Sunday, 14 April 2019

உப்பு, புளி , காரம். பகுதி-2



தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்,இந்தியா எப்படி ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டது அதற்கு மிளகு எவ்வகையில் காரணம் பார்ப்போம் வாருங்கள்.
                                     

இன்றைக்கு 500 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை,இந்திய மக்கள் மிளகாயை அறிந்திருக்கவில்லை.சங்ககாலத்தில் கறி என்றால் மிளகு.சமையலில் மருத்துவத்தில் இடம் பெற்றிருந்த மிளகை அன்றைய சேர நாடு இன்றைய கேரளா ஏற்றுமதி செய்தது.
அப்படி ஏற்றுமதியாகி காவிரி பூம்பட்டினத்தில் (பூம்புகார்) இறக்குமதியாகும் காடசியைதான் உருத்திரங்கண்ணனார் கீழ் வரும் பாடலில் பாடியுள்ளார்.

நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்துண்ர்வும் காழகத் தாக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகு
இப்பாடலிலிருந்து நீரின் வழியாக வரப்பெற்ற உயர்வகை குதிரைகள், நிலவழியாகக் கொண்டு வரப்பட்ட மிளகு(கறிமூடை), எல்லாம் பூம்புகார் துறைமுகத்தில் செழித்து கிடந்துள்ளது என அறியவருகிறது.இத்தகைய பெருமை வாய்ந்த மிளகுகிற்காக யவனர்களும்,அரேபியர்களும் இந்தியாவை நோக்கி வரத்தொடங்கினர்.

இந்திய வரலாற்றை தீர்மானித்த மிளகு. 

கறுப்பாக உருண்டோடும் சின்னஞ்சிறு மிளகு உலகையே தன்னைச்சுற்றி உருண்டோட வைத்திருக்கிறது.
                                  
இந்தியாவில் பண்டைய காலங்களில் வணிகம் கடல் வழியாகவே நடந்து வந்துள்ளது. கடல் வழியாக இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் வழி கண்டுபிடித்து வைத்திருந்தனர் வணிகர்கள். பெரும் புயல், மழை, பசி, உயிர்கொல்லும் ராட்சத கடல் உயிரினங்கள் என அனைத்தையும் எதிர்கொண்டு பணம் ஈட்டக் கடல்வழியாக வணிகர்கள் வணிகம் செய்தனர்.

ஒரு கப்பலில் வணிகம் செய்ய பத்து பேர் புறப்படுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் வணிகம் செய்து திரும்பவும் தாங்கள் கிளம்பிய இடத்திற்கே வரும்போது இரண்டு பேர் மட்டுமே உயிரோடு இருப்பார்கள். அந்த அளவுக்குக் கடல் வழி வணிகம் ஆபத்தானதாக இருந்திருக்கிறது. இந்தச் சூழலில் தான் மிளகு உலக வரலாற்றை, இந்திய வரலாற்றை எழுதும் காரணியாக உருவெடுத்தது.

கடல் வழியாக வணிகம் செய்வதில் கில்லாடியாக அப்போது இருந்தவர்கள் அரேபியர்கள். கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு வந்தடையும் வழியை அவர்கள் மட்டும் தெரிந்து வைத்திருந்தனர். இதனால் பண்ட மாற்று முறையின் மூலம் மிளகு இந்தியாவிடம் இருந்து வாங்கப்பட்டு பின்னர் உலகும் முழுவதும் விற்கப்பட்டது. பதினாறாம் நூற்றாண்டுக்கு முன்பு வரை இந்தியாவிடம் இருந்து வாங்கப்பட்ட மிளகு, ஐரோப்பியர்களுக்கு அதிக விலை வைத்து லாபத்துக்கு விற்கப்பட்டது
                                       
அரேபியர்களின் இந்தச் செயலை ஓரளவுக்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாத ஐரோப்பியர்கள் இனி மிளகை தாங்களே இந்தியாவிடம் இருந்து வாங்கிக்கொள்வது என்று முடிவு எடுத்தனர்.

