வணக்கம் தோழமைகளே……
ஒரு நாட்டின் நீடித்த முன்னேற்றம் என்பது சுற்றுச்சூழல்
மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக மேம்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தான்
அமையும்.
சுற்றுச்சூழல்
என்றால் என்ன? நம்மை சுற்றியுள்ள எதுவும் எல்லாமும் என்ற பொருள் தருமெனினும்.சுற்றுச் சூழல் என்பதற்கு ஒரு
குறிப்பிட்ட definition இருக்க வேண்டுமென, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986ல்
சுற்றுச்சூழல் என்றால் என்ன என்பதை வரையறுக்கிறது.
“நீர்,நிலம்,காற்று
ஆகியவற்றை உள்ளடக்கியதே சுற்றுச்சூழல் மற்றும் நீர்,நிலம்,காற்று,இவைகளுடன் மனிதனுக்கும்,மற்ற
உயிரினங்களுக்கும், நுண்ணுயிர்களுக்கும் உள்ள
பிணைப்பே” சுற்றுச்சூழல் ஆகும்.
இது ஒருபுறமிருக்க வளர்ச்சி என்ற ஒன்று தொடர் நிகழ்வாக மனிதன் தோன்றிய நாளிலிருந்து நிகழ்த்தப்படுகின்றன.ஒரு நாட்டின் சுற்றுச்சூழல் பிரச்சனையென்பது அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் அளவை பொருத்து அமைகிறது.இயற்கை வளம்,மக்கள் தொகை பெருக்கம் அவர்களின் வாழ்க்கை முறை என அனைத்தும் சுற்றுச்சூழலின் பாதுகாப்பு மற்றும் அழிவிற்கு காரணமாகிறது. உலகளவில் சுற்றுச்சூழல் மீது கொள்கை ரிதீயான பிடிப்பு இல்லாத காரணம் போலவே இந்தியாவிலும் அதே நிலைதான் நிலவுகிறது.தனிநபர் உள்நாட்டு உற்பத்தி உயரும் போது சுற்றுச்சூழலின் பாதிப்பும் முதலில் உயருகிறது பின்பு வீழ்ச்சியடைகிறது, EKC (Environmental Kuzent’s curve) காட்டுவது போல்.எனினும் EKC பலரால் எதிர்க்கப்பட்ட ஒரு எண்ணக்கருவாகும்.(CONCEPT).”Pollute first and clean up later” என்ற கொள்கைதான் இந்த EKC.இதை நோபல்பரிசு வென்ற பொருளாதார நிபுணர் கென்னத் ஆரோ அவர்கள் 1995 ல் எதிர்த்தார்.
ஏனெனில்,முதலில்
மாசுப்படுத்திய பின் சரிசெய்வது என்பது முற்றிலும் தோல்வியடைந்த கருத்தாகும் சில சரிசெய்ய
முடியாத சுற்றுச்சூழல் பாதிப்பை, வளர்ச்சியடைந்த பின் சரி செய்ய முடியாதென்பதுதான்
அடிப்படை கருத்து.
நிற்க.
நீரும்,காற்றும்,நிலமும்,உயிரினங்களும்,நுண்ணுயிரிகளும்,மனிதனும்
தொடர் கண்ணிகளால்ஆக்கப்பட்டசங்கிலியால் இணைக்கப்பட்டிருப்பது
தான் இயற்கையின் சாதனை.
உயர்திணையான மனிதன்
முதல் அஃறிணையான மற்றவைகளும் ஒன்றை ஒன்று சார்த்திருப்பதுதான் சுற்றுச்சூழலின் அடிப்படை
எனலாம்.
நீரை சார்ந்து
நிலமும்,நிலம்,நீர்,காற்று சூரிய ஒளியை சார்ந்து தாவரங்களும், விலங்குகளும் மற்ற உயிரினங்களும்
உள்ளதே சான்றாகும்.
நிலம்,செடி,கொடிகளுக்கும்,மனிதனுக்கும்,விலங்குகளுக்கும்
உணவளிக்கிறது. நிலத்திற்கான உணவை மேற்கூறியவற்றின் கழிவுகளிலிருந்து பெற்றுக் கொள்கிறது.இதன்
மூலம் இது ஒரு சுழற்சி முறை என்பதும் புரிய வரும்.இதில் ஒரு கண்ணி அற்றுப் போனாலும்
இந்த சுற்றுச்சூழல் பாதிப்படையும்.இயற்கை பாதிப்படைந்தால் மனிதகுலத்திற்கான அழிவு தொடங்குவதை
மனிதன் புரிந்துக் கொள்ள வேண்டும்.
