Sunday, 27 August 2017

அதிரப்பள்ளிக்கு ஒரு அட்டகாச பயணம்…………….


வணக்கம் தோழமைகளே!

 நீண்ட இடைவெளிக்கு பின் சந்திக்கிறோம். அனைவரும்  நலமா?
கடந்த ஜூன் மாதம் எங்கள் செயற்பொறியாளர் தொலைபேசியில் அழைத்து,சென்னையிலிருந்து அதிகாரிகள் வருகிறார்கள்,அவர்களுக்கு நீர் போகும் வழி மற்றும் திட்டத்தை குறித்து விளக்கமளித்து,அவர்களுடன் சென்று வர வேண்டுமென்றார்.வரும் அதிகாரி பெண் என்பதாலும்,இயற்கை காட்சிகள்,மற்றும் ஒவ்வொரு பொருளையும் சுவைப்பட விவரிப்பீர்கள் என்பதால் நீங்கள் சென்று வாருங்கள் என்றார்.

கரும்பு தின்ன கூலியா? எனது பணியை மிகவும் நேசிப்பதால் எப்போதும் பணித்தொடர்பான குறிப்புகளை தயார் நிலையிலேயே வைத்திருப்பேன்.
என்று போகவேண்டும் என்று கேட்டேன் ஜூன் 23 என்றார்.
ஜூன் 23 அன்று காலை 9.00மணிக்கு பொள்ளாச்சியிலுள்ள வட்ட அலுவலக ஆய்வு மாளிகையில் காத்திருந்தோம்,சரியாக 9.30 மணிக்கு அதிகாரி அம்மையார் அவரது குடும்பத்துடன் வந்திருந்தார்.மிகவும் எளிமையான வாழ்வியல் கொண்டவராக இருந்தார்.அவரது கணவரும்,மகனும் கூட மிக எளிமையானவர்களாக இருந்தனர்.

எத்தனை மணிக்கு கிளம்புவது,எந்த எந்த இடம் பார்க்கவேண்டும்,கேரளா செல்வதால் அங்கு எங்கே சாப்பிடவேண்டும், என அனைத்தையும் குறித்து ஒரு பத்து நிமிடம் அவர்களுக்கு விவரித்தேன்,உடன் செயற்பொறியாளர் கூறிய ஆலோசனைகளையும் ஏற்றுக்கொண்டு,கிளம்பினோம்.

மேடம்,அவரது குடும்பத்துடன் ஒரு ஜீப்பிலும்,நான்,எனது AE கார்த்தி,மற்றும் நீர்மாதிரி எடுக்க சிவக்குமார் அண்ணன்(AGC) ஒரு ஜீப்பிலும் செல்வதாக முடிவு செய்யப்பட்டது.அண்ணன் ஆழியாரில் வந்து இணைந்துக்கொள்வதாக சொல்லிவிட்டதால்.ஆழியாரை நோக்கி கிளம்பினோம்.

ஆழியார் வரும்போது 11 மணியாகி இருந்தது…..





முதலில் அறிவுத்திருக்கோயில் சென்றோம்,அமைதியான பசுமை நிறைந்த சூழல் மனதிற்கு அமைதி தர வேதாத்திரி மகரிஷி அவர்களின் சமாதிக்கு  சென்று சிறிது நேரம் தியானம் செய்து விட்டு அறிவுத்திருக்கோயிலில் உள்ள  மகரிஷி அவர்கள் பயன்படுத்திய பொருட்களை பார்வையிட்டு,பின் மேடம், அவரது கணவர், நான்,கார்த்தி ஆகியோர் சிவில் என்பதால் ஆசிரமத்தின் கட்டுமானம் குறித்து சிறிது நேரம் பேசினோம்…
அது என்னப்பா மேலே ஒரு ரோடு மாதிரி தெரியுது என மேடம் கேட்க,அதுதான் காண்டூர் வாய்க்கால் மேடம் என்று சொல்லி அங்கிருந்து பார்த்தால் ஆசிரமத்தின் டாப் வியூ தெரியும் என்று சொன்னேன்.
ஒரு சில புகைப்படம் எடுத்துக்கொண்டு,,மெல்ல வெளிவந்தோம்….

மேடத்தின் பையன் விக்னேஷ் அணை முழுவதும் பார்க்க வேண்டுமென்று சொல்ல அணையை நோக்கி ஜீப் சென்றது.


  





அணையில் தண்ணீர் மிக குறைவாக இருந்ததால்,நீர்பிடிப்பு பகுதிக்கே செல்லலாம் எனக் கூறினேன்,பின் அணைக் குறித்தான விளக்கங்களை கூறியப்படியே சென்றோம்,ஆங்காங்கே நிறுத்தி புகைப்படம் எடுத்துக் கொண்டபின்,ஆழியார் அணையின் மீதே அமைந்திருக்கும் ஆய்வு மாளிகைக்கு சென்றோம்.இந்த ஆய்வு மாளிகையில்தான் காதலிக்க நேரமில்லை படமாக்கப்பட்டது,விஸ்வநாதன் வேலை வேண்டும் என்ற பாடலின் போது வாளிகளை வீசுவது இந்த sit out ல் இருந்துதான்.





