நல்லமுடி பூஞ்சோலை...
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
நேற்றைய நாளை (23.4.23) இனிய நாளாக்கியது இயற்கையின் பெருங்கருணையின் கொடை...
எல்லோருக்கும் ஒரு வரமென்றால், ரகசியா எப்போதும் எனக்கு, கூடுதலாக ஒன்றை தருவாள்.
நேற்று காலை 11.00 மணிக்கு மேல்நீரார் அணைக்கு, பொள்ளாச்சியில் இருந்து கிளம்பினோம். வெயில் கடுமையாக இருந்தது, ஆழியார் அறிவுத் திருகோயிலை கடக்கும்போது, "சட்டென்று மாறுது வானிலை" என்று பாடத் தோன்றியது.
ஏற்கனவே பலமுறை பயணித்த பாதை என்பதால், க்ளைமேட்டை அனுபவித்துக் கொண்டு, பக்கவாட்டு காட்சிகளை கண்டு ரசித்துக்கொண்டு சென்றோம்.
என் பள்ளித்தோழியர்கள் ( Non-identical twins) அவர்களது அண்ணன், தங்கை, நால்வரும் அவர்களது குடும்பத்தாருடன் முதல் நாளே சோலையாருக்கு சென்று விட்டனர், எனக்கு வேறு பணிகள் இருந்ததால், மறுநாள் வருகிறேன் எனக் கூறிவிட்டேன்.
காலையில் அலைபேசியில், அண்ணன் பொறிஞர் பாஸ்கர் அவர்கள் பேச ( தோழியரின் அண்ணன், எனக்கு ஓராண்டுக்கு முன் சபாரத்னம் அய்யா அவர்களால் அறிமுகமானார்கள்) ஏதாவது ஓரிடத்தில் சந்திக்கலாம் என முடிவாயிற்று.
ஊமையாண்டி முடக்கிற்கும் முன்பே மழைச்சாரலிட தொடங்கிற்று. சீசனிலும் கிடைக்காத அற்புத க்ளைமேட், சூரியனின் ஒளியோ இது இரவா பகலா என பாடச் சொன்னது.
மெல்லிய சாரல், இதமான வெளிச்சம், அசைந்தாடி வரவேற்கும் பச்சை சேலையணிந்த மாதரசி மரங்கள்...
மலைராணி முந்தானை சரிய சரியன்னு, மலைமுகடுகளை மூடியும், நழுவியும் மிதந்த வெண்மேக கூட்டங்கள், பாடி பறந்து கிளையமரும் பறவைகள் என ஏக ரம்மியமான காட்சிகளை வாரி வழங்கி, கண்ணை வாங்கி கொண்டாள் ரகசியா...
பின்னிருக்கையில் தம்பியும், அம்முவும், முன்னிருக்கையில் ஓட்டுநர் ராஜூ மகிழ்வான மனநிலையில் ஒரு புன்னகையுடன் வாகனத்தை இயக்கிக் கொண்டிருந்தார்.
காட்சியின்பம் துய்க்காதோர் சொல்லின்பம் கொள்கின்றனரோ என எண்ணும் வகையில், யாரும் சலசலக்காது, அகமும், முகமும் மலர மௌனித்து, ரகசியாவின் அழகில் மயங்கி இருந்தனர்.
சொற்களுக்கும், மொழிகளுக்கும் மூத்தவள் அல்லவா ரகசியா ! எனினும் அவளே இளமையும், இனிமையும்.
இளமையின் ரகசியம்தான் சொக்க வைக்கிறது...
பாலாஜி கோயில் செல்லும் வழியாக சென்று மேல்நீரார் Tunnel exit ஐ அடைந்தோம், அங்குதான் தோழிகளின் குடும்பம் இருந்தார்கள்...
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை...
எல்லோரும் நல்லோராயின் பெய்யுமா பொழியுமா? ஆனந்த கூத்திட்டால் மழை மங்கை... நனைந்தாடிய செடிகள், தலை குளித்து வரும் மங்கையின் கூடுதல் எழிலென மிளிர்ந்தன...
தொடக்கப்பள்ளி கட்டிடம் ஒன்றில், கூடினோம் பள்ளித் தோழிகள், பொருத்தம்தானே.
- ஊர்க்காரர்களும் என்பதால் திருவாரூர் தேர்முதல் தெப்பம் அலசியும் ஓயவில்லை ஆனந்த நடனம், தொப்பலாய் நனைந்தபடி வண்டியேறி சின்னக் கல்லாறு மாரியம்மன்கோயில் கும்பாபிஷேகம், அணையில் இருப்பதால், செல்ல வேண்டும் என்பதால், தோழியர்களை கூழாங்கல் ஆற்றுக்கு செல்ல சொல்லிவிட்டு,கோயிலுக்கு சென்று அட்டென்டன்ஸ் போட்டுவிட்டு, சாப்பிட்டு விட்டு..
