Saturday, 8 September 2018

ஹுகோ வுட்ஸ்….



வணக்கம் தோழமைகளே!
 பத்து வருடமாக அடிக்கடி அலுவலக பணி மற்றும் சுற்றுலா என பலமுறை சென்று வந்த இடமான பரம்பிக்குளம் பற்றிதான் இன்று பேச போகிறோம்.ஆனால் தெரியாத கதை ஒன்றை சொல்ல போகிறேன்.
சரி வாங்க சீக்கிரம் ஜீப்ல ஏறுங்க,சீக்கிரமா போனாதான், அலுவலக பணிகளை முடித்து விட்டு,ஒரு இடத்திற்கு போக போகிறோம் வாங்க வாங்க..
தீனி, பழங்கள்,தண்ணீர்,முதலுதவி பெட்டி எல்லாம் எடுத்து வச்சாச்சா?காமிரா எடுத்துக்கோங்க….
சரி கதையை சொல்லுங்க மேடம்…
சொல்றேன்,கேட்டுகிட்டே போகலாம்,பின் அந்த இடத்திற்கு போகலாம்.
ஆனைமலை இன்றும் பச்சை மரகதமென ஒளிர காரணமான,அதிகமாய் யாரும் அறிந்திராத மனிதர் ஸ்காட்லேண்ட் மனிதர் தான் ஹூகோ வுட்ஸ்.
இதோ இதுவரை சொல்லப்படாத வன அதிகாரி ஹூகோ வுட்ஸ் எப்படி இருண்ட எதிர்காலத்தை நோக்கி மரங்களற்று கிடந்த ஆனைமலையை காப்பாற்றினார் என்பதை பற்றிதான் சொல்ல போறேன்…

1820ல் பிரிட்டிஷ் சர்வேயர்கள் ஒரு குழுவாக,துணிந்து அந்நாள் வரை முழுதுமாக கண்டறியப்படாத ஆனைமலையை நோக்கி பயணித்த அவர்களுக்கு மகிழ்ச்சியான ஆச்சரியம்  அடர்த்தியாகவும் பசுமையாகவும் உயர்ந்து வளர்ந்த தேக்கு மற்றும் ரோஸ்வுட் மரங்கள் நிறைந்த வனப் பகுதியாக காத்திருந்தது.
பரம்பிக்குளம் காடு.

ஆகா நம்மள மாதிரி அவங்களும் சந்தோசமா ஆயிட்டாங்களா? ஆமாம் ஆனால் நம்மை மாதிரியில்ல..

அந்நாளில் பிரிட்டனின் பல்வேறு தொழிற்சாலைகளின் முதுகெலும்பாக மரங்கள் இருந்தன,ஆனால் அப்போது பிரிட்டனில் ஓக் மரங்கள் யாவும் அழிந்திருந்தன,ஆனால் பிரிட்டனுக்கோ,காலனித்துவ அதிகாரத்திற்கிடையே தன்னுடைய கடற்படை மேலாதிக்கத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டியிருந்ததால்,பிரிட்டனுக்கு புது கப்பல்களை கட்டமைக்க மிக அதிகமாகவும்,அவசியமாகவும் மரங்கள் தேவையாயிருந்தது..


கப்பல் கட்டமைக்கும் பணியை தவிர,பிரிட்டனில் விரைவாக வளர்ந்து வந்த ரயில்வே நெட்வொர்கை விரிவுப்படுத்தவும் அவர்களுக்கு மரம் மிக தேவையாக இருந்தது அதாவது ஒரு மைல் தூர ரயில் பாதைக்கு 2000 மரப் பலகைகளும், (Wooden planks) ,ரயில்களை இயக்க நீராவி  உருவாக்க எரிப்பொருளாகவும் மரங்கள் தேவையாக இருந்தது.
           