சிறிது நேர ஓய்விற்கு பின்,தயாராக இருந்த மதிய உணவை சாப்பிட்டோம்,நான் சைவ உணவு வேண்டுமென்று கூறியதால். மற்றவர்களுக்கு, மீன் மற்றும் கோழி குழம்பு,வறுவல் என விருந்தோம்பல் பலமாக இருந்தது.இடையில் எனது அலுவலகத்திலிருந்து உடனடியாக எனது கையெழுத்து வேண்டுமென கண்காணிப்பாளர் வர,மேடம் பரவாயில்லை கையெழுத்துப் போட்டுக்கொடுத்துவிட்டு வாருங்கள் என பெருந்தன்மையுடன் காத்திருந்தார்.

அனைவரும் தயாரகி கிளம்ப,சிவக்குமார் அண்ணன் வரவில்லையே என பதற்றமாக,போன் செய்தோம்,சரியான நேரத்திற்கு வந்துவிட்டதாகவும்,கீழே நிற்பதாகவும் சொல்ல,அவரையும் அழைத்துக்கொண்டு சென்றோம்,சட்டென்று வானிலை மாற தூறலும்,மேகம் கவிழ்ந்த மலையும் மதிய வெப்பத்தை போக்கிவிட்டது,வெக்கை தான் மனதிற்குள் இறுக்கத்தையும்,மனிதர்கள் முகத்தில் தேவையற்ற சலிப்பையும் தந்துவிடுகின்றன.மாறாக குளுமையான காற்றோடு இயற்கைச் சூழலும் சேர்ந்துக் கொள்ள மனம் ஏகாந்த நிலையில் மகிழ்ச்சியோடு இருந்தது.

மேடம் செல்லும் வாகனத்தின் ஓட்டுநரிடம் ஒன்பதாவது வளைவில் வண்டியை நிறுத்த சொல்லியிருந்தோம்,அந்த வளைவில் வரையாடுகள் வரும்,மேலும் அங்கு ஒரு காட்சிமுனையும் உண்டு,ஒன்பதாவது வளைவிலிருந்து சற்று மேல் சென்று பார்த்தால் loam’s view point என்று சொல்லப்படும் சாலையின் வ்டிவம் அரைவட்ட வளைவோடு,பொறியியல் பெருமைக் கூறி பயணிக்கும்.

நாங்கள் சென்ற அன்று வரையாடுகளும்,அதுநாள் வரை நான் பார்த்தேயிராத வரையாடு குட்டிகளும் நிற்க,குஷியாகி விட்டேன்,சட்டென்று ஒரு சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம்,பின் வளைவில் சந்தித்துக் கொண்டோம்.
மேடம்: வரையாடு பார்த்தோம்,நீங்க பார்த்தீங்களா?
நான்: மேடம்,வரையாடு குட்டியும் பார்த்தோம்,வரையாடு நம் மாநில விலங்கு,மலையில் செங்குத்தாக நடந்து ஏறும்..

மேடம்: அப்படியா,அடடா,நாங்க வரையாடு குட்டிகளை பார்க்கவில்லையே.
சரி,நேரமாகுது,கிளம்புவோம் என சொல்ல,சட்டென்று அனைவரும்,அவரவர் வண்டிகளில் ஏறிக்கொண்டோம்.

ஆழியார் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மேகம் நீர் முகந்து செல்லும் அரிய காட்சி காண கண் கோடி வேண்டும்,அண்ணே ஃபோட்டோ எடுங்க என்று சொல்ல,

அச்சோச்சோ,மெமரி கார்டை வீட்டில் விட்டு விட்டேனே என கவலையானர்.

சரி விடுங்க,வால்பாறையில் வாங்கி கொள்ளலாம்,எனது அலைப்பேசியின் கேமராவே தெளிவாக எடுக்கும் என்று சொல்லி,புகைப்படம் எடுத்துக்கொண்டு தொடர்ந்தோம்.




அட்டக்கட்டியில் தேநீர் அருந்தி விட்டு,அங்குள்ள நெடுஞ்சாலை துறையின் ஆய்வு மாளிகையிலிருக்கும் காட்சி முனையிலிருந்து மேல் ஆழியார்,சமமட்டக் கால்வாய் போன்ற நீர்நிலைகள் மேற்கு தொடர்ச்சி மலையின் மடியில் தவழும் காட்சியை காண சென்றோம். எத்தனை முறைப் பார்த்தாலும்,காண சலிக்காத ஒன்று,என்பதோடு முதல் முறை பார்ப்பவர்களுக்கு ஆச்சரியமாகவும் பரவசமாகவும் இருக்கும் என்பதால், மேடம் மற்றும் அவரது குடும்பத்தாரை முன் செல்லவிட்டு பின்னால் நாங்கள் சென்றோம்.



