முதல் இன்று வரை மிளகு உற்பத்தியிலும் வணிகத்திலும் முதலிடம் பிடிக்கிறது. மிளகு
மிக லாபகரமான வணிகபொருளாக இருப்பதால்,மிளகை கறுப்பு தங்கம் என்றும் அழைக்கின்றனர்.
மிளகு
பொங்கல்,பெப்பர் சிக்கன்,பெப்பர் ஆம்லெட்,ரசம், சூப்பிற்கு மிளகுத் தூள் என எல்லா உணவுமேசைகளிலும்
பெரும் இடத்தை பெற்றிருக்கும் மிளகு தான் உலக வரலாற்றையும் இந்திய வரலாற்றையும் மாற்றியமைத்தது
என்றால் நம்புவீர்களா?
கிழக்கிந்திய
கம்பெனி இந்தியாவிற்குள் வந்ததற்கு மிளகு எப்படி காரணமாயிற்று பார்ப்போம்.
மிளகாயின்
வரலாறு 200 ஆண்டு வரலாறுதான்,ஆனால் மிளகு மிக நீண்ட கணிக்க முடியாத பராம்பரியத்தை கொண்டதாக
உள்ளது.மிளகில் இருந்துதான் மிளகாய் பெயரை பெற்றுக்கொண்டுள்ளது.
வரலாற்றில் மிளகு,வரலாறாய் மிளகு.
சங்க
இலக்கியங்களில் மிளகுப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன,மிளகை கறி என்று அழைத்தற்கும்,தங்கம்,முத்து
போன்ற பொருட்களுக்கு இணையாக மிளகு இருந்தற்கும் குறிப்புகள் உள்ளன.
PEARL AND PEPPER |
‘யவனர்
தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு
வந்து கரியோடு பெயரும்
வளங்கெழு
முசிறி’
இது ஒரு அகநானூறு பாடல்.
மிளகிற்கு அப்போது கறி என்று
பெயர். கிரேக்கர்களை யவனர் என்று விளிக்கும்
வழக்கம் சங்க இலக்கியங்களில் இருந்திருக்கிறது.
முசிறி என்னும் துறைமுகத்திற்கு நிறையக்
கப்பல்களில் வந்த கிரேக்கர்கள், பொற்காசுகள்
தந்து மிளகை வாங்கிச் சென்றனர்
என்ற பொருள் தருகிறது இந்த
அகநானூறு பாடல்.
‘மனைக் குவை இய
கறிமுடையாற்
கலிச்சும்மைய
கரைகலக்குறுந்து
கலந்தந்த
பொற்பரிசம்
கழித்தோணியாற்
கரை சேர்க்குந்து’
மிளகின்
மதிப்பைச் சொல்லும் மற்றுமொரு பாடல். இது புறநானூற்றில்
இடம்பெற்றுள்ளது.முசிறி துறைமுகம் அதிக
ஆழம் இல்லாத ஒன்றாக இருந்திருக்கிறது.
இதனால் வணிகம் செய்ய வரும்
கப்பல்கள் சிரமம் இன்றி வந்து
சென்றன. சின்ன சின்ன படகுகளில்
மிளகை ஏற்றி, கிரேக்கர்களின் கப்பல்களில்
கொண்டுபோய் இறக்கினார்கள். அதற்குப் பதிலாக தங்கள் கப்பல்களில்
இருந்த பொற்காசுகளை பரிசாக அளித்தனர் கிரேக்கர்கள்
என்று பொருள் தருகிறது இந்தப்
பாடல்.
இந்தச்
சங்க இலக்கிய பாடல்களின் மூலம்,
மிளகின் வரலாறு தென் இந்தியாவில்
இருந்து தான் ஆரம்பிக்கிறது என்பதை
அறிந்து கொள்ளலாம். குறிப்பாகக் கேரளா மலபார் கடற்கரைகளில்
மிளகு வணிகம் மிக அதிக
அளவில் நடந்து வந்துள்ளது.
வரலாற்றை மாற்றியது எப்படி? ஆங்கிலேயரிடம் அடிமையானது எப்படி? அடுத்த பகுதியில் பார்ப்போம் தோழமைகளே.
-அன்புடன் கோ.லீலா.
ReplyDeleteஇந்தச் சுவை மிகுந்த தகவல்களுக்காகத் தங்களைப் பாராட்ட வேண்டும்!
மிக்க நன்றியும்,பேரன்பும்,பெயர் குறிப்பிடவில்லை என்பதால் யாரென அறிந்துக் கொள்ள இயலவில்லை.பெயர் குறிப்பிட்டால் மகிழ்வு.
Deleteமேற்குறிப்பிட்ட கருத்தில் என் பெயரிடத் தவறி விட்டேன்!
ReplyDeleteஅய்யா,அறிந்துக் கொண்டேன் மிக்க நன்றியும்,பேரன்பும்.
Delete