இந்நிலையில் அடர்வனத்தைக்  கண்ட பிரிட்டன் சர்வேயர்களுக்கு தான் கண்டுபிடித்த “புதையலின்” மதிப்பு என்னவென்று புரிய ஆரம்பித்தது…
அச்சோச்சோ மேடம்,இப்போதான் நீங்க சொன்னது புரியுது வேற மாதிரி சந்தோசம்.

ஆமாம் சரியா சொன்னீங்க! சரி கதைக்கு வருவோம் அடர் வனத்தை பார்த்தாங்க அவ்வளவுதான்..விடுவாங்களா… 

உடனே கொஞ்ச காலத்திலேயே அவ்வனத்தை கொள்ளையடிக்க ஆரம்பித்தனர்… அடர்ந்த பசும்வனம் காணமால் போனது. ரயில் பாதைகள் அமைக்க தேக்கு வெட்டு மரங்களை திருச்சிராப்பள்ளிக்கும்
கப்பல்களை கட்டமைக்க பாம்பே (மும்பை) விற்கும் வெட்டு மரங்களை அனுப்பினர்….


                       
எப்படி மேடம்,இந்த மலையிலிருந்து அனுப்பினார்கள்,இப்போவே பஸ் மட்டும் தானே இருக்கு…

சொல்றேன்,அதோடு ஊரும் பேரும் மாதிரி ஒரு கதையும் இருக்கு.
,மரங்கள் மிகப் பெரிய அளவில் இருந்ததால்,பெரிய மரங்களை துண்டாக்கி குறிப்பிட்ட தூரம் வரை யானையை கொண்டு தூக்கி வர செய்தனர். 

பின் அங்கிருந்து ஆற்றில் மரங்களை உருட்டி விட்டு கீழே சமவெளியை சென்றடைய செய்து அங்கிருந்து வேண்டிய ஊர்களுக்கு அனுப்பினர்.
எங்கிருந்து உருட்டி விட்டனரோ,அந்த இடத்திற்கு “டாப் ஸ்லிப்” என பெயர் வந்தது.

மதராஸ் மகாணத்தில் வனத்துறையை சார்ந்த டைட்ரிச் ப்ராண்டிஸ்(1883)
ன்படி, மதராஸ் மகாணத்தின் அரசு வனத்திலிருந்து வருடத்திற்கு 40,000
மரங்கள் ரயில்வே விற்காக மட்டும் வெட்டப்பட்டது என தெரியவருகிறது.
இப்படி அதீதமாக அழிக்கப்பட்டது.அதாவது 1885 ல் மரங்களற்ற பாலைவனமாயிற்று.அடுத்த முப்பதாண்டுகளுக்கு பிரிட்டிஷ் வனத் துறையினர்,மீண்டும் ஆனைமலை வனத்திற்கு புத்துயிர் ஊட்ட முயற்சித்தும் பலனிக்கவில்லை…அப்போது தான் டொண்டோடையிங்க்..

என்ன மேடம் ம்யூசிக்கெல்லம் தர்றீங்க..

  நம்ம ஹீரோ  வரார்பா அதான் ம்யூஸிக்...

1870 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ம் நாள்,பாம்பே மகாணத்தில் உள்ள பைகூள்ள(BYCULLA) வில் எலிசபெத் மரியா லூயிசா மற்றும் தாமஸ் வில்லியம் வுட்ஸ் தம்பதியர் வீட்டில் இரண்டாவது முறையாக குவா,குவா சத்தம் கேட்குது…முதல் குழந்தை இரண்டாவது முறை அழவில்லை…J

இரண்டாவது குழந்தை முதல் முறையா அழுதது…அந்த குழந்தை தான் நம்ம ஹீரோ ஹுகோ ஃப்ரான்ஸிஸ் ஆன்ட்ரூ வுட்.  கூப்பர் ஹில்(COOPER HILL) உள்ள ராயல் இந்தியன் பொறியியல் கல்லூரியில் 1890-93 வரைக்கும் படிச்சிருக்கார்.

அட நம்ம இனம் இஞ்ஜினியர்…சொல்லுங்க மேம்… கதை சுவாரஸ்யமா இருக்கே…

மேடம் ஹீரோன்னா ஹீரோயின் இருப்பாங்களே….