வால்பாறை வருவதற்கு முன்பே தோழிகளுக்கு அலைபேச...
நல்லமுடி பூஞ்சோலை செல்லலாம் என முடிவாயிற்று.
அதற்குள், மழை சற்று நின்றிருந்தது...
மழை நிக்கையிலே அந்த தேயிலை தோட்டத்திலேன்னு ஒரே ரகளை, எல்லோரும் கூலர்ஸை வண்டியில் வைத்துவிட்டு, மேலே ஏறிவிட, ஒரே ரகளை, ஒரே கூலர்ஸை மாற்றி மாற்றி போட்டு, அண்ணனின் உலகம் சுற்றும் வாலிபன் தொப்பியை வாண்டுகள் அபேஸ் செய்து மாற்றி மாற்றி போட்டு ஃபோட்டோ எடுக்க...
ரமா,சீதா,கீதா,அமிர்தா,மிருதுளா,அம்மு,நான், மதுரிமா ( குட்டி பாப்பா),பாஸ்கர் அண்ணனின் மனைவி, என பெண்கள் அனைவரும் போஸ் கொடுக்க,
அண்ணன் பாஸ்கர்,என் தம்பி துரை,சீதாவின் கணவர், ஓட்டுநர்கள், ராஜேஷ் என ஆண்கள் ஆளாளுக்கு புகைப்படம் எடுக்க...
மதுரிமா பாப்பாவின் மழலை சிரிப்பு மழையாகி மனதிற்குள் அடிக்க, எல்லோரும் குழந்தைகளாகி சிரித்து தீர்த்தோம்.
இன்ஜீனியரிங், இலக்கியம் என எந்த கனமும் இல்லாத கவலை மறந்து சிரித்தேன் என்றால் அது நேற்றைய பயணத்தில்தான்.
காரணம், பள்ளி நாட்களைப் போல் கிண்டலடித்து சிரித்து மகிழ்ந்தோம்.
மீண்டும், வண்டியிலேறி தேயிலைகளுக்கு இடையே பயணம், சோலையார் ( டேம் உள்ள ஊரல்ல) வழியாக நல்லமுடி வியூபாயிண்ட் நோக்கிய பயணம், அவ்வளவு பேரழகு...
எப்போதும் போல், நமக்கு மட்டும் காட்டுமாடு கன்று, செம்போத்து, சூளகாக்கா, செங்குதன், ஊமத்தம் பூ, இன்னும் சில பூக்கள் என கண்ணுக்கு விருந்தளிக்க க்ளிக்கி கொண்டேன்...
#தென்னிந்தியாவின்_எவரெஸ்ட்
🏔️🏔️🏔️🏔️🏔️🏔️🏔️🏔️🏔️🏔️🏔️🏔️🏔️🏔️
சொர்க்கத்தின் வாசற்படி...
பேரழகு, ஆனந்தம் பொங்க ஒரு தியான நிலையை எட்டியது மனம்...
ஒரு கிலோ மீட்டர் நடந்து சென்றோம், தற்சமயம் பாதை பாதுகாப்பாக இருந்தது...
2005 ல், நானும், அம்முவின் அப்பாவும் டூவிலரில் சென்றிருந்தோம், யாருமே இல்லை, பக்க கம்பிகள் ஏதுமற்று, ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு சைடாக நடந்து சென்றோம், அவ்வளவுதான் இடம் இருந்தது, விழுந்தால் 1000 அடி அதால பள்ளம், மழை வேறு வந்தது.
இப்போது, மிக பாதுகாப்பான பாதை, pitching செய்யப்பட்டுள்ளது. இரு மருங்கிலும் தேயிலை அரணாக வளர்ந்துள்ளது. நிறைய கானுயிர்களின் காலடித் தடம் பதிவாகி இருந்தது, மூன்று கிலோமீட்டர் தூரத்தில் இருந்த மரமொன்றில் Honey Buzzard பறந்து சென்று அமர்ந்தது தெளிவாக தெரிந்தது...
மெல்ல, மெள்ள காட்சிமுனையை வந்தடைந்தோம், எப்ப வேண்டுமெனிலும் வருவேன் என மழை மங்கை இடியை விட்டு மிரட்டிக் கொண்டிருந்தாள்.
நாங்கள் நின்ற இடம் சுமார் +4556 feet above Mean Sea Level.
கண்ட காட்சியோ கண்கொள்ளா காட்சி...