ஆனால்,இயற்கையோ,எங்களுக்கும் சேர்த்து பெரியதொரு ஆச்சரியத்தை வைத்திருந்தது,ஆம் பெரியதொரு தெளிவான வானவில் எங்களை வரவேற்க மேற்கு தொடர்ச்சி மலைக்கு வண்ண மாலை அணிவித்தது போன்றதொரு அழகு.நாங்கள் இறங்குவதற்குள் மறைந்துவிடும் என்பதால் மேடம்,மற்றும் அவரது குடும்பத்தாரை நிற்க சொல்லி ஒரு புகைப்படம் எடுத்தேன்.
            

மட்டற்ற மகிழ்ச்சியுடன்,சிறிது நேரம் செலவழித்தோன்,பின் ஆய்வு மாளிகையின் உள்ளிருக்கும் டைனிங் ஹாலில் இருந்து அதே காட்சியை காணலாம் என்று சொல்லி அழைத்துச் செல்ல,படிகள் ஏறும்போது மேடத்தின் கணவர்,உங்களுக்கு அலுவலகப் பணியே சுற்றுலா வருவது போலதான் இல்லையா என்றார்.

           

சிரித்துக்கொண்டே ஆமாம் சார்,ஆனால் சில நேரங்களில் தண்ணீர் கணக்கு பார்த்து பார்த்து சலிப்பாயிடும் சார் என்றேன்.மெல்ல ஆய்வு மாளிகையை விட்டு வெளியில் வர நாட்டு நாவல் பழம் கிடைக்க வாங்கி கொண்டு வால்பாறையை நோக்கி பயணம் தொடர,கண்கொள்ளா காட்சியாக மேகம் மலையை தழுவுவதும்,விலகுவதுமாக ஊடலும்கூடலும் கொள்ள பயணம் ரம்மியமாக,சிவக்குமார் அண்ணே  கவிதை சொல்லுங்க என்று சொல்ல…



சில கவிதைகளை சொல்லி,கார்த்தி புரியுதா என கார்த்தியை வம்பிக்கிழுத்தோம், நாவல்பழம் எங்கள் நாக்குகளை நீலமாக்க, சிறு பிள்ளைகளென நாக்கை நீட்டி பால்யத்தை மீட்டுக்கொண்டோம்.மேடம்பாலாஜி கோயில் செல்ல வேண்டுமென்றதாலும்,மழையின் தூறல் சற்று அதிகமாக இருந்ததாலும்,எங்கும் நிறுத்தமால் நேராக பாலாஜி கோயிலுக்கு சென்றோம்,

         
கிடைத்த வாய்ப்பை நழுவ விடமால் மழையில் நனைந்துக்கொண்டே நடந்தேன்,மனம் மிக லேசாக எந்த சிந்தனையும் இன்றி குழந்தையென மகிழ்வாயிருக்க……காண்பதெல்லாம் அழகாயிற்று…….

               

தரிசனம் நன்றாக இருந்தது என மேடம் சொல்ல,சிரித்துக்கொண்டே நல்லது மேம், டீத்தூள் இங்கு நன்றாக இருக்குமென்றேன்.வாங்கிக்கொள்ளலாம் என்று சொல்ல,அதற்கு முன் வால்பாறை ஆய்வு மாளிகை சென்று சற்று ஓய்வெடுத்த பின் கேர் டேக்கர் முத்து அமைத்த தோட்டத்திற்கு அழைத்து சென்றேன்,அங்கு செடிகள்,காய்களை பார்த்து விட்டு,சௌசௌ கொடியா? இப்பதான் தெரியும் என்றார் குழந்தையின் குதூகலத்துடன்.அதற்குள்ளாக முத்து தேநீருடன் வர,ஆளுக்கொரு ஒரு கப் எடுத்துக்கொண்டோம் மழையால் தேநீரின் சுவை கூடிற்று.

          
மேடத்தின் கணவர் லேட் செய்யவேண்டாம்,மலைப்பாதை கிளம்பலாம் என சொல்ல ஆய்வு மாளிகையை விட்டு கிளம்பினோம்,அதற்குள்ளாக உளுந்து வடையை பார்த்து விட,சிவக்குமார் அண்ணன்,மற்றும் நானும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள்,உளுந்து வடையை பார்த்தால் விடுவோமா?சட்டென்று மழையில் இறங்கி வடையை வாங்கிகொண்டு ஜீப் ஒட்டுநரையும் சாப்பிடச் சொல்லிவிட்டு,சாப்பிட தொடங்கினோம்….கிளம்பலாம என்றார் ஓட்டுநர்.