ஆகா! இதென்ன காதல் கதையா? மரங்களை பார்த்தவுடன் அதை சுற்றிப் பாட்டுபாட ஹீரோ,ஹீரோயின் எல்லாம் வர. பிற்காலத்தில் பல படங்களில் ஹீரோ ஹீரோயின் ஆட மரங்களை,வனத்தை உருவாக்கியவர் கதை,அவர் திருமணமே செய்துக் கொள்ளவில்லை. சரி,முக்கிய கதைக்கு வருவோம்.

1893ல் இந்தியாவிற்கு திரும்புகிறார். INDIAN PUBLIC SERVICE தேர்வில் வெற்றிப் பெற்று வன இலாகவில் பணியேற்றார்.ராஜஸ்தானில்அழிந்து போன அஜ்மீர் காடுகளை மீண்டும் உருவாகினார்.காடுகளை புனரமைப்பதில் ஹூகோவிற்கு இருந்த திறமையை கண்ட பிரிட்டானியர்,அவரை மதராஸ் மகாணத்திலுள்ள கோதாவரி மற்றும் கர்னூல் பகுதிக்கு அவரை அனுப்பினர்,அங்கு உதவி வனப்பாதுகாப்பாளர், மற்றும் துணை வனப்பாதுகாப்பாளர், என பல்வேறு பதவிகளில் இருந்து பணியாற்றினார்.

1915 ல் அஜ்மீரில் செய்த அதே பணியை ஆனைமலை சரகத்தில் செய்ய பிரிட்டானிய அரசு ஹூகோவை கேட்டுக்கொண்டது.

1915ல் தென்மேற்கு பருவ மழை முடிந்து சற்றே  சூரியக்கதிர்கள் மரங்களை தேடி ஓய்ந்து சோம்பல் முறித்துக் கொண்டு இருந்த செப்டம்பர் மாதத்தில்,கோயம்புத்தூர் தென் கோட்ட(southern division) வன அதிகாரியாக பணியேற்கிறார்

.முதலில் ஆனைமலை வனத்தை அழிப்பதை ஒரு முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டார்,பின்னர் வனத்தை திரும்பவும் உயிர்ப்பிக்க திட்டம் ஒன்றை தீட்டினார்.

45 வயது நிரம்பிய ஸ்காட்லேண்ட் மனிதரான ஹுகோ, ,உள்ளூரிலிருந்த காலனித்துவ அதிகாரத்திலிருந்தவர்களிடம்,அங்குள்ள வனவிலங்குகளை வேட்டையாடமல் இருக்கவும்,மரங்களை வெட்டி வீழ்த்தாமல் இருக்கவும் தன்மையாக பேசி சம்மதிக்க வைத்தார்.

அதே நேரத்தில் காடுகளில் வாழ்ந்த பழங்குடியினருடன் நட்புறவுடன் பழகி நட்பாக்கி கொண்டார்,அதோடு நிற்காமல்,பிரிட்டிஷ் ஆனைமலையை பாதுக்காக்கப்பட்ட பகுதியாக அறிவித்ததால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் அவர்களுக்கான பராம்பரிய உரிமையை மீட்டுக்கொடுத்து அங்கே குடியமர்த்தினார்.

பிறகு பிரிட்டன் அரசிடம்,கடுமையாகவும் அதே நேரத்தில் புத்திசாலி தனத்துடனும் ஒரு எச்சரிக்கையை விடுத்தார்,அந்த எச்சரிக்கையில் வேரோடு மரங்களை வெட்டக்கூடாது(uprooting) என்பதோடு வனமேலாண்மையான, coppicing அதாவது வெட்டப்பட்ட முளைகளுள்ள குறுங்காடு குறித்த தொழில்நுட்பக் குறிப்பையும்,கொடுத்திருந்தார்.
மேடம் coppicing  பற்றி சொல்லுங்க…

சொல்றேன் அதாவது மரங்களை வேரோடு வெட்டாமல்,குளிர் காலத்தில் மரத்தின் அடிக்கட்டைகளை  ஒரு குறிப்பிட்ட உயரம் விட்டு வெட்டினால், வசந்தக்காலத்தில் வேகமாக மீண்டும் வளரும் என்பது தான் அந்த திட்டம்.