இயற்கையை வெல்லுமா
மனிதம்?
மனிதனுக்கு,இந்த
பூமிக்கு வேண்டிய அத்தனை செல்வங்களையும், வளங்களையும் தருகின்ற இந்த இயற்கையன்னையை
மனிதம் வென்றிடுமா?
இயற்கையின் சூழல்தான் நம்மை பாதுக்காக்கிறது என்ற உணர்வே இல்லாமல், இயற்கையை அழித்து வளர்ச்சியை உருவாக்குவது ஒரு முட்டாள்தனமாக உணரப்படவே இல்லையென்பதுதான் ஆழ்ந்த வருத்தத்தை உண்டாக்குகிறது.
தண்ணீருடன் சவால்
விடும் பணிதான் என்னுடையது,அணைகள் கட்டுதல், வாய்க்கால் மற்றும் தண்ணீரை எடுத்துச்
செல்லும்,தேக்கி வைக்கும் கட்டமைப்புகளை கட்டுவது,வடிவமைப்பது மற்றும் தண்ணீர் பங்கீடு
ஆகியவை தான்.
இயற்கையோடு போராடும்
பணி! அதீத உடல் ஆற்றலும்,மன ஆற்றலும் தேவை,எனினும் இயற்கையை வெல்ல முடியுமா? நீரோட்டத்தை
தடுத்து நிறுத்துவதை என்னால் வளர்ச்சி என ஒப்புக்கொள்ள முடிவதில்லை நிறுத்தப்படுவது
நீரோட்டம் மட்டுமல்ல,அங்கு வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கை,நினைவலைகள்,அங்கு சுதந்திரமாக
பறந்த பறவைகள்,சுற்றி திரிந்த விலங்குகள் அத்தனையின் வாழ்க்கையும் நிறுத்தப்படுகிறது.
ஒரு பொறியாளாராக
வளர்ச்சியை நோக்கி பயணிக்கவும்,ஒரு இயற்கை ஆர்வலராக,மானுடத்தின் மீது அன்பு கொண்டவளாக
அதை பாதுகாப்பதற்காக பயணிக்கவும் வேண்டிய சூழலில்தான் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தேன்…
இரு விழிகளாலும்
ஒரு பொருளை மட்டும்தான் ஒரு நேரத்தில் பார்க்க முடியும் ஆனால் இரு விழிகளாலும் இரு
பொருளை சமநிலையோடு ஒரே நேரத்தில் பார்க்க வேண்டிய சூழல் எனக்கு.
அணை,சாலை,பாலம்,அணு
உலைகள்,மின் நிலையங்கள், தொழிற்சாலைகள், நிலத்தடி நீரை எடுக்க அனுமதியென இன்னும் எத்தனையோ முன்னேற்றங்கள் வந்தாலும் அத்தனையும்
இயற்கையை அழித்துதான் வரமுடியும்.
அருந்ததி ராயின் “The Greater Common Good”.வைரமுத்துவின் “கள்ளிக்காட்டு இதிகாசம்” "மூன்றாம் உலகப்போர்". இறையன்புவின் “ஆத்தங்கரையோரம்” போன்ற நூல்கள் எல்லாம் இயற்கைக்கு மாறாக,எதிராக அதிகாரமும்,ஆளுமையும் கொண்டவர்கள் சமர் தொடுத்த போது சாமனியனுக்கும்,அவனது இளமை கால நினைவுகளுக்கும் நேர்ந்த கொடுமைகளை கூறுகிறது.
இன்றும் கூட சாலைகளை
அகலப்படுத்தும் பணிகளுக்காக வெட்டப்பட்ட மரங்களை பார்க்கும் போதெல்லாம் மனம் பதறிதான்
போகிறது.நிச்சய்மாக இயற்கையை குறித்த தொலை நோக்கு உள்ளவர்களாய் இருந்திருந்தால், மரங்களை
இடம் பெயர்ப்பதற்கான செலவுகளையும்,அம்மரங்களை மறுநடவு செய்வதற்கான நிலங்களை தேர்வு
செய்தல் மற்றும் அதற்கான செலவுகளை மதிப்பீட்டில்,ஒப்பந்தத்தில் சேர்த்திருப்பார்கள்.