சோலையார் சாலையில் செல்ல,பைசன் என்று சொல்லப்படும் இந்தியன் ஃகார் தேயிலை தோட்டத்தில் மேய்ந்துக் கொண்டிருக்க,கிளிக்கி கொண்டோம்.

கார்த்தியும்,சிவக்குமார் அண்ணனும் உஷாரா வால்பாறையில் மெமரி கார்டு வாங்கி விட்டார்கள்,அதனால் உன்மத்தம் பூ,காக்கா,குருவி எல்லாவற்றையும் புகைப்படமாக்கி கொண்டு மெல்ல சோலையார் சென்றோம்.


சோலையாரின் நீர்பிடிப்பு வர,தண்ணீர்ப் பற்றி பேசக்கூடாது என நினைத்திருந்தாலும்,என்னையுமறியாமல்,ம் தண்ணீர் குறைவா இருக்கே,என பேச தொடங்க,சற்று நேரம் அதைப் பற்றி பேச,ஆய்வு மாளிகை வர இறங்கினோம்.

          

அங்கே,சோலையார் உ.செ.பொ,மற்றும் அவரது உ.பொ க்கள் இருக்க,அவர்களின் அன்பான வரவேற்புடன் அவரவர் அறைக்கு சென்று களைப்பு தீர குளித்து விட்டு வர தேநீர் தயாராக இருந்தது,யாரும் மீண்டும் அறைக்கு செல்லவேயில்லை லாபியில் அமர்ந்தப் படி மெல்லிய மழையையும் அதற்கிடையே தெரியும் அணையையும்,மலையையும் ரசித்தப்படி இரவு உணவு வரை,காட்டைப் பற்றியும்,விலங்குகள் குறித்தும் மாறி மாறி பேசிக் கொண்டிருந்தோம்.நேரம் சட்டென்று போக,இருளை போர்வையாக்கி தன் எழிலை மறைத்துக்கொண்டாள் இயற்கையன்னை.

               
பறவைகளின் ஒலிகளை கேட்டவாறு,மழைச்சாரலுடன் உண்ண சென்றோம்,சுட சுட இட்லி,தோசை,சப்பாத்தி,கோழிக் குழம்பு,சட்னி,சாம்பார் என களைக் கட்டியது உணவு மேசை.வெந்நீர் பருக இதமாக இருந்தது.இரவு உணவை முடித்து விட்டு மீண்டும் கதைப்பேச ஆரம்பித்தோம்.
நேரமாக,காலையில் நேரமாக புறப்பட வேண்டுமென்பதால் அனைவரும் இரவு வணக்கத்துடன் அவரவர் அறைக்கு சென்றோம். கார்த்தியும், சிவக்குமார் அண்ணனும் ஒரு அறை,ஓட்டுநர்கள் இருவருக்கும் ஒரு அறை மேடம்& குடும்பத்திற்கு ஒரு அறையென ஒதுக்கப்படிருந்தது,எனது அறையில் நான் மட்டுமென்பதால்,உறக்கம் வரும் வரை இளையராஜா பாட்டை கேட்டப்படியே உறங்கிப்போனேன்.

அதிகாலை 4மணிக்கே விழிப்பு வந்து விட, விழித்துக்கொண்டே படுத்திருந்தேன்,எனது அறையின் சன்னலருகே சட்டென்று மிக இனிமையான பறவையின் பாட்டொன்று கேட்க,வேகமாக எழுந்து சன்னல் வழியே பார்க்க தொடர்ந்து பாடிக்கொண்டேயிருந்தது,இருப்புக் கொள்ளாமல் சட்டென்று குளித்து தயாராகி,கேமாரவுடன் ஆய்வு மாளிகையை விட்டு வெளியே வந்தால் யாருமில்லை,மெல்ல ஆய்வு மாளிகையின் பின்புறம் செல்ல பறவையை கண்டு விட புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.

                         


மீண்டும் அறைக்கு வர கச்சேரி நடத்திக்கொண்டிருந்தது பறவை,அதை வாய்ஸ் ரிக்கார்ட் செய்தேன் எனினும் நேரில் கேட்பது போன்று அத்தனை தெளிவாயில்லை,மனமோ இனம் புரியாத மகிழ்வுடன் பரபரவென இருந்தது,கேமாரவுடன் சுற்றி சுற்றி வர,கேர் டேக்கர் ராமர் என்னம்மா,சீக்கிரமா எழும்பிட்டீங்க போல என சொல்லி விட்டு தேநீர் கொடுத்தார்.எப்படி ராமர் இந்த நேரத்திலேயும் தேநீர் தர்றீங்க என்றேன்.