ஆம்! கண்ணெதிரே பரந்து விரிந்து +8230 feet above MSL உயரத்திற்கு உயர்ந்து நின்றது ஆனைமுடி சிகரம். மேற்கு தொடர்ச்சி மலையின் உயர்ந்த சிகரம்.
சிகரத்திற்கு வைர மாலை சூட்டியது போல் அருவிகள் அலங்கரித்தன... வெண்மேகம் காதல் கொண்டவரின் மனமென அலைபாய்ந்துக் கொண்டிருந்தன
கீழ்நீராறு +3350 அடி உயரத்திலிருந்து நீராறு தண்ணீர் விழுந்து பீமா ஆறாக மாறி இடமலையாறோடு கலக்கும் இடம்.
கண்ணுக்கு இனிமை, கருத்துக்கோ அலுவலக பணி ஒன்றுக்கான காண வேண்டிய இடமும், செய்தியும் கிடைத்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி. இடமலை ஆறே இரண்டு மாநிலத்திற்கும் இடையே எல்லையாக ஓடுகிறது.
1000 அடி பள்ளத்தில் 162 சதுர கிலோமீட்டர் பழங்குடியினரின் இருப்பிடமாக காடாக விரிந்திருக்கிறது.
முதுவர்களின் 28 பழங்குடியினர் செட்டில்மெண்ட் பெட்டிமுடி, மூணாறு, கேரளாவிற்கும், நல்லமுடி, வால்பாறை,தமிழ் நாட்டிற்கும் இடையே விரிந்திருக்கும் காட்டின் பொக்கிஷமான ஆதிகுடிகளின் ஊரின் பெயர் இடமலகுடி ( இரண்டு மலைகளுக்கு இடையே உள்ள குடி) கேரள மாநிலத்திற்கு ட் பட்ட இடமலகுடிதான், பஞ்சாயத்து கிராமமான முதல் பழங்குடியினர் ஊராகும்.
மழை இல்லாத நாட்களில் இடமலையாறை நடந்தே கடக்கிறார்கள், மழை நாட்களில் கவுச் ( கயிறு கட்டி அதன் மேல் நடந்து செல்வது) வழியே ஆற்றை கடக்கிறார்கள்.
அவர்களுக்கு வேண்டிய உணவு தானியங்களை, அவர்களே விவசாயம் செய்துக்கொள்கிறார்கள்.
சொந்தமாய் இரண்டு ஆறு, மழைக்காடு, இருவாட்சி, யானை, காட்டுமாடு என எண்ணற்ற உயிரினங்களோடு செல்வந்தராக வாழும் பழங்குடியினர் இருக்கும் திசையை தொழுதுக்கொண்டேன்.
மகளுக்கு, தம்பிக்கு, தோழமைகளுடன் தென்னிந்தியாவின் எவரெஸ்ட் காட்டியதில் பெரும் மகிழ்ச்சி. சொர்க்கமென்பது வேறில்லை, என் இனிய ரகசியாதான்...
இடி பெரிதாக முழங்கியதால் மழைக்கு முன் ஒரு கிலோ மீட்டர் மலை பாதையை கடந்து விடவேண்டுமென வேறுவழியின்றி திரும்பினோம்.
கேலி,கிண்டல், பொறுப்பான தகவல் பரிமாற்றங்கள் என மெள்ள திரும்பினோம். மீண்டும் பயணம், மிக மிக அழகான காட்சி, இனிய உறவுகளும், நட்பும், குளுமையான சூழல், மனதிற்கினிய பசுமை...
வழியில் தேநீர் பருகிவிட்டு கிளம்பும்போது, ரமா வேகமாக என் வண்டியருகே வந்து புத்தரேகுளு ஸ்வீட் பாக்ஸை கொடுத்து சென்றார்.
இதுவரை கேள்விபடாத ஸ்வீட், சாப்பிட்டுப் பார்த்தோம், சுவையாக இருந்தது. அப்புறமென்ன, கோடு போட்டால் ரோடு போட்டுடுவோமே... எப்படி செய்வது என தெரிஞ்சிக்கிட்டாச்சு.
பொள்ளாச்சியிலும் அதீத மழை, வீடு வரை மழை, வீட்டிலும் மழை... நல்ல க்ளைமேட்.
வேறென்ன வாழ்க்கையில் வேண்டும்... இதை அனுபவிக்க ஆசீர்வதிக்கப்பட்டிருப்பது போதாதா?
இயற்கையின் அழகோடு, கள்ளமில்லா உள்ளங்கள் இணைந்தால் பேரானந்தம்தானே...
அன்புடன்
-கோ.லீலா