இதன் தொடர்ச்சியாகவே போர்த்துகீசியனாகிய வாஸ்கோடகாமா மிளகைத் தேடி இந்தியாவுக்கு வந்தார். கடும் சிரமங்களுக்கு இடையே இந்தியாவுக்கான கடல் வழிப் பாதையை கண்டடைந்தார். சில நூறு பொற்காசுகளை தந்து, கப்பல் கப்பலாக மிளகை அள்ளிச்சென்று உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தார். அவர் வந்து சேர்ந்த இடம் கோழிக்கோடு. ஒவ்வொரு முறையும் மலபாரில் பெருத்த சேதத்தை விளைவித்து, கேரளா மக்களை அச்சுறுத்தி மிளகைக் கொண்டு சென்றார். அதன் பிறகு தொடர்ச்சியாக, டச்சுக்காரர்கள் மற்றும் டேனிஷ்காரர்கள் இந்தியாவுக்குக் கடல் வழிப் பாதையை உருவாக்கி மிளகை அள்ளிச் சென்றனர்.

இதில் பரிதாபம் பிரிட்டிஷ் காரர்கள் தான். அவர்கள் தங்களுக்கு தேவையான மிளகு, லவங்கம் மற்றும் ஏலக்காய் போன்ற பொருட்களை டச்சுக்காரர்களிடம் இருந்தே வாங்க வேண்டிய நிலை இருந்தது. ஒரு நாள் திடீரென மிளகின் விலையை ஐந்து ஷில்லிங், அதாவது அன்றைய மதிப்பில் நான்கு ரூபாய் அளவுக்கு டச்சு வியாபாரிகள் ஏற்றி விட்டனர். இதில் கோபமடைந்து பிரிட்டிஷ் வியாபாரிகள், இனி டச்சுக்காரர்களிடம் மிளகு வியாபாரம் செய்வது இல்லை எனவும், சொந்தமாக நிறுவனம் ஆரம்பித்து அதன் மூலம் இந்தியாவில் மிளகு கொள்முதல் செய்வது என்றும் முடிவு எடுத்தனர். இது நடந்தது பதினான்காம் நூற்றாண்டில்.

மிளகினால் மிளகாய் கிடைத்தது.

 இந்தியாவிற்கு ஸ்பெயினில் இருந்து போக வழியை கண்டுபிடித்தால் மிளகை எளிதாக பெறலாம் என சொன்ன கிறிஸ்தோபர் கொலம்பஸ் கண்டுபிடித்தது அமெரிக்காவை மட்டுமல்ல, காரமான, பிற்காலத்தில் உணவின் இன்றியமையாத சுவையூட்டியாக விளங்க்அப் போகும் மிளகாயையும் தான்.
கொலம்பஸின் மிளகாய் பயணம்.

கரீபியன் தீவுகளில் மிளகைத் தேடிய கொலம்பஸூக்கு மிளகாயை தந்தார் ஓர் உள்ளூர்வாசி,சுவைத்துப் பார்த்த கொலம்பஸ் மிளகைப்போல் உறைப்பாய் இருக்கிறதே என்று சொல்ல மிளகாய் ஆங்கிலத்தில் பெப்பர் என்ற பெயரை பெற்றது,மிளகினால் மிளகாய் கிடைத்தது.


செப்டம்பர் 24 , 1549 வெறும் இருபத்து நான்கு லண்டன் வியாபாரிகள் ஒன்றிணைந்து 75000 முதலீட்டுடன் ஒரு நிறுவனம் தொடங்கப்பட்டது. அதே ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி, இந்த நிறுவனம் முதலாம் எலிசபெத் ராணியால் அங்கீகரிக்கப்பட்டு, இந்தியாவில் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்டது.

முதலாம் எலிசபெத் ராணி

ஆகஸ்டு மாதம் 24 , 1600 ஆம் ஆண்டு 24 ஹெக்டர் என்ற பெயர் கொண்ட , 500 டன் பிரிட்டிஷ் கப்பல் ஒன்று அந்த நிறுவனத்தின் சார்பாக இந்தியா அனுப்பி வைக்கப்பட்டது. வில்லியம் ஹாக்கின்ஸ் என்பவரது தலைமையில் வந்த அந்தக் கப்பல், மும்பை துறைமுகத்தில் கரை ஒதுங்கியது. அவர்களை இருகரம் கூப்பி வரவேற்றார் இந்தியாவின்  கடைசி முகலாய மன்னர் ஜஹாங்கீர்
ஜஹாங்கீர் கிழக்கிந்திய கம்பெனிக்கு அனுமதி தருதல்

அந்த நிறுவனம் பிறகு இந்திய வரலாற்றை மாற்றி எழுதிய கிழக்கு இந்திய கம்பெனி.வணிகம் செய்வதற்காக மட்டும் என்று சொல்லி இந்தியாவுக்குள் நுழைந்த கிழக்கு இந்திய கம்பெனி, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தங்களது அதிகாரத்தை இந்திய நிலப்பரப்பு முழுவதற்கும் செலுத்தியது. அதன் பிறகு நடந்தது எல்லாமும் வரலாறு.