சிரித்துக்கொண்டே என்னம்மா,எதையோ தேடுறீங்க என்றார்,ஒரு பறவை ஒரு மணிநேரத்திற்கும் மேலே பாடிக்கிட்டு இருக்கு,இவ்வளவு இனிமையான இசையை நான் கேட்டதேயில்லை,இளையராஜாவை விட இனிமை என்று சொல்ல,சிரித்துக்கொண்டார்…

                            

இயற்கை பெரிசு ராமர்,தெரியும் என்றேன்,வாங்கம்மா,அந்த பறவையை காட்டுகிறேன் என்று ஆய்வு மாளிகையின் முன் பகுதியின் வலது கோடிக்கு அழைத்துச் செல்ல ஒரு கறுப்பு பறவை அருகே தெரிய ,இதுதான் என்றார்,குயிலா என்றேன்,இல்லைம்மா,குயிலு காப்பி கலரா இருக்கும்,இது நல்ல கறுப்பு பாருங்க என்றார்,தினம் ஒரு மணிநேரம் பாடுமென்றார்.

               

வாக்கிங்போய்விட்டு வந்து கொண்டிருந்தார் மேடத்தின் கணவர் என்னம்மா ரெடியாட்டீங்க போல என்றார்,சீக்கிரமா போனா காடு பார்க்க அழகா இருக்கும்,சூரிய ஒளியின் ஊடுருவலும்,பறவைகளின் கீச்சொலியும்,ஆறுகளின் சலசலப்பும் அருமையா இருக்கும்,அதோடு ஆனை பார்க்கலாமமென சொல்லிக்கொண்டிருக்க,சிவக்குமார் அண்ணனும்,விக்னேஷூ ம் அணைக்கு சென்றிருந்தோம் மேடம்,நீங்க ரெடியானது தெரியலை இல்லைன்ன சொல்லியிருப்போம் என்றார்.விக்னேஷும்,அவரது அப்பாவும் அறைக்கு செல்ல, நான், கார்த்தி, சிவக்குமார்அண்ணன்,அருண்பாலு யாவரும் புகைப்படம் எடுத்துக்கொண்ட பின் ஆய்வு மாளிகை மற்றும் அணையை அதிகாலையில் ரசித்துக்கொண்டிருந்தேன்.
               
சட்டென்று சிவக்குமார் அண்ணனிடம்,ஏன் அண்ணே, பார்க்குமிடத்திலெல்லாம் உந்தன் பச்சை நிறம் தோன்றுதேன்னு பாரதியார் பாடியிருக்காரே இந்த மாதிரி காட்டுக்குள்ளேயிருந்து எழுதியிருப்பாரோ எனக் கேட்க,யதுகிரியம்மா எழுதிய புத்தகம் படிச்சு பாருங்க மேடமென்றார்.

            

முதல் நாளே,காலை உணவிற்கான பட்டியலை வாங்கியிருந்தார் ராமர்,அதனால் கேட்டப்படி ஆப்பம்,இட்லி,தோசை வர,ஆப்பம் சூப்பரோ சூப்பர் என சொல்லும்போதே அம்மாவின் நினைவு வர வீட்டிற்கு அலைப்பேசியில் பேசினேன்,அம்முவும் அம்மாவும் பேசினார்கள்.கேரளா சோலையார் கிளம்புவதாக சொல்லி விடைப்பெற்றேன்.


சுறுசுறுப்பாக மழையிலும் கிளம்பினோம்.
                                      
மழுக்கிபாறா வழியே செல்ல கேரள எல்லை வர அனுமதி சீட்டு பெற காத்திருந்தோம்.


தேயிலை தோட்டம் கைக்கெட்டும் தூரத்திலிருக்க,பெயர் தெரியாத பறவைகள் லேசான மழையில் குளித்தப்படி வரிசையில் அமர்ந்திருக்க புகைப்படம் எடுத்துக்கொள்ள அதற்குள்ளாக,அனுமதி சீட்டு வர கிளம்பினோம்.
              

வனப்பாதை ஆரம்பிக்க,ஏற்கனவே அனுமதி சீட்டு பெறுமிடத்தில் வனத்தைப் பற்றி கூறியிருந்ததால்,அனைவரும் வனத்தை ரசிக்க தயார் நிலையில் இருந்தனர்.ஆங்காங்கே நிறுத்தி இயற்கையின் பேரழகை கண்டு களித்தப்படி சென்றோம்,மழையா,பனியா,மேகமா எதுவென இனம் பிரிக்க முடியாமல் ஒன்றொடு ஒன்று போட்டி போட்டு மலையை மூட,லேசான சாரல், தலைக்குளித்த பெண் என இலைகள் நிற்க நறுமண புகையென மேகமும்,ஆங்காங்கே தலைக்காட்டும் சூரிய ஒளிக்கு ஆவியாகி போகும் இலையில் தேங்கிய நீரும் மனதை மயக்க,பேச்சு குறைந்து இயற்கையோடு ஒன்றி பயணித்தோம்.                                    




கார்த்தி தூங்கி விட,மீண்டும் கார்த்தியை வம்புகிழுத்தோம்,தீனியை பிரிக்க கேலி தொடங்கி,மீண்டும் அமைதியாயிற்று ஜீப்.