இன்றைய சமூகம்
நுகர்வோர் சமூகமாக மாறிவிட்டதால் பொருளாதார வளர்ச்சியே வளர்ச்சி என நினைத்துக் கொள்வதும்.அடிப்படை
தேவைகளை மட்டும் பூர்த்தி செய்து கொண்டு வேண்டாதவற்றை ஒதுக்குபவரை வறியவரென நினைக்குமொரு
மனநிலையும் பரவலாக காணப்படுகிறது. இதனால் வளர்ச்சி என்பது அறிவியல் மற்றும் பொருளாதார
வளர்ச்சி என்றே எண்ணப்படுகிறது.இயற்கையை வெல்லுவதே வெற்றி என்றும் வாழ்க்கையென்றும்
நினைக்கிறார்கள்.
இயற்கையை ஒருநாளும்
வெல்லமுடியாது…….
இயற்கையை அழிப்பதாக எண்ணிக்கொண்டு தன்னையே அழித்துக்கொள்ளும் மானுடத்திற்கு
தெரியாது இயற்கை தன்னை புதுப்பித்துக் கொள்ளும் என்று…….
சுற்றுச்சூழல்
மற்றும் வளர்ச்சி குறித்தான வாதங்களும் விவாதங்களும்:
வாதம்:பட்டினியால் வாடும் பல்லாயிரக் கணக்கான
மக்களை காப்பது இயற்கை வளங்களை காப்பதை விட முக்கியமில்லையா? மேலும் பல இயற்கை வளங்கள்
புதுப்பித்துக் கொள்ள கூடியவை.வளர்ந்த நாடுகள் இயற்கையின் மீது காட்டும் அக்கறையை,கடுமையான
ஏழ்மையில் வாடும் வளரும் நாடுகள் காட்ட முடியாது…
விவாதம்: ஏற்கனவே வேண்டிய அளவிற்கு இயற்கை வளங்களை
அழித்து வீண் செய்துவிட்டோம்.அதனால் பூமி மிக அபாயமான நிலையில் இருக்கிறது.நமது சந்ததியினருக்கு
ஒரு நல்ல சுற்றுச்சூழல் உடைய பூமியை விட்டுச் செல்ல வேண்டியது நம் கடமை என்பதால் இயற்கை
வளத்தையும் ,பூமியையும் பாதுக்காக்க வேண்டியது இருக்கிறது.மேலும் ஏழ்மையும், சுற்றுச்சூழல்
பாதிப்பும் ஒன்றொடு ஒன்று தொடர்புடையவை, மழைக் காடுகளை அழித்தன் மூலம் மண்ணின் மைந்தர்களுக்கு
போக இடம் ஏதுமின்றி நகரத்திற்கு அநாதைகளாக இடம்பெயர வேண்டியுள்ளது. அதோடு மாசுப்படுத்தப்பட்ட
நீர், பயிர்களின் விளைச்சலில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.தட்ப வெட்ப மாற்றத்தால் வளமான
நிலங்கள் பாலைவனம் ஆகின்றன, கடலோர வெள்ளங்களால்பல்லாயிரக் கணக்கான மக்கள் அழிகின்றனர்.வளரும்
நாடுகள் தன் மக்களுக்கு நல்லதொரு எதிர்காலத்தை தர நினைத்தால், நீடித்த சுற்றுச்சூழல் பாதுக்காப்பையும், வளர்ச்சியையும்
தேர்ந்தெடுக்க வேண்டும்.
வாதம்: தொழிற்சாலை மயமாக்கப்பட்ட நாடுகள் வலியுறுத்தும்
இயற்கை மற்றும் பசுமை சார்ந்த விஷயங்கள் வளரும் நாடுகளின் முன்னேற்றத்தை தடைப்படுத்தும்.ஏனெனில்
வளரும் நாடுகளின் பணிகளில் அது சுணக்கத்தை ஏற்படுத்தும் விஷயமாகவே இருக்கும்,மற்றும்
மூன்றாம் உலக நாடுகள் இடையே பெரும் இடைவெளியை உண்டாக்கும்.மேலும் பொருளாதார போட்டியாளர்களை
வேண்டுமென்றே தடை செய்வதற்கான வழியாகிவிடும்.