இப்படி இந்தியாவில் விளைந்த மிளகு, இந்தியாவுக்கே ஆபத்தாக முடிந்தது. ஒருவேளை இந்தியாவில் மிளகு விளையாமல் போயிருந்தால்? இந்திய வரலாறு  வேறு  மாதிரி  இருந்திருக்குமா என்பது சுவாரசியமான தேடல். ஒரு வேளை, உலக வரலாறும் கூட மாற்றி எழுதப்பட்டிருக்கும்.
                                  
சூப் தயாரிப்பதற்கு மிளகு எங்கே கிடைக்கும் என்று தேடி நம் நாட்டிற்குள் வந்தவர்கள் தான் இந்தியாவையே 350 ஆண்டுகள் ஆண்ட கிழக்கிந்தியக் கம்பெனியினர். அவர்கள் மிளகு வணிகத்திற்காக  மலபார் பகுதிகளில்  போர் நடத்திய போது அவர்களை தீவிரமாக எதிர்த்த மலபார்-கோட்டயத்தின் சிற்றரசரான  கேரளவர்மா பழசி ராஜாதனது  நாட்டில் பயிரிடப்பட்டிருந்த மிளகு கொடிகளை வெட்டி எரித்து விடுவேன் என்று மிரட்டினார். ஒரு கைப்பிடி மிளகு வாங்குவதற்காக தங்கத்தையே அள்ளித்தந்தவர்கள் ஐரோப்பியர்கள்.
ராஜா பழசி

  அப்படிப்பட்ட பாரம்பரியமிக்க, கறுப்புத் தங்கம் என்றழைக்கப்பட்ட மிளகை தனியாக எடுத்து வைத்துவிட்டு நாம் வெண்பொங்கல் சாப்பிடுகிறோமே... இது சரியா ???

மிளகின் முக்கியத்துவம்.

 பண்டைய காலத்து மக்கள் மிளகை உணவு பதப்படுத்தும் ஒரு பண்டமாக உபாயகப்படுத்தி வந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் மிளகில் நிறைய மருத்துவ குணங்கள் உண்டு என்பதையும் அந்த காலத்து மக்கள் உணர்ந்தே இருந்துள்ளனர்.

உலகின் மிகப் பழமையான, மூத்த நாகரிகங்களில் ஒன்றான எகிப்து நாகரீகத்தில் இறந்தவர்கள் பதப்படுத்தி பாதுகாக்கும் முறை உண்டு.
மம்மி என்று அந்த பதப்படுத்தப்பட்ட இறந்த உடல்கள் அழைக்கப்படுகின்றன. இவ்வாறாக மம்மி ஆக்கப்பட்ட அரசர்களின் மூக்கு துவாரத்தில் மிளகு வைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் எகிப்து மக்கள் மிளகை மருத்துவ குணம் கொண்ட ஒன்றாகவும், விலை உயர்ந்த ஒன்றாகவும் கருதியிருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

 கிமு 1213 ஆம் நூற்றாண்டில், ராம்சிஸ் என்ற எகிப்தின் இரண்டாம் அரசனின் மரணத்தின் போது, மிளகு பயன்படுத்தப்பட்டுள்ளது.


ராம்சிஸின் சிலை

பண்டைய நாகரீகங்களில், பெரும் செல்வம் படைத்த பெண்கள் தங்களின் திருமணத்தின் போது நிறையத் தங்க நகைகளோடு சேர்த்து, மிளகு எடுத்து வருவதை தங்களின் செல்வச் செழிப்பின் அடையாளமாகக் கொண்டிருந்தனர். தங்கத்தை விடவும், முத்துமணி ரத்தினங்களை விடவும் மிளகு அன்று அதிகம் மதிப்புப் பெற்று இருந்தது.
பல்வகை மிளகு.

  கார சாரமான மிளகாய் பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்.

பொறுமையுடன் கேட்ட தோழமைகளுக்கு நன்றியும்,அன்பும்.
என்றென்றும் அன்புடன்
-கோ.லீலா.