பாரதபுழா வர, எது என்ன ஆனா என்ன,நம்ம பொழப்பு நமக்குன்னு,இவ்வள்வு தண்ணி கேரளதானே போகுது,எனக் கேட்டுக்கொண்டே,நீர்வழி குறித்து பேச தொடங்க,சட்டென்று சுதாரித்து நிறுத்திக் கொண்டேன்.

ரு இடத்தில் அதிகமாய் மேகமிறங்கி அழகு முகாமிட்டிருக்க,ஜீப்பை நிறுத்தி இறங்கி ரசிக்க…

.நான்,கார்த்தி,மற்றும் ஓட்டுநர்கள் தவிர மற்றவர்கள் அந்த இடத்திற்கு புதிது என்பதால் சற்று அதீத மகிழ்வில் இருந்தார்கள், அனைவரின் இதழ்களிலும் புன்னகை பூத்திருக்க, அறியாதோரும் புன்னகையால் அறியப்பட்டார்கள்.வழமைப்போல் புகைப்படம் எடுத்துக்கொண்டு,கேரள சோலையார் அணை நோக்கி பயணித்தோம். 







சற்று தூரம் செல்ல கேரள சோலையாரின் நீர்பிடிப்பு பகுதி ஆரம்பமாக, அணையை நெருங்கினோம்,அணை மேகத்துடன் கைகுலுக்கிக் கொண்டிருக்க,நாங்களும்,கைக்கொடுத்தோம்அணைக்கு.

எப்போதும் போல அணை குறித்தான விளக்கங்கள் கொடுத்த பின்னர்,இயற்கையின் பேரழகில் லயித்து சற்றே பேச்சற்று மௌனித்திருந்தோம்.
                                  

பிரிய மனமின்றி அணையை விட்டு வெளிவந்தோம்.
                   

 அடுத்து செல்லப்போகும் இடம் இன்னும் கூடுதலான அழகுடன் இருக்குமென நான் சொல்ல,மீண்டும் கிளம்பினோம்.இப்போ எங்கே போறோம் என்றார்கள்.பொரிங்கல்குத்து என்ற அணைக்கு செல்லப்போகிறோம்,அனைவரும்,கண்களையும்,மனதையும் திறந்து வைத்துக்கொள்ளுங்கள்,இயற்கையன்னையின் அணைப்பிற்குள் செல்ல போகிறோம் என ஒரு வித்தைக்காரன் போல சுவாரஸியத்தை கூட்டிவிட்டு,எனது வாகனத்திற்கு திரும்பினேன்.
           
உயர்ந்த மரங்களுக்கிடையேயான வனப்பாதையில் பயணம்,நெகிழ்ந்த மனதுடன் அனைவரும் பயணிக்க,வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஆனந்தம் குடிக்கொள்ள பொரிங்கல்குத்திற்கு செல்லும் சாலை பிரிவு வந்தது.
                      
தேநீர் அருந்தலாமா எனக் கேட்க,வேண்டாம் ! என்று அனைவரும் கூறிவிட,பொரிங்கல்குத்து நோக்கி பயணம் தொடர,வழி நெடுகிலும் உயர்ந்த மரங்களுக்கிடையே மேகமிறங்கி ஊஞ்சலாட,கண்கள் விருந்துக் கொள்ள அணை வர வார்த்தைகளில் விவரிக்க முடியாத பேரழகுடன் இயற்கையின் மடியில் அணை தஞ்சம் கொண்டிருந்தது,ஒரு புறம் சோலைக்காடுகள் விரிந்திருக்க,இன்னொரு புறம் தண்ணீர் விரிந்திருக்க,சொல்ல முடியாது பார்த்தால்தான் புரியும்….
           

எப்போது பொரிங்கல்குத்து சென்றாலும்,அங்கு கவிழ்ந்து கிடக்கும் பரிசலொன்றை பார்ப்பது வழக்கம்.


பார்க்கும் போதெல்லாம் செம்மீன் கதையும் அதில்வரும் செம்பன்குஞ்சு தோணியும்,வலையும் சம்பாதிக்க படும்பாடும்,அப்படியான ஒரு தோணியில் செல்லும் பழனியும்,கறுத்தம்மா, பரீக்குட்டியென அனைவரின் நினைவும் வரும்,எப்போதும் போல் கார்த்தியிடம் இந்த பரிசலை பார்த்தால் என்ன நினைவுக்கு வருகிறது என கேட்க.
            