ஏற்கனவே,அமெரிக்க
மற்றும் அய்ரோப்பா நாடுகள்,வளரும் நாடுகளில் குறைந்த செலவில் தாயராகும் பொருட்களை இறக்குமதி
செய்து கொள்வதற்கு, இறக்குமதி வரி அதிகபட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அந்த பொருட்கள்
அமெரிக்க மற்றும் அய்ரோப்பிய சந்தைகளில் விற்பனையாவது குறிப்பிட வேண்டிய ஒன்று.மேலும்
நல்ல லாபம் தரக்கூடிய ஆனால் இயற்கையை மாசுப்படுத்தும் தொழிற்சாலைகளை நிறுவுவதில் தயக்கம்
காட்டினால்,அது நமது தேசத்தை பொருளாதார அடிப்படையில்
பின் தங்க வைப்பதற்கான முகாந்திரமாகவே இருக்கும்.
விவாதம்:பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு வாழ்வு தரும்
பொருளாதார முன்னேற்றத்தை யாரும் தடை செய்ய சொல்லவில்லை.அதே நேரத்தில் சுற்றுச்சூழல்
குறித்தான அக்கறை,சமூக நீதி மற்றும் பொருளாதார வளர்ச்சியை உள்ளடக்கிய ஒரு நீடித்த நிலைத்த
வளர்ச்சியை வலியுறுத்த வேண்டும்.கட்டுபாடற்ற வளர்ச்சியை பூமி தாங்காது…ஏற்கனவே வளர்ந்த
நாடுகளிலுள்ள நிறுவனங்கள், சுற்றுச்சூழலை மேம்படுத்தும் பொருட்டு அங்கு தயாரிக்கப்படும்
பொருட்களுக்கு அதிக விலையை நிர்ணயம் செய்துள்ளன,இந்நிலையில் தன் நாடுகளின் இயற்கையை
மாசடைய செய்து குறைந்த செலவில் வளரும் நாடுகள் தயாரிக்கும் பொருட்களின் மூலம் வளர்ந்த
நாடுகள் லாபம் காண்பது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.
வாதம்:வளர்ந்து வரும் நாடுகளில்,மக்கள் பெருக்கத்தின்
தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு பொருளாதார முன்னேற்றம் அவசியம். தொழிற்சாலை மயமாக்குதலை
கட்டுப்படுத்த வேண்டுமெனில்,மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான
சில சட்ட திட்டங்களை கொண்டு வரவேண்டும் இதன் மூலம் அத்தியவசியமான தண்ணீர் போன்ற இயற்கை வளங்களை பாதுக்காக்க
முடியும்.
விவதாம்:எந்த தேசமாக இருந்தாலும் கட்டுப்பாடற்ற மக்கள்
தொகை பெருக்கம் ஒரு விரும்பத்தகாத தாக்கத்தையே உருவாக்கும்.தேசத்திற்கு மட்டுமல்ல மொத்த
பூமிக்கோளுக்கும் ஆபத்துதான்…சப் சஹாரன் ஆப்ரிக்க பகுதியின் ஏழ்மை மற்றும் சுற்றுச்சூழல்
பிரச்சனைகளுக்கு காரணமே வேகமாக பெருகி வரும் மக்கள் தொகையே….அதே நேரத்தில் ஒரு தம்பதியருக்கு
ஒரு குழந்தை என்ற திட்டத்தை செயல்படுத்தி வரும் சைனா செல்வநிலை வாய்ந்த நாடாக இருக்கிறது…மக்கள்
தொகையை கட்டுப்படுத்துவதின் மூலம் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், சுற்றுச்சூழலை
பாதுக்காக்கவும் முடியும்……..
வாதம்: எல்லா தேசங்களும்
சுற்றுச்சூழல் சார்பான சட்ட திட்டங்களை சற்று கடுமையாக பின்பற்றினால்,இந்த உலகம் நிச்சயமாக
இப்போது இருப்பதை இருப்பதை விட வாழ்வதற்கு தரமான ஒரு இடமாக மாறும் என்பதில் மாற்றுக்
கருத்து இல்லை……எனினும் சைனாவில் மிகப் பெரிய மாசடைவை உருவாக்கும் தொழிற்சாலையும் தொழிலும்
ஆன Capital Iron and steel works ஐ மூடினால் ஏறக்குறைய 40000 பேர் வேலையை இழக்கும்
அபாயம் இருக்கிறது.அதே போல் எல்லா தேசங்களிலும் சுற்றுச்சூழல் சட்டதிட்டங்கள் கடுமையாக
பின்பற்றப்படும் போது பொருளாதார முன்னேற்றதிற்கு ஒரு தடையாகவே இருக்கும் அதோடு அரசியல்
ஸ்திரதன்மையும் கேள்விக்குரியதாக ஆகிவிடும் அபாயமு உள்ளது…..