Saturday, 13 April 2019

உப்பு, புளி , காரம். பகுதி-1



வணக்கம் தோழமைகளே ! நலமா?
நீண்ட நாட்களுக்குப் பிறகு சுவையான தலைப்புடன் வந்திருக்கிறேன்.கதை கேட்க தயாரா?
மிளகு கொடி


அறுசுவை எனப்படுவது நாக்கு அறியக்கூடிய ஆறு வகை சுவைகளாகும். பழங்கால இந்திய மருத்துவங்களும்ஆயுர்வேதமும் சுவைகளை ஆறு வகைகளாகப் பிரிக்கின்றன. அவையாவன: துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியனவாகும். ஆயுர்வேதம் உடலின் ஆறு முக்கிய தாதுக்களுடன் இச்சுவைகளைச் சம்பந்தபடுத்தி, உடல் வளர்ச்சியில் இச்சுவைகளின் பங்குகளை விளக்குகின்றது

தொன்றுதொட்டு பழக்கத்தில் இருந்து வரும் இந்திய மருத்துவங்களாகிய ஆயுர்வேதம், சித்த மருத்துவம் போன்றவற்றில் சுவைகள் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன

உடலானது இரத்தம்தசைகொழுப்புஎலும்புநரம்புஉமிழ்நீர்மூளை ஆகிய ஏழு முக்கிய தாதுக்களைக் கொண்டது என்பதனால் உடலை "யாக்கை" என்று கூறினர். இதில் ஏழாவது தாதுவான மூளை சரிவர இயங்க முதல் ஆறு தாதுக்கள் தகுந்த அளவில் இருத்தல் அவசியம். இந்த ஆறு தாதுக்களும், ஆறு சுவைகளுடன் கீழ்கண்டவாறு சம்பந்தப்பட்டுள்ளன.

இனிப்பு - தசையை வளர்க்கின்றது
புளிப்பு - கொழுப்பினை வழங்குகின்றது
கார்ப்பு - எலும்புகளை வளர்க்கின்றது
உவர்ப்பு - உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது
துவர்ப்பு - இரத்தத்தைப் பெருக்குகின்றது
கசப்பு - நரம்புகளை பலப்படுத்துகின்றது.

அக்கால மருத்துவங்களும், உணவு முறைகளும் இதனை அடிப்படையாகக் கொண்டே இருந்துவந்தது. உடல் தாதுவைப் பெருக்க, சமன் செய்ய அதற்கு ஏற்றவாறு உணவு வகைகளைத் தயாரித்து வந்தனர். இதனைக் கொண்டுதான் "உணவே மருந்து, மருந்தே உணவு" என்று சொல்வார்கள்.

நாக்கின் சுவைக்கு அடிமைப்பட்ட நாம் மனமும் சுவையும் அதிகரிக்க அதிகமான கார உணவுகளை உட்கொள்கிறோம். இதனால் குடலில் புண் உண்டாகி, பல நோய்களால் அவதிப்படுகிறோம். அவ்வாறே புளியும் அதிகமாக உட்கொண்டால் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். இதனை "காட்டு விலங்குகளை அழிக்கப் புலியையும், நாட்டு மக்களை அழிக்கப் புளியையும்  வைத்தான்" என்றொரு பழமொழி உண்டு.

     விலங்குகளும், பறவைகளும் நாமுண்ணும் முறைப்படி உப்பும், காரமும், புளியும் சேர்த்து உண்பதில்லை.இவைகள் நம்மைப்போல் பலவித நோய்களுக்கு ஆட்படுவதில்லை.ஆகவே நமது உணவில் காரம், புளி மற்றும் உப்பு  குறைவாக இருப்பது நலம். இதுவே "உணவே மருந்தாகும்" என்பதற்கு சிறந்த வழி என்பது திண்ணம்.



கார்ப்பு/காரம் (PUNGENT)
                                      
காரம் என்றவுடன் மிளகாய் தான் நினைவுக்கு வரும் என்றாலும் இன்று நாம் விரிவாக பேசப்போவது மிளகைப் பற்றி… ஏன் என்ற கேள்வி உங்களுக்கு எழும் அதற்கான பதிலையும் பார்ப்போம்.

காய்கறி என்று சொல்கிறோமே அதில் கறி என்றால் இறைச்சி அல்லவா? என நினைத்துக்கொண்டு,அதை ஏன் காயுடன் சேர்த்து சொல்கிறார்கள் என தோன்ற, தேடல் தொடங்கியது,தேடலில் பண்பாட்டு அசைவுகள் புத்தகம் கிடைக்க அதில் கிடைத்தது பதில்.