இறுதியாக,வரும் 25 வருடங்களுக்கு மரங்களை வேரோடு வெட்டுதல் மற்றும் coppicing செய்யக்கூடாத இடங்களை தேர்வு செய்து குறியிட்டார். முதல் உலகப் போரின் போது (1914-1918),பிரிட்டிஷ்க்கு மரங்கள் தர மறுத்துவிட்டார் என்பதே அவருடைய பணி அர்ப்பணிப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டு கூறலாம்….

1916ல் டாப் ஸ்லிப் அருகிலுள்ள மவுண்ட் ஸ்டார்ட்(Mount Stuart) ல் மூங்கிலால் ஆன ஒரு குடிலை கட்டினார்.அதில் தங்கி ஊக்கத்துடன் ஆனைமலை வனத்தை மீண்டும் உருவாக்கினார்.அப்போது அவர்  25 ஏக்கரை சரி செய்ய திட்டமிட்டு பணியாற்றினார்,ஆனால் அவர் இறக்கும் தருவாயில் 650 சதுர கிலோமீட்டருக்கு அந்த வனம் பரந்து விரிந்திருந்தது.
சரி மேடம் எப்படி தேக்கு மரங்களை நட்டார்?



ஹூகூம்,நடவில்லை,தேக்கு விதைகளை விதைத்தார். ஆனைமலையில் 1918ல் வனப்பாதுகாப்பாளராக பதவி உயர்வு பெற்றார்.

 அங்கே பாருங்க இருவாட்சி.....

            

அவர் தனியாக தான் வாழ்ந்தார்,அவருக்கான உணவை அவரே சமைத்துக் கொண்டார்,தினசரி வாழ்விற்கென சில பழக்கங்களை வைத்திருந்தார் அதிலிருந்து அவர் ஒருநாளும் தவறவில்லை,தினசரி தன்னுடைய pant பாக்கெட் நிறைய தேக்கு விதைகளை நிரப்பிக் கொண்டு,காடு அழிக்கப்பட்ட பகுதியில் நடந்து சென்று தன் வெள்ளி பூண் போடப்பட்டிருந்த தன் கைத்தடியின் நுனியால் குழியிட்டு அதில் விதைகளை விதைப்பதை தன் பணியாக கொண்டிருந்தார்,அப்படி விதைகள் தீர்ந்த பின்னர்,மீண்டும் சென்று பாக்கெட்டில் விதைகளை நிரப்பிக்கொண்டு நடக்க தொடங்குவார்,இதை தொடர்ந்து செய்தார்.அவர் நடந்த பாதைகள் சமவெளியல்ல,கரடுமுரடான மலைப்பாதை.அவருடைய முயற்சி பெறும் வெற்றிப் பெற்றது.

ஆனைமலை மீண்டும் புது வாழ்வை சுவாசிக்க ஆரம்பித்தது.
1925ல் காசநோயின் அதீத பாதிப்பால், 1926 ல் பணியிலிருந்து ஓய்வு பெற்று குன்னூரில் வாழ்ந்ததாக வனத்துறையின் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

இறுதி வரை திருமணம் செய்துக் கொள்ளாமலிருந்து வனத்தை பாதுக்காக்க தன் வாழ்வை அர்ப்பணித்தவர்,1933 ஆம் ஆண்டு டிசம்பர் 12ம் நாள் தன்னுடைய 63 வது வயதில் உயிர்நீத்தார்.