விவாதம்: எந்த தேசமாகயிருந்தாலும் தொழிற்சாலை மயமாகுதலால் பெற்ற ஆதாயத்தை விட இழப்புக்களே அதிகம்…குறிப்பாக
சைனா ஒரு சிறந்த உதாரணமாகும் இருபது வருட கட்டுப்பாடற்ற
பொருளாதார வளர்ச்சியால் கிடைத்த பலன் மிகவும் அபாயகரமான அதே நேரத்தில் காற்று மற்றும்
தண்ணீர் நாள்பட்ட மாசடைவிற்கு உட்பட்டுள்ளது.(Chronic pollution) .இதனால் ஆரோக்கிய
கேடுகளை உருவாக்கியுள்ளது,அதோடு பயிர்களின் சேதம் அல்லது இழப்பின் மூலம் ஆண்டுதோறும்
பல கோடிக்கணக்கில் பண இழப்புகளை விவசாயிகளுக்கு உருவாக்கியுள்ளது. இதன் மூலம் கட்டுப்பாடற்ற
வளர்ச்சி என்பது சுற்றுச்சூழல் கேடுகளை உருவாகுவதுடன், ஒரு பொருளாதார உணர்வுமில்லையன்பதே
தெரிய வருகிறது.
வாதம்:வேகமாக வளர்ந்து வரும் தொழிற்சாலை மயமாகுதல்
என்பது நினைப்பது போல் சுற்றுச்சூழல் மீது பெரும் அழுத்தத்தை தருவதாக இல்லை…ஏனெனில்
அறிவியலின் வளர்ச்சியினால் மாசு அடைவதை குறைக்கும் வண்ணம் பல்வேறு முறைகள் கையாளப்படுகின்றன.வளரும்
நாடுகள்,வளர்ந்த நாடுகள் தொழில்புரட்சி மூலமாக சுற்றுச்சூழல் குறித்து செய்து செய்த
தவறுகளிலிருந்தும் சைனா மற்றும் USSR ஆகிய நாடுகளில் நடந்த பேரிழப்புகள் மூலமும் கற்றுக்கொள்ள
முடியும்.மேலும் புதிய ஸ்டீல் வேலைகளில் குறைந்த அளவு தண்ணீர்,மூலப்பொருட்கள் மற்றும்
சக்தி பயன்படுத்துவதை புதிய அறிவியல் வளர்ச்சியாகவே கருதலாம். அதோடு பாரம்பரிய தொழிற்சாலைகளை
விட புதிய தொழில்நுட்பத்தின் மூலம் மாசு குறைக்கப்பட்டுள்ளது.அதே போல் நிலக்கரி மூலம்
தயாரிக்கப்படும் சக்தியை விட அணு உலைகள் மூலம் அதிக சக்தியை தயாரிக்க முடிகிறது அதோடு
உலக வெப்பமயகுதல் நிலக்கரியின் மூலம் சக்தி தயாரிக்கும் போது அதிகமாக இருக்கும்,அணு
சக்தி தயாரிக்கும் போது உலக வெப்ப மயமாகுதலில் இதன் பங்கு குறைவே…அதே போல் சூரிய சக்தி,
காற்றில் இருந்து,தண்ணீரில் இருந்து சக்தி எடுப்பது மூலம் புதுப்பிக்கத்தக்க சக்தியை பெறுகிறோம்..