கறி என்றால் காரம் என்று பொருள் என அறிய,ஆவல் இன்னும் அதிகமாக காரம் குறித்து தேடல் தொடர்ந்தது.

இந்தியாவை இயற்கை வாழ்விடமாக கொண்ட மிளகு வரலாற்றுக்கு முந்தைய காலந்தொட்டே இந்திய சமையலில் தாளிப்பு பொருளாக பயன்பட்டது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.குறிப்பாக தென்னிந்தியாவின் கேரளாதான் அன்று முதல் இன்று வரை மிளகு உற்பத்தியிலும் வணிகத்திலும் முதலிடம் பிடிக்கிறது. மிளகு மிக லாபகரமான வணிகபொருளாக இருப்பதால்,மிளகை கறுப்பு தங்கம் என்றும் அழைக்கின்றனர்.  

மிளகு பொங்கல்,பெப்பர் சிக்கன்,பெப்பர் ஆம்லெட்,ரசம், சூப்பிற்கு மிளகுத் தூள் என எல்லா உணவுமேசைகளிலும் பெரும் இடத்தை பெற்றிருக்கும் மிளகு தான் உலக வரலாற்றையும் இந்திய வரலாற்றையும் மாற்றியமைத்தது என்றால் நம்புவீர்களா?

கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவிற்குள் வந்ததற்கு மிளகு எப்படி காரணமாயிற்று பார்ப்போம்.

மிளகாயின் வரலாறு 200 ஆண்டு வரலாறுதான்,ஆனால் மிளகு மிக நீண்ட கணிக்க முடியாத பராம்பரியத்தை கொண்டதாக உள்ளது.மிளகில் இருந்துதான் மிளகாய் பெயரை பெற்றுக்கொண்டுள்ளது.

வரலாற்றில் மிளகு,வரலாறாய் மிளகு.

சங்க இலக்கியங்களில் மிளகுப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன,மிளகை கறி என்று அழைத்தற்கும்,தங்கம்,முத்து போன்ற பொருட்களுக்கு இணையாக மிளகு இருந்தற்கும் குறிப்புகள் உள்ளன.                                                
PEARL AND PEPPER
                 

                     
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கரியோடு பெயரும்
  வளங்கெழு முசிறி

இது ஒரு அகநானூறு பாடல். மிளகிற்கு அப்போது கறி என்று பெயர். கிரேக்கர்களை யவனர் என்று விளிக்கும் வழக்கம் சங்க இலக்கியங்களில் இருந்திருக்கிறது. முசிறி என்னும் துறைமுகத்திற்கு நிறையக் கப்பல்களில் வந்த கிரேக்கர்கள், பொற்காசுகள் தந்து மிளகை வாங்கிச் சென்றனர் என்ற பொருள் தருகிறது இந்த அகநானூறு பாடல்.

மனைக் குவை இய கறிமுடையாற்
கலிச்சும்மைய கரைகலக்குறுந்து
கலந்தந்த பொற்பரிசம்
கழித்தோணியாற் கரை சேர்க்குந்து

மிளகின் மதிப்பைச் சொல்லும் மற்றுமொரு பாடல். இது புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது.முசிறி துறைமுகம் அதிக ஆழம் இல்லாத ஒன்றாக இருந்திருக்கிறது. இதனால் வணிகம் செய்ய வரும் கப்பல்கள் சிரமம் இன்றி வந்து சென்றன. சின்ன சின்ன படகுகளில் மிளகை ஏற்றி, கிரேக்கர்களின் கப்பல்களில் கொண்டுபோய் இறக்கினார்கள். அதற்குப் பதிலாக தங்கள் கப்பல்களில் இருந்த பொற்காசுகளை பரிசாக அளித்தனர் கிரேக்கர்கள் என்று பொருள் தருகிறது இந்தப் பாடல்.

இந்தச் சங்க இலக்கிய பாடல்களின் மூலம், மிளகின் வரலாறு தென் இந்தியாவில் இருந்து தான் ஆரம்பிக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். குறிப்பாகக் கேரளா மலபார் கடற்கரைகளில் மிளகு வணிகம் மிக அதிக அளவில் நடந்து வந்துள்ளது.

வரலாற்றை மாற்றியது எப்படி? ஆங்கிலேயரிடம் அடிமையானது எப்படி? அடுத்த பகுதியில் பார்ப்போம் தோழமைகளே.
-அன்புடன் கோ.லீலா.