Friday, 8 July 2022

காற்றே நீ கதவு திறந்தாய்...

 நிலம் தீ நீர் வளி விசும்போ டைந்தும்

கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
இருதிணை ஐம்பால் இயனெறி வழாமைத்
திரிவில் சொல்லொடு தழாஅல் வேண்டும்

என தொல்காப்பியம் கூறும் அய்ந்து பூதங்களும் கலந்தும் கரைந்தும் இருப்பதே உலகம்.

பூமியின் சமநிலைக்கு நிலம், நீர், தீ,காற்று,ஆகாயம் அய்ந்தும் முக்கியம். அதனதன் நிலையில் தூய்மையாகவும், நிலைகுலையாமலும் இருத்தல் அவசியம்.

மனித தலையீடால் நிலைகுலையும் இச்சுற்றுச்சூழலால் மனிதனுக்கு ஏற்படும் கேடுகள் எண்ணற்றவை.
நுனிகிளையில் அமர்ந்து அடிக்கிளை வெட்டும் அறிவாளிகளாக இந்த மனித சமூகம் மாறி வருகிறது என்பது துயர் தரும் செய்தி.

இயற்கையை போற்றி, அறிவியல்  அடிப்படையுடன் ஒவ்வொன்றையும் பேணி வளர்த்த நம் முன்னோர் சொல்லை மறந்து, நாகரிகம் என்ற பெயரில் இயற்கையை சீரழித்து, கலாச்சார பண்பாடு சீரழிவையும் உருவாக்கி விடுகிறோம்.

ஜூன் 15 உலகக் காற்று தினம்.
அதை முன்னிட்டு காற்று இந்த பூமியின் வாழ்விற்கு எவ்வளவு முக்கியம், நாம் அதை எப்படி பாதுகாக்கிறோம், எவ்வளவு மாசுப்படுத்துகிறோம், கூடவே சரி செய்யும் தீர்வுகளையும் சுருக்கமாக இக்கட்டுரையில் காண்போம்.

உருவிலாக் காற்றே
உயிர்தனை மீட்டும்
மூங்கிலில் நுழைந்து
இசையினை கூட்டும்
எங்கும் ஒலிக்கும் ஓசை
செவி கொண்டு சேர்க்கும்
நிலம் பூணும் நீராடை மீதே
துள்ளிக் குதித்தாடும்
குன்றினில் ஆடும் காற்றே
மன்றினில் பூவிதழ் திறக்கும்
தெண்டிரை தீண்டி
நாவாய் வழிநடத்தும்
காற்றே ! காற்றே !
உயர்ந்தவன் தாழ்ந்தவன்
பேதம் காணா சமரசவாதி நீயே!
தூசியால்
உன் மேனியில் வாட்டம்
உமிழ்ந்தவன் காண்பதோ
நோய்களின் தேட்டம்...
உன் தூய்மையின் மீதே
எங்கள் நாட்டம்...

இப்படி ஒவ்வொரு உயிரின் அசைவிற்கும் காரணமான காற்றை எவ்வளவு மாசுபடுத்தி இருக்கிறோம்...

இருசக்கர, மற்றும் நான்கு சக்கர வாகனத்தை அளவுக்கதிகமாக பயன்படுத்துவதன்‌ மூலம் கரியமில வாயுவை வெளியிடுகிறோம்... கரியமில வாயுவை உறிஞ்சிக்கொள்ளும் காட்டையும், கடலையும் அழித்தும், அசுத்தப்படுத்தியும் விட்டு... கரியமில வாயுவை தொடர்ந்து வெளியிடுவதன் மூலம் புவிவெப்பமடைதலோடு, சுவாசத்திற்கான காற்றும் மாசுபடுவதால் உயிர்களுக்கு ஏற்படும் நோய்கள் எண்ணிலாடங்காதவை.

காற்றின் மாசினால் ஏற்படும் காலநிலை மாற்றம், தரும் பின்விளைவுகள் மிக மோசமானவை. காற்றின் மாசை குறைத்தலென்பது, காலநிலை மாற்றத்தினை குறைத்து இயல்பு நிலைக்கு திருப்பும்.‌இதன் மூலம் பூமி குளுமையடையும்.

கறுப்பு கரியமில வாயு மற்றும் ஓசோன் ஆகியவற்றின் தாக்கமே புவி வெப்பமடையதலில் மிகப் பெரிய அளவில் இருக்கின்றன. பசுமை குடில் வாயுக்களின் வெளியீட்டையும் குறைக்க வேண்டியது இன்றைய காலத்தின் அவசியமாக இருக்கிறது.