அவர் பதில் சொல்வதற்குள்,அலுவலகத்திலிருந்து அழைப்பு வர அலைபேசியுடன் விலகி சென்றேன்.
              
எப்போதும் போல் தண்ணீர் கணக்குகளை கொடுத்துவிட்டு வர,அனைவரும் புகைப்படம் எடுத்து முடித்திருந்தார்கள்,நல்ல பசியில் இருந்தார்கள், பொரிங்கல்குத்து ஆய்வுமாளிகையில் மதிய உணவு தயாராக இருக்க,ஆய்வு மாளிகை எங்கே என்று கேட்டார்கள்,நின்ற இடத்திலிருந்து எதிரேயிருந்த மலையின் உச்சியில் இருந்த கட்டடத்தை காட்ட,அவ்வளவு உயரமா எனக் கேட்க.

வாராய்,நீ வாராய் என நான் கேலியாக பாட, சிரித்துக்கொண்டே அனைவரும் வாகனத்தில் ஏறி பயணித்தோம்,ஆய்வுமாளிகை நெருங்க, மழை வந்து விட்டது,மழையில் நனைந்த பெண்ணாய், மெருகேறிய அழகுடன் இயற்கை சிரித்துக் கொண்டிருந்தது .சொல்ல முடியாது, சொல்லிலும் முடியாத பேரழகு.

            
 பசிக்கு உணவாய் இயற்கை வீற்றிருக்க,பசியை மறந்து அங்கிருந்த பெண் சிலையையும்,
                        
தடாகத்தையும் சுற்றி வந்து காட்சி முனையிலிருந்து பொரிங்கல்குத்து அணை அழகுடன் காட்சியளிக்க அதை பார்க்க சென்றுவிட்டனர்.

     

ஆய்வு மாளிகையின் கேர்டேக்கர் வாசனை தேடி நான்,கார்த்தி,சிவக்குமார் அண்ணனும் செல்ல…கார்த்தி வாசனை கண்டுபிடித்து தமிழ்நாட்டிலிருந்து வந்திருப்பதாக செய்தியை  தெரிவித்தார்,அதற்கிடையில் நானும் வாசனுடன் அலைப்பேசியில் தொடர்புக்கொண்டு பேச,அவர் வந்தார், கேரள சுற்றுலா துறை சார்பாக சில பயணிகளும் வந்திருந்தனர். அதனால் தாமதமாகி விட்டதென மலையாளத்தில் சொல்ல,எனக்கு தெரிந்த மலையாளத்தில்நானும் பேச,சந்தோசமாக,எங்களை அழைத்து அறைகளை திறந்து விட்டார்.


பின் உணவு உண்ணும் அறைக்கு சென்றோம்,வாசன் மிகுந்த அன்போடு,கேரள அதிகாரிகள் சொல்லியிருந்தார்கள் என்பதால் உணவை கவனமுடன் தயார் செய்திருந்ததாக சொல்லி பரிமாறினார்.

                    

கேரள சோறும்,மீன் குழம்பு,கோழி க்ரேவி,சாம்பார்,ரசம்,பொரியல் இரண்டு மூன்று ஆச்சார் வகைகள்(ஊறுகாய்) என பலமான உணவு பட்டியலிருந்தது. மகிழ்வுடன் உண்டதற்கு உணவு மட்டுமில்லை கேரள அதிகாரிகளின் அன்பும்,வாசனின் கவனிப்பும் மனதை நிறைத்திருந்தது.
              
நான் மலையாளத்தில் பேசியதால்,வாசன் சற்றே மகிழ்வானர்.சிறிது ஓய்விற்கு பின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை நோக்கி பயணித்தோம்.
அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி தான் மேடத்தின் கணவரும்,மேடமும் மிகவும் பார்க்க விரும்பிய இடமென்பதால் உற்சாகமாக பயணித்தார்கள்.


செல்லும் வழியில் பயணித்தார்கள்,செல்லும் வழியில் Charpa falls வர அனைவரும் மழையை பொருட்படுத்தாமல் நனைந்து கொண்டே உற்சாகமாக இறங்கி சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டு, திரும்பினோம்.




அருவியில் குளிக்க முடியாவிட்டாலும்,மனம் குளித்தே திரும்பியது….