விவாதம்:அறிவியலும்,தொழில் நுட்பமும்,மனிதனுக்கு
சுற்றுச்சூழலை கட்டுப்படுத்துவதில் ஒரு ஆளுமையையும்,தன்னம்பிக்கையையும் கொடுத்துள்ளது.இந்த்
அரை நூற்றாண்டுக்குள் உலகம் அணு சக்தியால் மூன்று மாபெரும் விபத்துக்களை சந்தித்துள்ளது.Wind
scale (UK,1957),Three mile Island (USA 1979) and Chernobyl (USSR 1986) அதே போல்
அணு உலைகளிலிருந்து வெளிவரும் கழிவுகளை இன்றைய தேதி வரை பாதுக்காப்பாக DISPOSE செய்யவோ
அல்லது சேர்த்து வைக்கவோ முடியவில்லை என்பதுதான் உண்மை,இவ்வகை கழிவுகளினால் மனித குலத்திற்கு
ஏற்படும் உடல் நலகுறைவுகள் நாட்பட்டதாக இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.அதே
மாதிரி நீரிலிருந்து மின்சாரம் எடுப்பதென்பது, தண்ணீரை அணைக் கொண்டு நிறுத்துவதென்பதும்
பெரும் அழிவுகளை உருவாக்க கூடியதே எடுத்துக்காட்டாக சைனாவில் கட்டப்பட்ட 3’Gorges அணை
கட்டும் போது பலர் இடம்பெயர்ந்ததும்.அவ்விடம் நல்ல மழை பெறக்கூடிய இடமாகும். ஆனால் அணை
கட்டிய பின் ஒரு வருடத்திற்கு மழையில்லை,திடீரென acute rainfall பெய்ததும் யாவரும்
அறிந்த ஒன்றே. இதனால் தட்ப வெட்ப சூழ்நிலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதும் கவனத்தில்
கொள்ள வேண்டும்.
வாதம்:வளரும் நாடுகளை,அல்லது ஏழ்மையுள்ள நாடுகளை
சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க சொல்வதும்,அதை பாதுக்காக்க சொல்வதும்
வளர்ந்த நாடுகளின் பாசங்குதன்மையைதான் பறைச் சாற்றுகிறது.ஏனெனில் தொழிற்சாலை மயமாகுதல்
என்ற பெயரில் மொத்த சுற்றுசூழலையும் அழித்து இன்று பொருளாதார வளர்ச்சியில் முதல் இடத்தில்
இருப்பவைகள் தாம் இந்த வளர்ந்த நாடுகள்.தன் நாட்டின் பல்லாயிர கணக்கான மரங்களை வெட்டி
வீழ்த்தி,தண்ணீரை மாசடைய செய்து,இந்த வளி மண்டலத்தில் டன் கணக்கில் கார்பனை அள்ளி தெளித்த
நாடுகள் தான் இன்று அறிவுரை கூறிக்கொண்டிருக்கிறது. அறிவுரை கூறும் தகுதி இல்லையனினும்,இந்த
நாடுகள் பொருளாதார ரீதியில் முன்னேறிய நாடுகளெ இன்று சுற்றுச்சூழலைப் பற்றி அக்கறையுடன்
இருக்கின்றன. அதற்கென ஏதாவது செலவழிக்கும் நிலையிலும் இருக்கின்றன.எனவே வளரும் நாடுகள்
பொருளாதார வளர்ச்சியுற்ற பின் சுற்றுச்சூழல் பற்றி சிந்திக்கலாம்அவகாசம் உள்ளது.
விவாதம்:நம் உலகின் உடையக்கூடிய கூட்டுத்தன்மையைபார்த்த
பின்னர், காலசூழல்களில் அல்லது தட்ப வெட்ப நிலைகளில் நிகழும் வெகுவான மாற்றம் என்பது
வளர்ந்த நாடுகளை மட்டுமல்ல,மொத்த புவிக் கோளையும் பாதிக்கக் கூடியது.இன்னும் சொல்லப்
போனால்,தட்ப வெட்ப மாற்றங்களால் கடல்மட்ட உயர்வு,பாலைவனங்கள் உருவாகுதல்,மற்றும் இயற்கை
பேரிடர்கள் போன்றவைகளால் வளரும் நாடுகளே அதிகமாக
பாதிக்கப் படுகிறது.சைனா மற்றும் இந்தியாவின் கட்டுப்பாடற்ற பொருளாதார வளர்ச்சியை கணக்கில்
கொள்ளாமல்,அய்ரோப்பாவில் மரம் வெட்டுவதை நிறுத்துவதால் எந்த பயனும் இல்லை. சொல்லப் போனால் இத்தகைய போக்கு சுற்றுச்சூழலின் அழிவைதான் அதிகமாக்கும். மாறாக,வளர்ந்த நாடுகள்,வளரும்
நாடுகளில் சுற்றுச்சூழலை பாதுக்காப்பு செய்ய பசுமை சார்ந்த தொழில் நுட்பங்களை வளரும்
நாடுகளுக்கு கடத்தலாம். மேலும் நீடித்த மற்றும் நிலைத்த நல்ல சுற்றுச்சூழலை உருவாக்க
பொருளாதார உதவி செய்யலாம்.