சுவாசக்குழாய் நோய்கள், இருதய நோய்கள், நுரையீரல்‌ என பல்வேறு நோய்களை எங்கும் பரவலாக இந்த காற்று மாசு ஏற்படுத்துகிறது.

காற்றின் மாசுக்கு எல்லை கிடையாது. எல்லோரையும் பாதிக்கிறது, எனினும் எல்லோரிடத்திலும் ஒரே மாதிரியான நோயை அல்லது பாதிப்பை தருவதில்லை.

பெண்கள், குழந்தைகள், ஆண்கள், முதியவர்கள் என ஒவ்வொரு இனவாரியாக, தனிமனித உடல் சக்திகேற்ப நோய்கள் உருவாகின்றன.

பல  அனல் மின்நிலையங்கள், நிலக்கரி மின்நிலையங்கள், பெருமளவில் கழிவுகளை வெளியேற்றும் தொழிற்சாலைகளும் எளிய மக்களின் வாழ்விடங்களிலேயே நிறுவப்படுகின்றன. இதை ஆங்கிலத்தில் "Red Lining" என்ற ஒரு பெயரே சூட்டியிருக்கின்றனர்.

மூன்றாம் உலக நாடுகள்‌தான் இதற்கு முதலில் பலியாகும் இடத்தில் உள்ளன. அதுவும் தென்னப்பிரிக்காவின்
ஹைவெல்ட்’ காற்று மாசு வழக்கு
யாவரும் அறிந்த ஒன்றே.

தென்னப்பிரிக்காவில் எளிய மக்களின் வாழ்விடங்களின்(மேபுமலங்கா மற்றும்‌ கவுடெங்) அருகே சுமார்  தனியாருக்கு சொந்தமான பன்னிரண்டு அனல் மற்றும் நிலக்கரி மின்நிலையங்கள்
நாள் ஒன்றிற்கு ஆயிரம் டன் கணக்கில் சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, கார்பன், சாம்பல், நுண்துகள்கள் என ஒரே இடத்தில் கழிவுகள் வெளியேற்றப்பட்ட காற்றின் நிலை மிக மோசமாகியது.

ஹைவெல்ட் பகுதியில் வருடத்திற்கு சுமார் 4500 பேர் இறக்க காரணமாக இருந்த இத்தொழிற்சாலைகளின் மீது
வுகானி சுற்றுச்சூழல் நீதிக்கான இயக்கம் (Vukani Environmental Justice Movement) மற்றும் சூழலியல் உரிமைக்கான அமைப்பும்  (Centre for Environmental Rights) 2019 ல் வழக்கை தொடர்ந்தது...

12_வருட போராட்டத்திற்கு பின் ஹைவெல்ட் தீர்ப்பு உலகெங்கும் காற்று மாசுக்கு எதிராகப் போராடும் மக்களுக்குக் கிடைத்த வெற்றியாக சிறப்பான தீர்ப்பாக இருந்தது.

தென் ஆப்பிரிக்க அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 24(a) (right to an environment that is not harmful to their health and well-being) ல் ஆரோக்யமான சூழல் அடிப்படை உரிமை என்று இருப்பது போல்...

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திலும் பிரிவு 21-ன் கீழ் (Right to healthy environment is Right to life) ஆரோக்கியமான சுற்றுச்சூழல் என்பது மனிதனின் அடிப்படை உயிர் வாழும் உரிமை என்று குறிபிடப்பட்டுள்ளது. இதை போன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்புகளின் அடிப்படையில் ஒவ்வொரு நாடும் காற்றின் மாசை கட்டுப்படுத்த, சுற்றுச்சூழலை பாதுகாக்க முன்வரவேண்டும்.

கடந்த சில மாதங்களுக்கு முன் அதீத காற்று மாசினால் டெல்லி, ஹரியான போன்ற இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது ம், முகக்கவசம் அணிந்து மக்கள் இருந்ததும், இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டதும் யாவரும் அறிந்ததே.

இத்தகைய கடுமையான காற்று மாசினை குறைக்க...

கரியமில வாயு தடம் ( Carbon foot Print) குறைக்க, தொழிற் நிறுவனங்களுக்கு, மாசுக்கட்டுபாடு வாரியம் கடுமையான விதிகளை விதிக்கவும். குறிப்பிட்ட காலத்தில் கழிவுகள், மாசுகள் போன்றவற்றை கணித்து அதை சரிசெய்வதற்கான வழிவகைகளை கூறுதல் வேண்டும். தவறும் நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்திடவும் வழிவகை காண வேண்டியது அவசியமாகிறது.