           

நேரமாகி விடுமென்பதால் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை நோக்கி விரைந்தோம், எங்களோடு தண்ணீரும் பயணித்து வர,அதுதான் பாகுபலி படத்தில் வரும் இடமென்றும்,எங்களுக்கு புன்னகை மன்னன் பால்ஸ்,இப்போதைய குழந்தைகளுக்கு பாகுபலி பால்ஸ் எனவும் கூற,அப்படியா என மீண்டுமொருமுறை அந்த  ஆற்றை பார்த்தனர், நீர்வீழ்ச்சியில் எப்போதையும் விட நீரின் அளவு மிக குறைவாக இருந்ததால்,நீர்வீழ்ச்சி விழும் அடிவாரத்து அனுமதித்தார்கள். சாலையிலிருந்து  ஒரு கிலோமீட்டருக்கு மேலாக நடந்து சென்றோம்,பாதை சற்று ஏற்றமும்,இறக்கமுமாக இருந்தது,வழிநெடுகிலும் கற்களால் பாதை அமைக்கப்பட்டிருந்தது,ஒரு கிலோமீட்டருக்கு பின் அரை கிலோமீட்டர் தூரத்தில் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் தண்ணீர் கலிங்கு போன்ற அமைப்பின் முன் சேர்ந்திருக்க அதில் குளித்துக்கொண்டிருந்தார்கள்.



அங்கிருந்து மேலும் இரண்டு கிலோமீட்டர் வலது கைப்பக்கம் நடந்து சென்றால் நீர்வீழ்ச்சியின் அடிவாரத்திற்கு செல்லாலம் என்றார்கள்,அந்த பாதையும் முன் வந்த பாதையை விட மிகவும் கடினமாக இருக்க,மேடத்தை பார்த்து அவரது மகனும்,கணவரும், வரவேண்டாம் எனச் சொன்னார்கள்






மேடமோ என்னால முடியும் வருவேன் என்று சொல்லிவிட,அவருடன் நானும்,அவரது மகனும் மெல்ல நடந்து சென்றோம்,ஒரு வழியாக நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தை அடைந்தோம்.


மேகம் சூழ,மழை வர தயாராய் இருக்க,அருவியின் பிரம்மாண்டத்தில் பிரமித்து நின்றோம்,புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.



நேரம் கடந்து விட்டால்,மீண்டும் சோதனை சாவடியில் அனுமதிக்க மாட்டார்கள் என்பதால்,வேகமாக அடிவாரத்திலிருந்து மேலேறி வந்தோம்,அனைவருக்கும் ‘அப்பாட’ என்றிருக்க,வெளியில் வந்து தேநீர்,வடை சாப்பிட்டு விட்டு,மீண்டும் தமிழகம் நோக்கி காட்டுப் பாதையிலேயே திரும்பினோம்,மாலை ஆறு மணிக்கு தமிழக,கேரள எல்லையை அடைந்தோம்.அங்கிருந்த கடையில் என் மகளுக்காக ஹோம் மேட் சாக்லேட்,தேன்,ஆலிவேரோ ஜெல் போன்றவற்றை வாங்கி கொண்டு,சோலையார் ஆய்வு மாளிகை வர,இறங்கினோம்.

             
எப்போதும் போல் வரவேற்ற ராமர் தேநீர் கொடுக்க,சற்று ஓய்வெடுத்த பின்னர் பொள்ளாச்சி நோக்கி பயணமானோம்.இயற்கையின் சுழற்சியில் மெல்ல இருளை போர்த்திக்கொண்டு இரவு வர,இளையராஜா பாட ஆரம்பித்தார்,அனைத்து உபகரணங்களிலும் மின்சக்தி(charge) குறைந்து விட்டதால், கம்பன், கண்ணதாசன் என தொடங்கி இன்றைய திரைப்பாடலாசிரியர்களின் பாடல் வரை அலசி ரசித்துக் கொண்டே ஆழியார் வந்திறங்கினோம்.ஆழியார் ஆய்வு மாளிகையில் மேடத்தையும் அவரது குடும்பத்தாரும் அன்றிரவு தங்க ஏற்பாடு செய்திருந்தோம்.பின்னர் அவர்களிடம் பிரியா விடைப் பெற்று அவரவர் இல்லம் திரும்பினோம்.


இந்த கட்டுரையின் நோக்கம்,பயணத்தின் மூலம் பெறும் பாடமும்,கற்றுக்கொள்ளும் செய்திகளும் ஏராளம்,மனமும்,உடலும் புத்துணர்ச்சி பெறுவதுடன்,அறிவும் பெருகுகிறது,மற்றவர்களுடன் பழகவும்,இணக்கமாக இருக்கவும் பழகிக் கொள்கிறோம், உணவு, மொழி, தட்பவெட்ப மாற்றம் என பல்வேறு புதிய சூழல் இருந்தாலும், இயற்கையாலும்,அன்பாலும் எப்போதும் இந்த புவியோடு நாம் இணைக்கப்பட்டிருக்கிறோம் என்பதான பெரிய புரிதல் நிகழ்வது பயணத்தால்தான்,ஒரு புத்தகம் படிப்பதற்கு இணையான பெரு மகிழ்வை தருவது பயணம்,பயணியுங்கள் பயிலுங்கள்.

அன்புடன் லீலா.





































No comments:

Post a Comment