Friday, 4 May 2018

இலை.....



வானத்து நட்சத்திரங்கள்
பூக்களாய் மலர்ந்திருக்கின்றன
பூக்கொய்யும் பொருட்டு
இலைகளோடு பேசுகின்றேன்
ஒவ்வொரு இலையும்
ஒரோர் கதை வைத்திருக்கின்றன
ஒரு நாள் இலைகளோடு
ஒரு இலையாக வாழக் கேட்கிறேன்
இப்போது கிளையில் இலையாய்
மழைநாளில் குடையின்றி
நனைந்து சிலிர்க்கிறேன்
மழை ஓய்ந்த பின் நானோர்
மழையென சொட்டுகிறேன்
அதற்கு முன்னே குட்டையென
மழைநீர் ஏந்துகிறேன்
பூக்களை தேடி வரும்
வண்ணத்துப் பூச்சிகளை
குருவிகளை தாலாட்டும்
பசும் தூளியாகிறேன்….
காற்றிலசையும் பூக்களின்
தலைவருடும் விரல்களாகிறேன்
மெல்ல கதிரவனின் ஒளி பாய
பச்சையம் சமைக்கும் தாயானேன்
மாலையின் தென்றலில்
நடனமிடும் மங்கையானேன்
இரவில் பூக்கள் யாவும்
மின்னும் நட்சத்திரமாக
வானை போர்வையாக்கி
பார்வையிலிருந்து மறைகிறேன்.
விடியும் போதே ஒருநாள்
முடிந்தென அறிவிப்பு வர
சருகாகி உரமாகும் வாய்ப்பிழந்து
வெற்று மானுடமாகிறேன்.


-கோ.லீலா.

Tuesday, 1 May 2018

அறம்-2


அறம்-2
ஜெயமோகனின் அறம் புத்தகத்தின் இரண்டாம் கதை வணங்கான் என்றாலும் கதை 11 “கோட்டி” அதைப் பற்றிதான் இன்று நினைப்பு முழுவதும்.படிக்கும் போதே பொங்கி வரும் சிரிப்பு இதழ்களின் வழியே பூத்துக் கிடக்க வெளிப்பட்டையாகவே என்ன சிரிப்பு என கேட்கும் அளவுக்கு அதன் வசனங்கள் ஆங்கிலத்தில் satire என்று சொல்லப்படும் நையாண்டியும்,இறுதி வரை கொள்கை மாறாத பூமேடை சற்றே சிந்திக்க வைக்கிறார்.ஜெயமோகனின் நகைச்சுவையுணர்வும்,சமூக நோக்கும் அற்புதம்.
பூமேடை”சாக்கடையை சுத்தப்படுத்தறப்ப காந்தித் தொப்பி இருக்கப்பட்டது நல்லதாக்கும்,ஆனா அது சாக்கடையில் விளுந்திரவும்படாது”என்று கண்ணடிக்க,ஆனா அதுதான் சீக்கிரம் சாக்கடையில் விளுந்துடுது என கணேசன் லாயர் சொல்வது  என ஏகப்பட்ட நையாண்டி.
ஓய்வூதியம் வாங்கிக் கொள்ள சொல்லும் போது “சர்க்காரு காசு வாங்குறவனெல்லாம் லஞ்சம் வாங்குறான்.இந்த சர்க்கார் காச வாங்கினா நானும் லஞ்சம் வாங்கலாமா வேய்? ண்ணு கேட்டேன் வாங்கலாம்னு ஒரு லெட்டர் எளுதிக் குடுத்தா கையெளுத்து போடுறேன்னேன்.பாராபட்சம் இருக்கப்படாதுல்லா? சர்க்கார் பியூனுக்கு நாம கொறஞ்சு போனா பிறவு காந்தி தொப்பிக்கு என்ன மரியாத? என்ன வரிக்கு வரி நாட்டு நடப்பை நையாண்டியாய் அள்ளி தெளித்திருக்கிறார்.
பூமேடை தான் ஜெயிலுக்கு போன கதையை சொல்ல,அதற்கான காரணமாக காந்தி ஜெயந்தி அன்று காந்தி சிலைக்கு நல்ல வெல்வெட்டில் சிவப்பு குல்லா ஒன்றை காந்தி சிலைக்கு அணிவித்தாக சொல்வதும்,கடைசியில் சாகும் தருவாயில் காங்கிரஸ் சின்னம் பசுவும் கன்றும் இல்லையா இப்போ கை சின்னமா மாத்திட்டாங்க என சொல்வதும்.மார்ச்சுவரிக்குண்ணா நம்மள போவச் சொல்லமாட்டாங்க.அவங்களே கொண்டு போவாங்க என்றேன் அவர் “அவ்வளவு அந்தஸ்தான எடம் என்ன?என்றார் “ஏசி பண்ணி வச்சிருப்பான்” என கோட்டி முழுவதும் ஒரே சிந்தனையும் சிரிப்பும்.எங்க போறீங்க மலர் வளையம் எல்லாம் எனக்கு பிடிக்காது என்பது உச்சம்.மிகவும் ரசித்து படித்தேன். நீங்களும் படித்து மகிழுங்களேன்.
-தொடரும்.