வாதம்:
பசுமை புரட்சியின் மூலம் இரண்டு மடங்கு தானிய மகசூலை அறுவடை செய்கிறோம்,அதனால் அதிகளவு
தானிய உற்பத்திக்காக காடுகளை அழித்து விளை நிலமாக ஆக்க வேண்டிய அவசியமில்லை. இன்றைய
உலகில் பெருகி வரும் மக்கள் தொகை அனைத்திற்கும் சுற்றுச்சூழலை அழிக்காமல் உணவளிக்க
கூடிய அறிவியலையும், அறிவையும் பெற்றுள்ளோம்.மேலும் வளரும் நாடுகளில் குறைந்த அளவு தண்ணீர்
மற்றும் உரங்கள்,பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தி அதிக மகசூலை பெறக்கூடிய மரப்பணு மாற்றம்
செய்யப்பட்ட பயிர் வகைகளை பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழலை அழிக்கமால் பொருளாதார
வளர்ச்சி அடைவதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
விவாதம்: பசுமை புரட்சி என்ற பெயரில் கலப்பின விதைகளை(hybrid
seeds) அறிமுகம் செய்து நாட்டு விதைகளை அழிவிற்கு கொண்டு வந்ததன் மூலம் மூன்றாம் உலக
நாடுகளின் பல்லுயிர் (அ) உயிரியற் பன்வகைமைகளை (biodiversirty) மிரட்டுவதாக உள்ளது.சுற்றுச்சூழல்
அல்லது பொருளாதார வளர்ச்சியில் நீண்ட கால பலனாக பசுமை புரட்சி என்ன செய்யும் எனத் தெரியவில்லை.எனினும்
குறைந்த கால பலனாக நாட்டு ரக விதைகளையும், தாவரங்களையும் அதை சார்ந்து வாழும் விலங்குகளையும்
அழித்துவிட்டது என்பது தெளிவாகவே தெரிகிறது. அதோடு கலப்பின விதைகளை பயன் படுத்தும் விவசாயிகள்
வருடா வருடம் விலையுர்ந்த விதைகளை வாங்க வேண்டியிருக்கிறது.ஏனெனில் நாட்டு விதைகளை
போன்று வருடம் முழுவதும் பாதுகாப்பாக சேமித்து எதிர்வரும் வருடத்திற்கு விதையாக பயன்படுத்த
முடியாது.எந்த பகுதிகளிலெல்லாம் இந்தியாவில் அதிகமாக கலப்பின விதைகளை பயன்படுத்தினார்களோ
அங்கெல்லாம்,விவாசாயிகள் திவாலாகிப் போனார்கள்.இதை தொடர்ந்து நல்ல வளமான நிலங்கள் எல்லாம்
உழப்படாமல் தரிசாகியும்,பாலைவனமாகவும்(desertification) மாறிவிட்டன.
நிற்க. இப்படி
நீண்ட நெடிய வாதங்களுக்கும் விவாதங்களுக்கும் உட்பட்டதே இந்த நடைமுறை பிரச்சனை.
”கண்ணை
விற்று சித்திரம் வாங்கிடில் கைக்கொட்டி சிரியாரோ”
என்ற பாடல் வரிகள் தான் நினைவுக்கு
வருகிறது. சுற்றுச்சூழல் ரீதியான அழிவை ஏற்படுத்தும் பொருளாதார வளர்ச்சியால் ஒரு சமத்துவமின்மைதான்
உருவாகிறது.”Survival of the fittest” என்ற டார்வினின் கருத்தே வலியுறுத்தப்படுகிறது……….
“மனிதனால் ஒரு நாளும் இயற்கையை வெல்ல முடியாது.”
கார் வேகத்தில் பொருளாதார வளர்ச்சியும்,நத்தை வேகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் நடைபெறும் வரை உலகத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியே....
நன்றி தோழமைகளே....வேறொரு செய்தியுடன் விரைவில் சந்திப்போம்.
-அன்புடன் லீலா.