மிகவும் உடல்நலன் பாதிக்கப்பட்டிருந்த ஹூகோ,தன்னுடைய உள்ளுணர்வால் விரைவில் தான் மரிக்கப் போவதை உணர்ந்தவர்,தான் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பாக கடிதம் ஒன்றை எழுதினார்,அதில் தான் வளர்த்த தேக்கு மரங்களுக்கிடையே தன்னை புதைக்கும்படி தன் விருப்பத்தை தெரிவித்து இருந்தார்.தன்னுடைய இறுதி சடங்கிற்கு செல்வாகும் பணத்தை,சென்னை மகாணத்தின் முதன்மை வன பாதுகாவலருக்கு (chief forest conservator) அனுப்பி வைத்திருந்தார்.
சரி. டாப் ஸ்லிப் வந்தாச்சு,இங்கே தமிழக வனத்துறையின் அனுமதி வாங்கி வருகிறேன்…
டாப் ஸ்லிப் வனத்துறை ரிசப்ஷன்.
வாங்க, அனுமதி கொடுத்தாச்சு கூடவே Anti poaching watcher ஆனந்த் கூட வர்றார்.அவருக்கு சீட் கொடுங்க.

எவ்வளவு தூரம் போகணும் ஆனந்த்...

பத்து நிமிசம் மேடம்,ஆனைப்பாடி செக்போஸ்ட் தான்.

அட அதுக்குள்ள வந்துட்டோமே,இறங்குங்க….நடந்துதான் போகணும்,கொஞ்சம் வனப்பகுதி,பார்த்து வாங்க..

தண்ணீரும்,பழம்,காமிரா மட்டும் போதும் வாங்க…

ஆனந்த் இது எந்த சரகத்தில் வருது..

கரியான் சோலைக் காடு
கரியான் சோலைக் காடு
கரியான்சோலை தேசிய பூங்கா மேடம்,ஆனா பூங்கா ன்னா இது காடு மேம்.
வழுக்கும் பாத்து வாங்க.
ஆனைப்பாடி சிற்றணை.

அட,ஆனைப்பாடி சிற்றணை தண்ணி இங்கே வருதா…
              
ஒரு வழியா வந்தாச்சு..
ஹூகோ அவர்களின் சமாதியில் Anti poaching watcher ஆனந்த் உடன்.
                                               
The inscription on the tomb reads “Si monumentum requiris circumspice”, Latin for “If you are looking for my monuments, look around”.

காற்று காலங்களில் மரங்களை விடுத்து விழும் இலைகள் காற்றில் தவழ்ந்து மெல்ல ஹூகோவின் சமாதியை முத்தமிடுவது,மரங்கள் தன் அஞ்சலியை தெரிவிப்பதாக தோன்றுகிறது.
HUGO WOODS TOMB

சரி பாத்து இறங்குங்க… ஆனந்தை அவர் ஆபிஸ்ல விட்டுட்டு வாங்க…
ஜீப் வரும் வரை இப்படி உட்காருவோம்..பழம் சாப்பிடுங்க…
இன்ன்னும் ஒரு மணி நேரம் நேரம் ஆகும் மதிய உணவிற்கு…ஜீப் வந்தாச்சு..
தூணக்கடவில் நிறுத்தி நீரளவு பார்க்கலாம் போங்க….
பரம்பிக்குளம் வந்தாச்சு மேம்,சரி IB க்கு போவோம்,ஓய்வுக்கு பின் அணைக்கு போவோம்.

பரம்பிக்குளம் அணை
அமைதியா கொஞ்சம் இந்த இயற்கையோடு அமர்வோம்..
பரம்பிக்குளம் அணை முழுக்கொள்ளளவில் கண்கொள்ளா காட்சியாயிருக்கு மேம்…

ஆமாம்,சரி கணக்குகள் சரியாயிருக்கா?

சரிபார்த்தாயிற்று வேறென்ன கிளம்புவோம்.கொஞ்சம் பூக்களோடு பொள்ளாச்சி நோக்கி பயணிக்கிறோம்…
வேறொரு நாள் வேறொரு செய்தியோடு சந்திக்கலாம் தோழமைகளே..

அன்புடன் கோ.லீலா.