அனல் மற்றும் நிலக்கரி மின்நிலையங்களுக்கு மாற்றாக காற்றாலைகளிலிருந்து சக்தியை ( Wind energy) பெறவும் அவற்றை Grid ல் சேமிக்கவும் செய்ய வேண்டும்.

காற்றாலைகளின் மூலம், தண்ணீரை பம்ப் செய்தல், போக்குவரத்திற்கு பயன்படுத்தல் (கப்பலை இயக்குதல்), மின்சாரம் தயாரித்தல், உணவு தயாரித்தல், காற்று விளையாட்டுகள் ஆகியவற்றை மேற்கொள்ள முடியும்.

Car Pooling என்பது ஒரே அலுவலகம், பள்ளி என ஒரே இடத்திற்கு செல்ல அருகருகே இருப்பவர்கள் ஆளுக்கொரு காரை பயன்படுத்தாமல் நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒன்றோ இரண்டோ கார்களை மட்டும் பயன்படுத்துதல் ஆகும். ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொருவரின் கார் என சுழற்சி முறையில் பயன்படுத்துவதன் மூலம் அதீத பயன்பாட்டு குறைவால் கரியமில வாயு உமிழ்வு குறையும்.

மின்சாரத்தை குறைவாக பயன்படுத்துதல்.

இராசயனப் பொருட்களை முற்றிலும் தவிர்த்தல்

பீரங்கி மற்றும் வெடிப்பொருட்களால் ஏற்படும் புகையினை கட்டுப்படுத்துதல்

போன்றவை பெரிதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை.

காலநிலை மாற்றமும் காற்று மாசும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள்.‌இவை இரண்டின் மீதும் செலுத்தப்படும் கவனம் பூமிக்கும், மனிதர்களுக்கும் ஏற்படும் துயரை துடைக்கும்.

புவிவெப்பமயமாதலால் கடலின் நீர்மட்டம் உயர்தல், கடல் நீரின் ஊடுருவல்,ஆகியவையும் நிகழ்வதால் ஏற்படும் இழப்புகள் ஏராளம். கடல் சூடானதால் எல் நினோ லாநினோ போன்ற காலநிலை மாற்றத்தால் அதீத மழையும், வறட்சியும் உணவுப் பற்றாக்குறையை உருவாக்குகின்றன.

கடலின் சூழல் மாறுவதால் உயிர் சங்கிலி பாதிப்படுவதும் சுற்றுச்சூழலை வெகுவாக பாதிக்கும். ஒன்றோடு ஒன்று பிணைந்ததே இந்த உலகம்
பூமியின் சமநிலைக்கு நிலம், நீர், தீ,காற்று,ஆகாயம் அய்ந்தும் முக்கியம்.

நிலவகைக்கு ஏற்ற மரங்களை நடுவதன் மூலம் கரியமில வாயுவை உறிஞ்சவும் சுத்தமான ஆக்ஸிஜனை பெறவும், பூமியை குளுமையாக்கவும் முடியும்.

ஒரு நாளைக்கு நாம்  மூச்சின் வழியே வெளியிடும் கார்பன்-டை- ஆக்ஸைடை உறிஞ்ச சுமார் 15 மரங்கள் தேவை.

ஒரு மரம் ஆண்டுக்கு 118 கிலோ ஆக்சிஜனை வெளியிடுகிறது. ஒரு ஏக்கரில் உள்ள மரங்களில் இருந்து, ஓராண்டிற்கு கிடைக்கும் ஆக்சிஜன் 18 மனிதர்களின் ஆயுள் முழுவதும் சுவாசிக்க உதவுகிறது. 2.6 டன் கார்பன் டை ஆக்சைடை காற்றிலிருந்து உறிஞ்சிக் கொள்கின்றன.

நிழல் தரும் ஒரு மரம், வெயில் காலத்தில் 20 டிகிரி அளவிற்கு வெயிலின் தாக்கத்தைக் குறைக்கும்.

பூமிக்கு பச்சை பொன்னாடை போர்த்துவதன் மூலம் காற்றின் மாசை குறைத்து மகிழ்வுடன் வாழலாம். நம் சந்ததியினருக்கான சொத்து தூய்மையான காற்றும், நீரும், சோறும்‌ கிடைக்கும் பூமிதான் என்பதை உணர்வோம்.

தூய பூமியை கையளிப்போம் !

அன்புடன்

-கோ.லீலா.